ஜீரோ முதலீடு அதிக லாபம்.. வர்த்தகத்தை கலக்கும் டிஜிட்டல்
மார்க்கெட்டிங்
ரூ .1 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட ஒரு பெரிய நிறுவனம் தனது தயாரிப்பை சந்தைப்படுத்த, வாடிக்கையாளர்கள் அறிய, செய்தித்தாள், தொலைகாட்சி, வானொலி உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் விளம்பரப்படுத்த, தனது முதலீட்டில் பத்து சதவிகிதத்தை (ரூ.10 லட்சம்) செலவிடும்.
அதே வேளையில் சிறிய முதலீட்டில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்தால் ஊடகங்களில் பெரியளவில் தங்கள் தயாரிப்பினை விளம்பரப்படுத்த முடியாது. அதிகபட்சமாக அவர்களால் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலமே தங்களை விளம்பரப்படுத்த முடியும். அப்படியான விளம்பரங்கள் வெகுஜன மக்களுக்கு போய்ச் சேராது. இத்தகைய குறு மற்றும் சிறு உற்பத்தியாளர்களுக்கு தங்கள் பொருட்கள் குறித்து, குறைந்த செலவில் பெருவாரியான மக்களிடம் சென்று சேர்க்க பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இணையவழி சந்தைப்படுத்துதல் (DIGITAL MARKETING).
ஒரு சேவை அல்லது தயாரிப்பை இணையத்தை பயன்படுத்தி சந்தைப்படுத்தும் செயல்முறையை தான் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்கிறோம். தற்போதைய டிஜிட்டல் உலகில் உங்களது பிசினஸ் ஆன்லைனில் இல்லையென்றால் நீங்கள் போட்டியிலேயே இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. இணைய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் சந்தைப்படுத்துதலில் அளப்பரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
1) மிகப்பெரிய அளவிலான நிறுவனங்கள் மட்டுமே அதிகப்படியான வாடிக்கையாளர்களை கவர முடியும் என்ற நிலை தற்போது மாறி, சிறிய அளவிலான முதலீட்டில் அதிக வாடிக்கையாளர்களை சென்றடைய முடியும்.
2) ஒரு சேவை அல்லது தயாரிப்பின் சரியான வாடிக்கையாளரை சென்றடைய டிஜிட்டல் மார்க்கெட்டிங் அதிக அளவில் உதவுகிறது.
3)ஒரு சேவை அல்லது தயாரிப்பின் பின்னூட்டத்தை(Feedback) உடனுக்குடன் அறிய டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயன்படுகிறது. இதன் மூலம் ஒரு சேவை அல்லது தயாரிப்பின் தரத்தை அதிகப் படுத்தலாம்.
4) ஒரு நிறுவனத்தின் Brand Valueவை உயர்த்துவதற்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் உதவுகிறது.
5) டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் உள்ளூர் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி உலக அளவில் வாடிக்கையாளர்களை கவர முடியும்.
6)நியூஸ் பேப்பர், ரேடியோ, டிவி ஆகியவைகளை கடந்து தற்போது இணையத்தில் அனைவருமே அதிக நேரம் செலவிடுகின்றனர். எனவே ஒரு பொருளை சந்தைப்படுத்துவதற்கான சிறந்த இடமாக இணையம் மாறியுள்ளது. இத்தகைய காரணங்களால் உங்களது வர்த்தகத்தை இணையத்தில் சந்தைப்படுத்துதல் அவசியமாகிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பதிலும் பல்வேறு வகைகள் உள்ளது.
சமூக வலைத்தள சந்தைப்படுத்தல்(Social Media Marketing-FACEBOOK, INSTAGRAM, TWITTER, LINKEDIN..), காணொளி சந்தைப்படுத்தல் (Video Marketing-YOUTUBE, VIMEO), கைபேசி சந்தைப்படுத்தல் (Mobile Marketing), மின்வணிக சந்தைப்படுத்தல் (E-Commerce Marketing), (AMAZON, FLIPKART, E BAY), மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் (Email Marketing) என பல்வேறு வடிவங்களில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செயல்படுகிறது.
இந்த இணையதள கருவிகளை பயன்படுத்தி எவ்வாறு உங்களது உற்பத்திப் பொருட்களை இணையத்தில் பிரபலப்படுத்துவது, வருவாயை அதிகப்படுத்துவது என்பவைகளை இனிவரும் இதழ்களில் ஒவ்வொன்றாக காண்போம்.
-தேவா கேசவன்