“காம்போ” கலாச்சாரத்தில் ஹோட்டல்களின் புதிய விற்பனை யுக்தி
“காம்போ” கலாச்சாரத்தில் ஹோட்டல்களின் புதிய விற்பனை யுக்தி
இப்போது சென்னை ஓட்டல்களில் “காம் போ” கலாச்சாரம் பரவி வருகிறது. நாலு எடுத்தால் ஒரே விலைங்கிற பிளாட்பார கடை விற்பனை யுத்தியைதான் “காம்போ” என பெயர் சூட்டி “மினி டிபன்” ஆக்கியிருக்கிறார்கள்.
வாடிக்கையாளர்களுக்கு “கன்ஸ்யூமர் சர்ப்ளஸ்” (Consumer Surplus) என்ற பொரு ளாதார உபரி கிடைக்கிறது. உதாரணமாக, ஒரு பொருளின் விலை 10 ரூபாய் இருக்கும் என நினைக்கும்போது கடைக்காரர் 8 ரூபாய் என்று சொன்னால் அந்த 2 ரூபாயை லாபம் அல்லது உபரி என்ற அர்த்தத்தில், பொருளாதாரம் “கன்ஸ்யூமர் சர்ப்ளஸ்” (Consumer Surplus) என்று கூறி இலக்கணம் வகுக்கிறது.
இந்த ஓட்டல் “காம்போ”வில் “நுகர்வோர் உபரி” கண்டிப்பாக கிடைக்கும். அதற்காக பில்லுக்கு பதிலா லாபத்தில் பங்கு கேட்டால் கஷ்டம்தான். பாத்திரம் கழுவ கூட மிஷின் வந்துவிட்டது. காம்போ இல்லாத தனி ஆர்டர்களில் மனோதத்துவ சிக்கல் ஒளிந்திருக்கிறது.
உதாரணமாக நாம் மசால் தோசை சாப்பிட்டு முடிக்கும் போதுதான் பக்கத்து டேபிள்காரருக்கு வைக்கப்படும் மொறு மொறுன்னு சிவந்த ரவா ஆனியன் தோசை நம் கண்ணில்படும். சாப்பிட்டு முடிக்கப் போகும் மசால் தோசை, அதிசய நாட்கள் கடந்த கட்டின மனைவி மாதிரியும், மொறு மொறு ரவா ஆனியன் பக்கத்து வீட்டுக்கு புதிதாக குடி வந்த கன்னிப் பெண்ணாகவும் தெரியும். (இப்பல்லாம் “வைஸ்வெர்ஸா”ன்னு கண்டிப்பாக சேர்த்தே ஆகவேண்டும்.)
கவர்ச்சியில் மயங்கி, ஆசைப்பட்டு வாங்கினாலும் வயிற்றில் இடமிருக்காது. வாங்கியாச்சின்னு திணிக்கப்படும். கடைசியில் மசால் தோசையின் கலப்பட மில்லாத சுவையும் கெட்டுப்போய், மனித “எக்ஸிட்” அறையே கதி என்று சரணடைய வேண்டியதாகிவிடும். தோசைக்குள்ள மசால் மட்டுமல்ல சில தத்துவங்களும் அடக்கப்படுகிறது.
இந்த “காம்போ” ஆஃபரில் மனிதனின் அலைபாயும் மனதுக்கு தீனி கிடைக்கிறது. சங்கீதா ஓட்டல் காம்போவில், ஒரு இட்லி, ஒரு சிறிய உளுந்தவடை, நெய் கேசரி, நெய் பொங்கல், சிறிய மசால் தோசை கடைசியில் டிக்காஷன் மினி காப்பி. நமக்கே நமக்காக ஒரு மினி வாளியில் சாம்பார், ஒன்று சேர்ந்த இரண்டு சின்ன தூக்கு கிண்ணங்களில் தேங்காய் மற்றும் கார சட்னி. தேசிய மாநில வரிகளோடு சேர்த்து 76 ரூபாய் வாங்குகிறார்கள். எதிலும் ஒன்றுக்கு மேல் எதிர்பார்க்கும் அடிப்படை பேராசை மீது வியாபாரம் நடத்தப்படுகிறது. உள்ளே போனோமா? நாலு விதமா சாப்பிட்டோமா? என்ற திருப்தியுடன் வெளியேறும் முகங்கள் அதிகமாக தென்படுகிறது.
மினிமம் லாபம், அதிக சேல்ஸ் என்ற சரவணா ஸ்டோர் பார்முலா எல்லா இடங் களிலும் பரவி வருகிறது. அடையார்ல எங்கோ 23 ரூபாய்க்கு மினி டிபன் கிடைப்பதாக, மன ஓட்டத்தை ஸ்கேன் செய்துவிடும் சோஷியல் மீடியாக்களில் விளம்பரங்கள் வலுக்கட்டாயமாக எட்டிப் பார்க்கிறது. ஊறல் எடுத்தால் கூட போனை தள்ளி வைத்துவிட்டுத்தான் சொறிய வேண்டும் போலிருக்கு, இல்லையெனில் படை, சொறி, சிரங்கு களிம்பு விளம்பரம் போன் உள்ளே வந்துவிடுகிறது.
சங்கீதாவின் காம்போ டிபன், ஸ்டார் ரேட்டிங்குக்கு தகுதியானதாக இருக்கிறது. என்ன…கடைசியில் சப்ளையர் கேட்ட கேள்வி ஒன்று யோசிக்க வைத்து சங்கடப்படுத்தியது. சாப்பிட்டு, கைகழுவி வந்து காபி சொன்ன போது சப்ளையர் கேட்ட கேள்வி, “சுகர் நார்மல்தானே?” சுகர் இல்லாததால் முணுக் கென்று கோபம் எட்டிப்பார்த்தது.
நெய் கேசரி வைக்கும் போது கேட்காத கேள்வி காப்பிக்கு மட்டும் ஏன் வருகிறது? ஒரு உண்மையும் புரிந்தது. வடிவேலுக்கு கொண்டை காட்டி கொடுத்தது போல நம்ம மண்டை காட்டிக் கொடுத்துவிடும் போல. மண்டை மைக்கு ரினிவல் டைம் போல. டிப்ஸுடன் முடித்துக் கொள்கிறேன்.