தயாரிப்பு முறை
கொள்முதல் செய்யப்பட்ட பாலை, Homogenization முறையில் பதப்படுத்தப்படுத்த வேண்டும். பின்னர், க்ரீம் பிரித்தெடுக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி பாலில் இருந்து க்ரீம் பிரித்தெடுக்க வேண்டும். க்ரீம் பிரித்தெடுக்கப் பட்ட பாலில், 7-&8% சர்க்கரை மற்றும் 1.6% பாதாம் எசன்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். ஒரு பாட்டிலுக்கு 200 மில்லி லிட்டர் வீதம் பாலை நிரப்பி, Crown cork மூடி கொண்டு மூட வேண்டும். ஒவ்வொரு முறையும் 500 பாட்டில்கள் வரை, Sterilization Tank-ல் வைத்து 120 டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலையில் 30 நிமிடங்களுக்கு வெப்பப்படுத்தி, பின்னர், பாட்டில்களைக் குளிர்விக்க வேண்டும்.
பாதாம் பால் தயாரிப்பானது, உணவு உற்பத்தித் துறையில் வருவதால், FSSAI விதிகளின் படி முக்கியமான விவரங்களுடன் கூடிய லேபிளை ஒட்டி, அடுத்த 24 மணி நேரத்துக்கு அறையில் வைத்திருந்த பின்னர், பாட்டில்களை விற்பனைக்கு அனுப்பலாம்.
விற்பனை வாய்ப்பு
200 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட பாதாம் பால் தயாரிக்க, பால், சர்க்கரை, எசன்ஸ், மூடி, லேபிள் என அனைத்து மூலப் பொருள்களும் சேர்த்து ஒரு பாட்டிலுக்கு ரூ.12 அடக்கவிலை. அதை 16, – 18 ரூபாய்க்கு நாம் விற்பனை செய்யலாம்.
கடைக்காரர்கள் ஒரு பாட்டிலை 22 ரூபாய்க்கு விற்பனை செய்து, ரூ.4, – 6 லாபம் எடுப்பார்கள். சிறிய பெட்டிக்கடை முதல் பெரிய குளிர்பானக் கடை வரை உணவுப் பொருள்கள் விற்பனை நிலையங் களிலும் ஆர்டர் எடுத்து விற்பனையை மேற்கொள்ளலாம்.
இரட்டிப்பு வருமானம்!
பாலில் இருந்து க்ரீம் பிரித்தெடுத்து தனியாக விற்பனை செய்யலாம். பின்னர், அந்தப் பாலில் இருந்து பாதாம் பால் தயாரிக்கலாம். எனவே, இந்த இரண்டு விதமான விற்பனையிலும் வருமானம் கிடைக்கும். ஐஸ்க்ரீம், வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்கள் தயாரிக்க இந்த க்ரீம் பயன்படும்.
25 லிட்டர் பாலில் ஒரு கிலோ க்ரீம் கிடைக்கும். இந்த புராஜெக்ட் அடிப்படையில் தினமும் 500 லிட்டர் பால் பயன்படுத்தும் போது அதிலிருந்து 20 கிலோ க்ரீம் எடுக்கலாம். மாதத்தில் 25 தினங்களுக்கு உற்பத்தி நடைபெறும்போது, 500 கிலோ க்ரீம் கிடைக்கும். ஒரு கிலோ க்ரீம் 200, – 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தோராயமாக ரூ.200 எனக் கணக்கிட்டால், க்ரீம் விற்பனையில் மாதத்துக்கு ரூ.1,00,000 வருமானம் ஈட்டலாம். தினமும் 500 கிலோ பாலிலிருந்து 2,500 பாட்டில்கள் பாதாம் பாலை விற்பனை செய்யலாம். ஒரு பாட்டிலை ரூ.16 வீதம் ஒரு மாதத்துக்கு 62,500 பாட்டில்கள் விற்பனை மூலம் ரூ.10,00,000 வருமானம் பெறலாம். பாதாம் பால் மற்றும் க்ரீம் விற்பனை இரண்டிலும் சேர்த்து மாதத்துக்கு ரூ.11,00,000 வருமானம் ஈட்டலாம்.
வங்கிக் கடனுதவி!
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் (PMEGP) ரூ.14.25 லட்சம் கடனுடன் (Term Loan), 25% (ரூ.3.75 லட்சம்) மானியமும் பெறலாம்.