Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

நம்ம ஊரு நளபாக அரசர் கூப்பிடுங்க… மணி அய்யரை…

நம்ம ஊரு நளபாக அரசர் கூப்பிடுங்க… மணி அய்யரை…

கல்லூரியில் நான் பயின்றது B.Sc., Chemistry எனப்படும் “இளங்கலை ரசாயனம்”. என் மனதுக்கு மிகவும் பிடித்துப் போனதோ “சமையல் கலை ருசியாயனம்”. இதற்குக் காரணம் என் அப்பா. என் தாத்தா. அப்பா மணி அய்யர். தாத்தா கங்காதரன் (அவரது பெயர் தான் எனக்கும்). மணி அய்யர் சமையல் என்றால் அந்தக் காலத்திலும் பிரபலம். இந்தக் காலத்திலும் மகா பிரபலம். இனி வரும் காலங்களிலும் மகா மகா பிரபலம். இதற்கெல்லாம் முழுமையானக் காரணம் நாங்கள் மட்டுமல்ல. கடந்த கால நேற்றைய வாடிக்கையாளர்கள். நிகழ் கால இன்றைய வாடிக்கையாளர்கள். எதிர்கால நாளைய வாடிக்கையாளர்கள். இது அவர்களால் மட்டுமே தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது”. எனப் பணிவன்புடன் தெரிவிக்கிறார் திருச்சி மலைக்கோட்டை கங்காதரன்.

ஒருவருடைய சமையல் ருசியாகவும் ரசனையாகவும் இருக்க வேண்டும் என்றால், அவரது பேச்சும் ருசியாகவும் ரசனையாகவும் இருக்க வேண்டும் என்பதனை நாம் இவரிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

திருமண நிகழ்வில் அனைவரையும் வரவேற்க காத்திருக்கும் மணி அய்யர் கேட்டரிங் உரிமையாளர் ‘மலைக்கோட்டை’ கங்காதரன் மற்றும் அவரது மனைவி கோமதி கங்காதரன்
திருமண நிகழ்வில் அனைவரையும் வரவேற்க காத்திருக்கும் மணி அய்யர் கேட்டரிங் உரிமையாளர் ‘மலைக்கோட்டை’ கங்காதரன் மற்றும் அவரது மனைவி கோமதி கங்காதரன்

தாத்தா கங்காதர அய்யர் அவரது காலத்தில் மிகச் சிறிய அளவில் செய்து கொண்டிருந்த இந்த நள பாகம் ஆனது, அப்பா மண்ணச்சநல்லூர் மணி அய்யர் காலத்தில் “மணி அய்யர் கேட்டரிங் சர்வீசஸ்” ஆக விரிவடைந்தது. திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர் மாவட்டப் பகுதிகளில் அப்போது இருந்தே, “மணி அய்யர் சமையல்” என்றால் இப்போது வரைக்குமாக அத்தனைப் பிரபலம்.

“மணி அய்யர் சமையல்னா… மணி அய்யர் சமையல் தான்” என்று சொல்லுவார் அமரர் ஜி.கே. மூப்பனார். அதுவே எங்களுக்கு மிக மிகப் பெரிய விருது”

“பந்தி ஓடிட்டு இருக்கும். நான் யார்னு யார்ட்டயும் காமிச்சிக்க மாட்டேன். சாப்பிட்டுப் போறவங்க என் காதுபடவே பேசிட்டுப் போவாங்க. சமையல்னா மணி அய்யர் சமையல் தான் என்று. எனக்கு ரொம்ப சந்தோசம் ஆய்டும். எங்களோட ஒவ்வொரு கல்யாண விருந்திலும் ஒவ்வொருத்தரும் இப்பிடிச் சொல்லிட்டுப் போறது எனக்கும் என்னோட டீமுக்கும் கிடைக்குற ஒவ்வொரு தங்கப்பதக்கம் மாதிரி.” என்று பெருமை பொங்கக் கூறுகிறார் மணி அய்யர் கேட்டரிங் சர்வீஸ்சின் கங்காதரன்.

கேட்டரிங் சர்வீஸ் என்றதும் சமையல் மட்டுமே என்று யாரும் நினைத்திட வேண்டாம். ஒரு கல்யாணம் அல்லது ஒரு சுப விஷேசம் என்றால், அதற்கு தேவையான எல்லா விசயங்களையும் இழுத்துப் போட்டுச் சிறப்பாக, அதிலும் ரொம்ப ரொம்ப சிறப்பாகச் செய்து தருவது எங்களது வேலை மட்டுமல்ல, எங்களது கடமையும் ஆகும் என்கின்றனர்.

அழைப்பிதழ் அச்சடித்துத் தருவது, வாழை மரம் கட்டுவது, மண்டபத்துக்கு வெளி அலங்காரம், மணமேடை அலங் காரம், சமையல் சாப்பாடு எல்லாமே இவர்கள் தான். ரெகுலராக அறுபது நபர்கள், விசிட்டிங் புரபொசர் போல அவ்வப்போது விசிட்டிங் சமையல் கலைஞர்கள் நூற்றியிருபது நபர்கள் என விரிவானது இவர்களது கேட்டரிங் சர்விசஸ். “2007ல் என் அப்பா மணி அய்யர் இயற்கை எய்தினார். என் சிறுபிராயத்தில் இருந்தே அவருடன் நானும் தொடர்ந்து இயங்கி வந்துள்ளேன். அதனால் தான் இப்போதும் என்னால் சிறப்பாகச் செயல்பட முடிகிறது. நூறு பேர் கல்யாண விருந்து முதல் பத்தாயிரம் பேர் பதினைந்தாயிரம் பேர் உள்ளடக்கிய கல்யாண விருந்து வரை நாங்கள் நடத்தித் தந்து நல்ல பெயர் சேமித்து வைத்துள்ளோம்.”

“சரி. ஒரு கல்யாண விருந்துக்கு ஐந்நூறு பேர் என்று உங்களிடம் ஆர்டர் சொல்கிறார்கள். விருந்தின் போது மேலும் ஒரு இருநூறு முந்நூறு பேர் வந்து விடுகிறார்கள். அப்போது தடுமாற மாட்டீர்களா?”
“அந்தத் தடுமாற்றம் எங்களிடம் எப்போதுமே வந்ததில்லை. ஏனெனில் பார்ட்டி ஆயிரம் பேருக்குச் சாப்பாடு என்று சொல்லியிருந்தால், ஆயிரத்து அறுநூறு நபர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களுடன் மண்டபத்துக்கு நாங்கள் சென்று விடுவோம். சாப்பாட்டு இலை, அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள் உட்பட அதிக அளவில் கொண்டு சென்று ஸ்டோர் பண்ணி வைத்து விடுவோம். பந்தி ஓடிக் கொண்டிருக்கும் போதே இந்தப் பொருள் பத்தலை அந்தப் பொருள் பத்தலை என்று அப்போதைக்கு வெளியே கடைகளுக்கு ஓடிச் சென்று நாங்கள் எந்தப் பொருளையும் வாங்குவதில்லை. சாப்பாட்டுப் பந்தி தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதில் தான் நாங்கள் கண்ணும் கருத்துமாக இருப்போம்.”

 

“ஒரே நாளில் நாலைந்து கல்யாண விருந்து கான்ட்ராக்டுகளும் நீங்கள் எடுத்துக் கொள்வது உண்டா?”
“ஓ எஸ். தாராளமாக. ஒரே நாளில் ஐந்து கல்யாண விருந்துகள் அதுவும் வெவ்வேறு ஊர்களில் என்றாலும், அதனையும் நாங்கள் எங்களின் வாடிக்கையாளர்களுக்கு முழு திருப்தியாகவே செய்து தந்து வருகிறோம். கங்காதரன் எனும் நான் ஒரு ஊரிலும், என் மனைவி கோமதி இன்னொரு ஊரிலும், என் மகன் சுப்பிரமணியன் என்கிற கிருஷ்ணா இன்னொரு ஊரிலும், என் மருமகள் சுபஸ்ரீ கிருஷ்ணா இன்னொரு ஊரிலும், என் தம்பி விஸ்வநாதன் இன்னொரு ஊரிலும் என மண்டபங்களில் கல்யாண விருந்து தயாராகிக் கொண்டே இருக்கும். நான் அவ்வப்போது எதோ ஒரு நேரமாவது ஒவ்வொரு ஊருக்கும் சென்று வந்து விடுவேன். என் மேற்பார்வையிலும், என் குடும்பத்தினரின் நேரடி பார்வையிலும் அங்கங்கு சமையல் வேலைகள் நடந்து கொண்டே இருக்கும். என் குடும்பத்தினரின் நேரடி உழைப்பில் ஒரே நாளில் எத்தனை ஊர்களில் எத்தனை மண்டபங்களில் அது நடந்தாலும், அத்தனையும் “மணி அய்யர் சமையல்” தான்.”

“உங்களது ஸ்பெசாலிட்டி என்ன?”
“எங்களின் “மணி அய்யர் சமையல்”லில் எல்லாமே நாங்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் தான். எல்லாமே ஸ்பெசல் தான். வெல்லம் போட்ட அக்கார அடிசல், இளநீர்ப் பாயாசம், மைசூர்பா, முந்திரி புலாவ், காளான் பிரியாணி, சோளா பூரி என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.”

“விருந்தின் போது பந்தியில் பரிமாறுகை யில் உங்களால் மறக்க முடியாத விஐபி….?”
“விருந்தின் போது பந்தியில் நிறைய விஐபிக்களுக்கு நானே நேரில் பரிமாறி உள்ளேன். நிறை குறைகளை என்னிடமே சொல்லி விடுவார்கள். அவர்களிடம் நானே சொல்வேன். நிறைகளை மற்றவர்களிடம் சொல்லுங்கள். குறைகளை என்னிடம் சொல்லுங்கள். அதனை அடுத்த முறை எங்களால் அவசியமாக சரி செய்து கொள்ள முடியும் எனச் சொல்வேன்.

என் அப்பா காலத்தில் இருந்தே அமரர் ஜி.கே. மூப்பனார் அய்யா அவர்களுக்கு சாப்பாட்டுப் பந்தியில் தனியாக அவருக்கென உணவு பரிமாரியுள்ளேன். சாதத்துக்கு வத்தல் குழம்பு வரும் போது பிசைந்து விட்டு “மணி அய்யர் (எப்போதும் என்னையும் அப்படித் தான் கூப்பிடுவார்) அந்த மைசூர்பா கொண்டாங்க.” என்பார். அந்த வத்தல் குழம்பு சாதத்துக்கு அவ்வப்போது ரசனையுடன் ருசித்து ருசித்து மைசூர்பா மென்று கொண்டே சாப்பிடுவார். எனக்கு அதனைப் பார்க்கவே அத்தனை ஆனந்தமாக இருக்கும். “மணி அய்யர் சமையல்னா… மணி அய்யர் சமையல் தான்” என்று சொல்லுவார் அமரர் ஜி.கே. மூப்பனார். அதுவே எங்களுக்கு மிக மிகப் பெரிய விருது.” என்கிறார் திருச்சி மலைக்கோட்டை கங்காதரன்.

– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.

 

Leave A Reply

Your email address will not be published.