குறைந்த முதலீட்டிலும் ஷேர்மார்க்கெட்டில் பணம் பண்ணலாம்
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்வதைப் போல, இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் இந்தியர்கள் சிலருக்கு, வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய ஆர்வம் இருக்கும்.
செபியில் பதிந்துள்ள, மியூச்சுவல் ஃபண்ட்களை வழங்கும் இந்திய நிறுவனங்கள் 7 மில்லியன் அமெரிக்க டாலர் வரம்பிற்குள் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
எனவே செபியில் பதிவு செய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலமாக வெளிநாட்டில் முதலீடு செய்யலாம். இடர்பாட்டு அடிப்படையை பொறுத்து, முதலீடு செய்ய பல்வேறு முதலீட்டு தேர்வுகள் உள்ளன.
* அங்கீகாரம் பெற்றுள்ள வெளிநாட்டு பங்குச்சந்தைகளில், பட்டியலிடப்பட்ட வெளி நாட்டு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யலாம்.
* முதலீட்டு தரத்திற்கு குறைவில்லாத மதிப்பீட்டை கொண்ட, குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
* முதலீட்டு தரத்திற்கு குறைவில்லாத பணச் சந்தையில் முதலீடு செய்யலாம்.
* அரசு பத்திர முதலீட்டிற்கு அதிக பாதுகாப்பு கிடைக்கும் என்பதால், பிற நாட்டு அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்யலாம்,
* வெளிநாட்டு வங்கிகளின் குறைந்த கால முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
* வெளிநாட்டு மியூச்சுவல் ஃபண்ட்கள் அல்லது யூனிட் ட்ரஸ்ட்கள் வெளியிட்டுள்ள பங்குகளில் முதலீடு செய்யலாம்.
பங்குச் சந்தை பற்றி போதிய ஞானம் இல்லாதவர்களும், அறிந்து கொள்ள விருப்பமில்லாதவர்களும், முதலீடு செய்ய விரும்பினால் அவர்களுக்கு உகந்தவை இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்டுகளே.
நிலம், வீடு, தங்கம், வெள்ளி, பிக்ஸட் டெபாஸிட், பாண்டுகள் இவற்றில் கூட முதலீடு செய்யலாம். ஆனால் குறைந்த அளவே பணம் உள்ளவர்களுக்கு மியூச்சுவல் ஃபண்டுகளே ஏற்றவை. ஆயிரம் ரூபாய் இருந்தால் கூட மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். நீங்கள் போட்ட ஆயிரம் ரூபாய் எங்கெங்கு என்ன சதவிகிதத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதை எப்பொழுது வேண்டுமானாலும் கம்ப்யூட்டரை தட்டினால் தெரிந்து கொள்ளலாம் என்பது இதிலுள்ள சிறப்பம்சம்.
பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீடு செய்து 12 மாதங்களுக்கு மேல் வைத்திருந்தால், வரும் லாபத்திற்கு வருமான வரி விலக்கு பெறலாம். சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், மாதா மாதம் முதலீடு செய்பவர்களுக்கு இலவச ஆயுள் காப்பீட்டை வழங்கி வருவது குறிப்பிடத் தக்கது.
கடன் மற்றும் கலப்பினம் சார்ந்த திட்டங்களை விட, பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்தான் சில்லரை முதலீட்டாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. அதிக வருமானத்தை முதலீட்டாளர்களுக்குக் கொடுத்துள்ளதே இதற்கு காரணம்.
செபியின் கட்டுப்பாட்டில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இயங்குவதால், மக்கள் முழு நம்பிக்கையுடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ரியல் எஸ்டேட், தங்கம் இவற்றின் விலையில் ஏற்ற இறக்கம் இருப்பது போல மியூச்சுவல் ஃபண்டுகளின் விலையிலும் ஏற்ற இறக்கம் இருக்கும் என்பதைய மக்கள் அறிந்து முதலீடு செய்வது அவசியம்.