மக்களுக்கு சேரவேண்டிய 5300 ஏக்கர் PACL-யின் நிலங்கள் ‘மோசடி’… பத்திரப்பதிவு செய்த தமிழக அதிகாரிகள்!
தமிழ்நாடு பத்திரப்பதிவு துறையில் கடந்த 6 ஆண்டுகளில் மிகப்பெரிய மோசடி மற்றும் ஊழல் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
தமிழ்நாடு பத்திரப்பதிவு துறையில் கடந்த 6 ஆண்டுகளாக, 2016 முதல் 2022 ஆம் ஆண்டு வரை நடந்து வரும் மிகப்பெரிய பத்திரப்பதிவு மோசடி மற்றும் ஊழல் நடந்துள்ளதாக ஆதாரத்துடன் அறப்போர் இயக்கம் சார்பில் சிபிஐ மற்றும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு கொடுத்துள்ளது என சென்னை நுங்கம்பாக்கத்தில் அறப்போர் இயக்கத்தின் அலுவலகத்தில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது குறித்து அவர் பேசிய போது…
பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் சட்ட விரோதமாக ஊழல் முறைகேடு செய்து எப்படி, உச்சநீதிமன்றம் குழு தடை போட்ட 5300 ஏக்கர் PACL நிலங்களை மோசடி பதிவு செய்தார்கள் என்பதை ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் சிஙிமி இல் புகார் கொடுத்துள்ளது . பத்திரப்பதிவு துறை கூடுதல் IGKV ஸ்ரீனிவாசன் உள்பட இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் FIR பதிவு செய்து நடவடிக்கை கோருகிறோம் . PACL என்னும் நிறுவனம் இந்தியாவிலேயே ஒரு மிக பெரிய மோசடியை செய்தார்கள். 5 கோடிக்கும் மேற்பட்ட மக்களிடம் இருந்து கிட்டத்தட்ட ரூ 50,000 கோடி வசூல் செய்து திரும்பி தராமல் ஏமாற்றி, இந்திய முழுக்க பல மாநிலங்களில் நிலம் வாங்கி இருக்கிறார்கள். இந்தியா முழுக்க 3 லட்சம் ஏக்கர் வாங்கியதாக சொல்லப்படுகிறது .
இதில் ஏமாந்த மக்கள் வழக்கு தொடுத்து உச்சநீதிமன்றம் சென்றார்கள். உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு.லோதா அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து அந்த குழு PACL வசம் உள்ள அனைத்து நிலங்களையும் கையகப்படுத்தி மின்னணு ஏலம் மூலம் விற்று, பாதிக்கபட்ட மக்களுக்கு அவர்கள் பணத்தை திருப்பி தரவேண்டும் என்று பிப்ரவரி 2016 இல் உத்தரவு பிறப்பிக்கிறது . மேலும் CBI இந்த வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது .
லோதா குழு இந்தியா முழுக்க PACL மற்றும் அதன் போலி நிறுவனங்கள் முலம் வாங்கப்பட்ட அனைத்து நில தாய்பத்திரங்களையும் வாங்கி அதில் “ NOT FOR SALE “ என்று முத்திரையிடுகிறது . அதாவது வேறு யாரும் இந்த நிலங்களை வாங்கவோ விற்கவோ கூடாது , உச்சநீதிமன்றம் அமைத்த லோதா குழுவிற்கு மட்டும் தான் இந்நிலங்களை விற்க அதிகாரம் உண்டு இதை தமிழ்நாடு பத்திரப்பதிவு IG- க்கு லோதா குழு கடிதம் மூலம் 30/08/2016 அன்று தெரிவிக்கின்றனர் . ஆனால் பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் லோதா குழு கடிதத்தை மதிக்கவில்லை .
பத்திர பதிவு அதிகாரிகள் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் உள்ள 5300 ஏக்கர் PACL நிறுவன நிலங்களை சட்ட விரோதமாக PACL நிறுவன ஆட்களுடன் சேர்ந்து மோசடி பத்திரப்பதிவு செய்துகொண்டு இருக்கிறார்கள்.
மதுரை சாமநத்தம் என்னும் கிராமத்தில் PACL நிறுவனத்திற்கு சொந்தமான 38.26 ஏக்கர் நிலத்தை விற்க 2013 ஆம் ஆண்டு விண்ணப்பிக்கிறார்கள் . தாய் பத்திரம் மற்றும் பட்டா ஊர்ஜிதம் செய்ய வேண்டும் என்று 6 வருடங்களாக இந்த விண்ணப்பம் நிலுவையில் வைக்கப்படுகிறது .
மேலும் இது PACL நிலம் என்பதாலும் லோதா குழு இந்நிலங்களை பத்திர பதிவு செய்யக்கூடாது என்று கூறியுள்ளதாலும் 2019ஆம் ஆண்டு மதுரையில் இருந்த தெற்கு இணை -1 சார்பதிவாளர் இந்த பத்திரப்பதிவு செய்யலாமா என்று தெளிவுரை கேட்டு தலைமை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்புகிறார். கூடுதல் பதிவுத்துறை தலைவர் K.V. சீனிவாசன் பதிவு செய்ய தடை இருக்கும் போதும் இந்த பத்திர பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று பதிலளிக்காமல், பதிவு துறையில் விற்பவர் ஆவணங்களை கொடுத்தது 2013ஆம் ஆண்டு என்றும், அன்றைய தேதியில் PACL நிலத்தை பதிவு செய்ய தடை இல்லை என்றும் , எனவே 2019 ஆம் ஆண்டு பதிவு செய்ய தடை உள்ள PACL நிலத்தை பதிவு செய்யலாம் என்று பதில் கடிதம் அனுப்புகிறார் . மறுநாளே மதுரை தெற்கு இணை -1 சார்பதிவாளர் இந்த நிலத்தை பதிவு செய்கிறார் .
PACL இன் நிறுவனமான MEK Developers Pvt Ltd மற்றொரு PACL நிறுவனமான Devashri Infra Homes Pvt Ltd க்கு 95 லட்சம் ரூபாய்க்கு 38 ஏக்கர் நிலம் கூடுதல் IG K.V. சீனிவாசன் துணையுடன் கூட்டு சதி செய்து மோசடி பத்திரப்பதிவு நடந்தது. இது ஒரு உதாரணம் தான் . இதுபோல 2016ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் 5300 க்கும் மேற்பட்ட ஏக்கர் மோசடியாக PACL நிறுவனத்தின் நிலங்களை பத்திரப்பதிவு செய்து உள்ளனர் பத்திர பதிவு துறையில் உள்ள அதிகாரிகள் . இதற்கான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை அறப்போர் இயக்கம் CBI மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையில் கொடுத்துள்ளது .
மேலும் இதுபோல இந்த வருடம் மார்ச் மதம் (2022) விருதுநகர் மாவட்டத்தில் லோதா குழுவே நேரடியாக தடையில்லா சான்றிதழ் காரியாபட்டி சார்பதிவாளருக்கு அனுப்பினர் என்று போலி ஆவணங்கள் தயார் செய்து 126 ஏக்கர் PACL நிறுவனத்தின் நிலங்களை சீனிவாச பெருமாள் என்பவர் பெயருக்கு மாற்றி மிகப்பெரிய மோசடியை அரங்கேற்றினர்.
முதலீட்டாளர்கள் தொடர் புகார் தந்ததால் இன்றுவரை ஒருசில சார்பதிவாளர்கள் மட்டும் பணி இடை நீக்கம் செய்து விட்டு K.V. சீனிவாசன் போன்ற உயர் அதிகாரிகளை பாதுகாக்கிறார் அத்துறை செயலாளர் ஜோதி நிர்மளாசாமி IAS மற்றும் அத்துறை அமைச்சர் மூர்த்தி. சார்பதிவாளர்கள், மாவட்ட தணிக்கை அதிகாரிகள், மாவட்ட பதிவுத்துறை தலைமை அதிகாரி , துணை பதிவுத்துறை தலைவர்கள், மாநில கூடுதல் பதிவுத்துறை தலைவர் என பலர் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் செய்த இந்த ஊழலின் மதிப்பு மட்டும் ரூ 200 கோடியை தாண்டும்.
பள்ளிக்கரணை சதுப்பு நில ஊழலாகட்டும் , PACL மோசடி பத்திர பதிவாகட்டும் இதுபோல முறைகேடுகள் தொடர்வதற்கு காரணம் ஊழல்வாதிகளை மிகப்பெரிய அளவில் காப்பாற்றும் IAS அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் . அவர்களின் பங்கு என்ன என்பது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் . அறப்போர் இயக்கம் இந்த புகாரை லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் CBI- க்கு அனுப்பி உள்ளது .
PACL நிறுவனத்தால் பாதிக்க பட்ட மக்களுக்கு அவர்கள் பணம் கிடைக்கும் வாய்ப்பு இந்த பத்திர பதிவு மாபியாக்களால் சூறையாடப்பட்டு வருகிறது . பத்திரப்பதிவு துறை மாபியாக்கள் கொட்டம் அடங்கும் வரை அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை அறப்போர் தொடரும் என்றார் ஜெயராம் வெங்கடேசன்.