ஷேர் மார்க்கெட்டில், கரன்ஸி மார்க்கெட்டில், டிரேடிங் தளத்தில் அதிக ரிட்டர்ன்ஸ் சாத்தியமா?
ஷேர் மார்க்கெட்டில், கரன்ஸி மார்க்கெட்டில், டிரேடிங் தளத்தில் அதிக ரிட்டர்ன்ஸ் சாத்தியமா?
10 வருடத்திற்கு முன்பு 5 சதவீதம் பிரதி மாதம் தருகிறேன் என்று சொல்லி ரூ.2 கோடிக்கும் மேல் பல நண்பர்களிடம் முதலீடாக வாங்கி, லீமென் பிரதர்ஸ் திவாலான நேரத்தில் முதலிட்டிருந்த மொத்த பணத்தையும் இழந்து, இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல், முதலீட்டாளர்களை எதிர்கொள்ள பயந்து, தாராசுரம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலைவைத்து மடிந்தான் பங்குவர்த்தகத்தில் என்னுடன் வேலை செய்த என் நண்பன் ஒருவன்.
அண்மையில் இதே போல ஒரு லட்சம் முதலீட்டுக்கு பிரதி மாதம் 10 ஆயிரம் மதிப்புள்ள தங்கக் காசு தருவதாகச் சொல்லி, சில பல கோடிகளை முதலீடாகப் பெற்று, ஒரு கட்டத்தில் லாபம் தர முடியாமல், தலைமறைவான நபரை அறிவேன். இவரிடம் என் உறவினர்களே முதலீடு செய்திருப்பதை பின்னாளில் அறிந்து அதிர்ந்தேன். இங்கே முகநூல் நண்பர் ஒருவரும் இதே போல லட்சத்திற்கு 7 ஆயிரம் மாதா மாதம் தருவதாக என்னிடமே சொன்னார். ‘வாய்ப்பே இல்லீங் சார்’ என்றேன்.
‘இல்ல.. கரெக்டா கொடுத்திட்டிருக்கோம். டெக்னிக்ஸ் இருக்கு. கொடுக்கிற ஏழே கம்மி, இன்வெஸ்ட்மெண்ட் ஜாஸ்தி இருந்தா பத்து பர்சண்ட் கூட கொடுக்க முடியும்’ என்றார். எந்த இரட்டை அர்த்தமும் இல்லாமல் ‘நல்லா பண்ணுங்க சார்’ என்றேன். இப்போது அவரும் பிரச்சனையில் இருப்பதாகவும், துபாய்க்கு பறந்துவிட்டதாகவும் அறிகிறேன். நேற்று கடங்கநேரியான் அரிகரசுதன் கூட இவ்விதமாக ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார்.
இந்த தினுசில் ஷேர் மார்க்கெட்டில், கமாடிட்டி மார்க்கெட்டில், கரன்ஸி மார்க்கெட்டில், எந்தவிதமான டிரேடிங் தளத்தில் ரிட்டர்ன்ஸ் தருவதாகச் சொன்னால் அது பொய்யே. அதை நம்பாதீர்கள். இப்படிச் செய்பவர்கள் இரண்டு வகையானவர்கள்.
- உண்மையிலேயே டிரேடிங்கில் இந்த அளவு ரிட்டர்னை எடுக்க முடியும் என்று நம்புபவர்கள்.
- எடுக்க முடியாது, ஆனால் கணிசமாக பணம் சேர்ந்தவுடன் எங்காவது தப்பித்துவிடலாம் என்று முன் கூட்டியே திட்டமிட்டு வசூல் செய்பவர்கள்.
இரண்டாவது வகையினர் மிகப் பெரிய அளவில் இந்த பிஸினஸை பிட்ச் செய்வார்கள். மிகுந்த வெளிப்படையாக இல்லாவிட்டாலும் குளோஸ்டு மார்க்கெட்டிங்கில் தீவிரமாக ஈடுபடுவார்கள். உள்ளரங்க கூட்டம், நெட்வொர்க்கிங் செய்வார்கள்.
பங்கு வர்த்தகத்தில் ஆதாரமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.
- சொல்லி வைத்து இதில் லாபம் எடுக்கவே முடியாது.
- மருத்துவருக்கும் மாரடைப்பு வருவது போல, திருப்பதி பெருமாளே வந்து டிரேட் செய்தாலும் நஷ்டம் வரும்.
- கற்றுக்கொள்ளாமல் இதைச் செய்யக் கூடாது. எனக்கு நேரமில்லை.. நீ பண்ணிக் கொடு என்று யாரிடமும் பணத்தைக் கொடுக்காதீர்கள். if u cant learn u cant earn.
- அடுத்த முறை உங்களை யாராவது அஷ்யூர்டு ரிட்டர்ன் சொல்லி அணுகினால் இந்தப் பதிவு தான் உங்களுக்கு ஞாபகம் வர வேண்டும். ‘பல பேர் அப்படி இருக்கலாம்… ஆனா நாங்க அப்படி இல்லை..’ என்று கடவுளே வந்து சொன் னாலும் நம்பாதீர்கள். முறையாக கற்றுக் கொண்டு, அசாத்தியமான ஒழுங்குடன், சிறிய சிறிய லாபமாக எடுத்து, பெரிய அளவில் செட்டில் ஆன நண்பர்களையும், நபர்களையும் தெரியும். ஒரு வெற்றிகரமான டிரேடரை பணம் உருவாக்குவதில்லை, காலம்!
– அசோக்ராஜ்