மத்திய அரசின் பட்ஜெட்: வணிகர்களுக்கும், தொழில் துறையினருக்கும் மிகப்பெரும் ஏமாற்றம்!
மத்திய அரசின் பட்ஜெட்: வணிகர்களுக்கும், தொழில் துறையினருக்கும்
மிகப்பெரும் ஏமாற்றம்!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் 2023-2024 ஆண்டிற்கான பட்ஜெட் இளைஞர்களுக்கும், விவசாயத்திற்கும் நவீனமயமாக்கலுக்கும் முன்னுரிமை அளித்ததுள்ளது. மகளிர்களுக்கான மகிளா சம்மான் திட்டம் கிராமப்புற வளர்ச்சிக்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய கைவினைத்தொழில், கலைத்தொழில் செய்வோரை ஊக்கப்படுத்தும் திட்டம் மிகவும் புதுமையானது. 63ஆயிரம் கிராமப்புற விவசாய கூட்டுறவுச் சங்கங்கள் கனிமயமாக்கும் திட்டம், பிரதமரின் மீன் சங்கட யோஜனா திட்டம் மீனவர் வளர்ச்சிக்கு உதவிடும். ஆதிவாசிகளுக்கான சமூக பொருளாதார
வளர்ச்சி திட்டம் வரவேற்புக்குரியது. தனிநபர் வருமான வரி விளக்கு 7 லட்சம் என
அறிவித்திருப்பது ஓரளவு திருப்தி அளித்திருக்கின்றது.
அரசின் மூலதன செலவு கட்டமைப்பு 33 சதவிகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கான 50ஆண்டு வட்டியில்லா கடன் தொடரும் என்பதும் மகிழ்ச்சிக்குரியது. இவை அனைத்தும் பிரதானமானதாக இருந்தும், அரசின் வருவாய்க்கு பிரதானமாக உள்ள வணிகர்களின் நலனுக்காக திட்டம் எதுவுமே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
வணிகர்கள் மற்றும் தொழில் துறையினர்களுக்கான செயல்திட்டங்களோ, அவர்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களோ அறிவிக்கப்படவில்லை.
உயர்ந்துவரும் அரசின் ஜி.எஸ்.டி மற்றும் நேரடி வரிவருவாய் 64.சதவிகிதம் வணிகர்கள் மூலமாகவே அரசிற்கு வந்து கொண்டிருப்பதை மிகுந்த கவனத்துடன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பதிவு செய்கின்றது. அரசின் வரி வருவாய் உயர்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் வணிகர்களின் வாழ்வாதார உயர்விற்கான திட்டங்களோ, வணிகர்களின் முன்னேற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் எந்தவித அறிவிப்புகளும் இல்லை.
ஒரே இந்தியா, ஒரே வரி எனும் முழக்கத்திற்கு இடையே, ஒரே இந்தியா ஒரே உரிமம் என்கிற நடைமுறை அமலாக்கப்படாதது மிகப்பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது. மேலும், ஒரே நாடு ஒரே வரி, அதுவும் 10 சதவீத வரியே என்ற அறிவிப்போடு தேசிய வணிகர்நல வாரியம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, இன்றுவரை செயல்முறைக்கு கொண்டுவரப்படாமல் இருப்பதும் வேதனைக்குரியது.
வணிகர்களுக்கான ஓய்வூதிய நடைமுறை என்ற அறிவிப்பை, அறிவிப்போடு நிறுத்தி வணிகர்களின் வாழ்வாதாரத்திற்கும் வைத்து, வணிகர்களின் குடும்ப நலனிற்கும் ஒட்டுமொத்த தேசிய வருவாயை ஈட்டித் தந்து கொண்டிருக்கும் வணிகர்களுக்கு நடைமுறைப்படுத்திட நடவடிக்கை எடுக்காதது வணிகர்கள், தொழில் துறையினர் இடையே ஒட்டுமொத்த ஏமாற்றத்தையே அளித்திருக்கின்றது.
இவ்வாறு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜு கூறியுள்ளார்.