ஜீரோ முதலீடு, அதிக லாபம் … டிஜிட்டல் உலகில் நிபுணத்துவம் பெற வைக்கும் புதிய தொடர் 5
வாட்ஸ்ஆப் பிசினஸ் செயலி
வாட்ஸ்ஆப் செயலி இன்று நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்து விட்ட ஒரு அங்கமாக மாறிவிட்டது. காலையில் எழுந்தவுடன் அனைவருமே முதலில் செய்தது வாட்ஸ்ஆப் இல் ஏதாவது மெசேஜ் வந்துள்ளதா? யார் என்ன ஸ்டேட்டஸ் வைத்துள்ளனர் என்பதை பார்ப்பது தான். அந்த அளவிற்கு வாட்ஸ்ஆப் நமது அன்றாட செயலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமானோர் வாட்ஸ்ஆப்-ஐ பயன்படுத்துகின்றனர். பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப்-ஐ வாங்கியதற்கு பின்பு அதில் பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2018 ஜனவரி மாதம் வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் என்ற புதிய செயலி அறிமுகம் செய்தது ஃபேஸ்புக்.
வாட்ஸ்ஆப் மற்றும் வாட்ஸ்ஆப் பிசினஸ் ஆகியவை தனித்தனி செயலிகள் ஆகும். இதில் பலர் குழப்பம் அடைகின்றனர். பார்ப்பதற்கு ஒன்று போலத் தோன்றினாலும் இவை இரண்டுமே வெவ்வேறு வேலைகளைச் செய்யக் கூடியவை. வாட்ஸ்ஆப் செயலியானது பிரத்தியேகமாக சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு உருவாக்கப்பட்டது. வாட்ஸ்ஆப் செயலியை உலகம் முழுவதும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான சிறு தொழில் செய்வோர் பயன்படுத்துகின்றனர்.
வாட்ஸ்ஆப் பிசினஸ் செயலியில் உங்கள் தொழிலின் வகை, சேவை வழங்கும் நேரம், கூகுள் மேப்பில் உங்கள் முகவரி, இ-மெயில் முகவரி, இணைய முகவரி ஆகியவற்றை இணைத்துக் கொள்ள முடியும். இவற்றின் மூலம் வாட்ஸ்அப் செயலியானது உங்கள் தயாரிப்பு அல்லது சேவையின் ஒரு e-business card ஆக செயல்படுகிறது.
வாட்ஸ்ஆப் பிசினஸில் முக்கிய அம்சமாக கருதப்படுவது கேட்லாக் ஆகும். இதில் உங்கள் தயாரிப்பு அல்லது சேவைகளை புகைப்படத்துடன் இணைத்துக் கொள்ள முடியும். மேலும் தயாரிப்பு அல்லது சேவையின் விலை அவற்றின் முழு விவரம் ஆகியவற்றையும் இணைத்துக் கொள்ள முடியும். இதன்மூலம் உங்கள் சேவை அல்லது தயாரிப்பின் விவரத்தை யாரேனும் கேட்டால் அவருக்கு இந்த கேட்டலாகின் லிங்கை பகிர்ந்தால் போதும். அவர் உங்களது தயாரிப்பின் முழு தகவலையும் பெற்றுக் கொள்வார்.
மேலும் இந்த கேட்டலாகில் ஒவ்வொரு தயாரிப்பின் விலை மற்றும் விவரத்திற்கு கீழே Add cart என்ற ஆப்ஷன் இருக்கின்றது. இதை பயன்படுத்தி எத்தனை சேவை அல்லது தயாரிப்பை அவர்கள் விரும்புகிறார்களோ, அவற்றை அவர்களே செலக்ட் செய்து கொள்ள முடியும். பின்பு அந்த தயாரிப்பை நாம் அவர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
வாட்ஸ்ஆப்-ல் மிகப்பெரிய புரட்சிகரமான ஒரு செயல் 2018 பிப்ரவரி மாதம் செய்யப்பட்டது. அது “வாட்ஸ்ஆப் பே” என்பதாகும். கூகுள் பே, போன்பே ஆகியவற்றை பயன்படுத்தி நாம் நம்முடைய டிஜிட்டல் பணபரிமாற்றத்தை மேற்கொள்கிறோம்.
அதேபோல “வாட்ஸ்ஆப் பே”வை பயன்படுத்தி நாம் நமது டிஜிட்டல் பண பரிமாற்றத்தை எளிமையாக செய்ய முடியும். கூகுள் பே, போன்பே ஆகியவை எவ்வாறு UPI உடன் கனெக்ட் செய்து செயல்படுகின்றனவா அதேபோல வாட்ஸ்ஆப் பே-வும் UPI மூலமாகவே செயல்படுகிறது. இதன்மூலம் வாட்ஸ்ஆப்-ல் எளிமையாக நாம் பணபரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். இது சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு எளிமையாக இருக்கின்றது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் இந்த வாட்ஸ்ஆப் மூலம் நமது நிறுவனத்தை டிஜிட்டல் முறையில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். இந்த அத்தனை சேவைகளையும் வாட்ஸ்ஆப் நிறுவனமானது இலவசமாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-தேவா கேசவன்
முந்தைய தொடரை வாசிக்க…
ஜீரோ முதலீடு அதிக லாபம் டிஜிட்டல் உலகில் நிபுணத்துவம் பெற வைக்கும் புதிய தொடர் 4