ரூ.500 கட்டணமின்றி உறுப்பினராக சேரலாம்..!
தமிழகத்தில் வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்பவர்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அரசு பொதுத் தேர்வில் முதல் இடங்களை பெறும் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ஊக்கத் தொகை, விளையாட்டு போட்டியில் வெற்றி பெறும் குழந்தைகளுக்கு ஊக்கத் தொகை, கல்வி உதவித் தொகை, மருத்துவ சிகிக்சை உதவித் தொகை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
வணிகர்நல வாரியம் சிறப்பாக செயல்பட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா ஊரடங்கால் வணிகர்களின் நிலையினை கருத்தில் கொண்டு, ஆண்டு விற்பனை தொகை ரூ.40 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்கள், வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கு செலுத்த வேண்டிய ரூ.500 செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து, அக்டோபர் 14ம் தேதி வரை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
மாநிலம் முழுவதும் வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. வணிகர்கள் www.tn.gov.in/tntwb என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வணிகர் நல வாரியத்தில் இணையும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாவட்டம் வாரியாக திருச்சி வணிக வரி மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த 10 நாட்களில் 1752 பேர் வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.