பேரம் பேசுறதுல பேய் மாதிரி இருக்கணும் !
நன்றாக அலசி ஆராய்ந்து, ஏறி இறங்கி நல்ல டீல் ஒன்றை முடித்த திருப்தியுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன். நான் அலுவலகம் செல்வதால், மகனை பள்ளியில் கொண்டு விடவும் மீண்டும் அழைத்து வரவும் மற்றும் மற்ற தேவைகளுக்கும் மனைவிக்கு என ஒரு ஸ்கூட்டர் வேண்டும் என முடிவெடுத்தேன்.
இந்த ஸ்கூட்டரை நான் பணம் கொடுத்து வாங்கியதாக நினைக்கவில்லை. பெரும் தொகையை முதலீடு செய்துள்ளதாக நினைக்கிறேன். மனைவியிடம் தனியாக ஸ்கூட்டர் இருந்தால், எனது வேலைகளை நேரம் எடுத்து செய்ய இயலும். அவரும் எனக்காக சில நேரம் காத்திருக்க தேவையிருக்காது. இதனால், இருவரின் நேரமும் சேமிப்பாகும். இதுதான் நான் சொன்ன முதலீடு.
ஹோண்டா ஆக்டிவா, டிவிஸ் ஜுபிட்டர், டிவிஎஸ் ஜெஸ்ட், யமஹா ஃபேசினோ, பஜாஜ் பிளசர் உள்ளிட்ட பல ஸ்கூட்டர் மாடல்களை ஆராய்ந்தேன். அனைத்து Specifications குறித்தும் ஆன்லைனில் தெரிந்து கொண்டாலும் ஷோரூம் சென்றும் விசாரித்தேன்.
ஒவ்வொரு ஷோரூமாக ஏறி இறங்கி Quotation வாங்கினேன். அனைத்து ஷோரூம்களிலும் ‘உங்களிடம் வாகனம் வாங்கினால், எனக்கு என்ன மாதிரியான benefits செய்து கொடுப்பீர்கள்?’ என்ற கேள்வியை மறக்காமல் முன்வைத்தேன். ஒவ்வொருவரும் சில benefits -களை அடுக்கினர்.
அதிலும், ஒரே டீலர்ஷிப் ஆனால் வேறு வேறு Branch என்றும் எனது தேடல்களை தொடர்ந்தேன். ஒரே டீலர்ஷிப் என்றாலும் ஒவ்வொரு Branch-க்கும் அதன் விலை மாறுப்பட்டு இருந்தது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. அனைத்து தகவல்களையும் கேட்டறிந்த பிறகு, என்ன தேவைக்கு இப்போது ஸ்கூட்டர் வேண்டும்? என்ற காரணங்களை பட்டியலிட்டு அதற்கு ஏற்ற ஸ்கூட்டர் இதுதான் என டிவிஎஸ் ஜுபிடர் 125 டிஸ்க் Semi Digital ஸ்கூட்டரை தேர்வு செய்தோம்.
இந்த ஸ்கூட்டருக்கும் ஒவ்வொரு ஷோரூமும் ஒரு விலையை அடுக்கின. ஏற்கெனவே சொன்னது போல் ஒரே டீலர்ஷிப் ஆனால் வேறு Branch என்றாலும் விலை மாறுபட்டது. பின்னர் தொடர்ந்து அந்த சேல்ஸ் நபரிடம் பேசி, விலையை குறைத்தேன். என்னென்ன இலவசங்கள் கொடுப்பீர்கள் என பட்டியலையும் பெற்றேன்.
பிறகு, Indi Blue colour வேண்டும் என அடம்பிடித்து 4 நாட்கள் காத்திருப்புக்குப் பிறகு டிவிஎஸ் ஜுபிடர் 125 டிஸ்க் Semi Digital ஸ்கூட்டரை சொந்தமாக்கினோம்.
‘இதற்கு மேல் ஒரு பைசா கூட குறைக்க முடியாது சார்’ என திட்டவட்டமாக கூறி ஒரு தொகையை முன்வைத்தார் சேல்ஸ் பெர்சன். ஆனால், அதிலும் ஒரு தொகையை குறைத்து அந்த ஸ்கூட்டரை வாங்கினேன்.
பேரம் பேசுறதுல பேய் மாதிரி இருக்கணும்… அதாம்லே வர்கீசு….
— எம்.எஸ்.விஸ்வநாதன்.