கடன் வலையில் சிக்காமல் இருக்கணுமா? 8 சுலபமான வழிகள்!
1. அளவோடு கடன் வாங்கணும்…
நம்மில் பலர் எந்தக் கடன் கிடைத்தாலும் வாங்கிவிடுகிறார்கள். இதனால், சம்பளம் வாங்கியதும் கடன் தவணைகளை அடைக்கவே பெரும் தொகை செலவாகிவிடுகிறது. அதன்பிறகு, குடும்பச் செலவுக்குப் போதுமான பணம் இருப்பதில்லை. இதைத் தவிர்க்க அளவோடு கடன் வாங்குவது மிக அவசியம்.
வீட்டுக் கடனுக்கான தவணை நிகர வருமானத்தில் 40 சதவிகிதத்துக்கு மேல் எக்காரணம் கொண்டும் செலவிடக் கூடாது. கார் கடன் தவணை மாத வருமானத்தில் 15 சதவிகிதத்துக்குள்ளும், தனிநபர் கடன் மாத வருமானத்தில் 10 சதவிகிதத்துக்குள்ளும் இருக்க வேண்டும். அனைத்துக் கடன்களுக்குமான மாதத் தவணை நிகர வருமானத்தில் 50 சதவிகிதத்துக்கு மேல் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், கடன் வலையில் சிக்குவது நிச்சயம்.
2.தேவைக்கு அதிகமா கடன் வாங்க வேணாம்…
உங்களுக்குத் தேவையானதைவிட அதிகமாகக் கடனை ஒருபோதும் வாங்க வேண்டாம். விளம்பரங்கள், சலுகைகளால் ஈர்க்கப்பட்டு எந்தப் பொருளையும் வாங்க வேண்டாம். ஒரு பொருள் உங்களுக்கு அவசியம் தேவையெனில், அதற்காக படிப்படியாகச் சேமித்து வாங்கவும். அதிலிருக்கும் சந்தோஷமே தனி.
3. நீண்டகால கடனைத் தவிர்க்கவும்…
வீட்டுக் கடன் போன்ற குறைந்த வட்டியிலான, சொத்து மதிப்பை பெருக்கக் கூடிய அவசியமான கடன்கள் தவிர, மற்ற கடன்களைக் விரைந்து அடைக்கவும். நீண்ட ஆண்டுகளுக்குக் கடன் பெற்றிருந்தாலும், அதை அத்தனை ஆண்டுகள் வரை வைத்திருக்க வேண்டியதில்லை. வட்டியை சேமிக்க, எப்போதும் கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்த முயற்சி செய்ய வேண்டும்.
4. கிரெடிட் கார்டு பாக்கியை கட்டி முடிக்கணும்…
கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். அதன்பிறகு, ஒவ்வொரு மாதமும் முடிந்த வரை அதிக தொகையைக் கட்டி கிரெடிட் கார்டு பாக்கியைக் கட்டி முடிக்க முயற்சி செய்யவும். பாக்கியை முழுவதுமாக கட்டி முடித்த பிறகு, கிரெடிட் கார்டுகளை சரண்டர் செய்து விட்டுப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
5. கிரெடிட் கார்டில் கடன் வேண்டாம்…
கிரெடிட் கார்டு மூலம் கடன் வாங்கினால் அல்லது பணம் எடுத்தால் நிச்சயமாகக் கடன் வலையில் சிக்கிக் கொள்வோம். மேலும், கிரெடிட் கார்டு மூலம் கடன் வாங்க, பணம் எடுக்க தனிக் கட்டணம் இருக்கிறது. கிரெடிட் கார்டு கடன், ஏ.டி.எம் மூலம் எடுக்கப்பட்ட பணத்துக்கான ஆண்டு வட்டி சுமார் 35% – 40% ஆகும்.
6. கிரெடிட் கார்டு பில் முழுமையாக கட்டணும்…
கிரெடிட் கார்டு மூலம் அடிக்கடி பொருள்களை வாங்கிவிட்டு, குறைந்தபட்சத் தொகை என்கிற மினிமம் பேமென்ட்டைத் தொடர்ந்து கட்டி வந்தால் கடன் வலையில் நிச்சயம் சிக்கிக்கொள்வீர்கள். இதைத் தவிர்க்க ஒவ்வொரு மாதமும் உங்கள் மாதாந்தர கிரெடிட் கார்டு பில்களை முழுமையாகக் கட்டிவிடுவது அவசியமாகும்.
7.புதிய கடன் வாங்குவதை நிறுத்தணும்…
நம் முன்னோர்கள் எல்லாம் கடன் இல்லாத வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருக்கிறார்கள். புதிய கடன் உருவாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி, இருக்கிற கடனை அதிகமாக திருப்பிச் செலுத்துங்கள். இதனால், விரைவிலேயே கடன் அடைபட்டு, சேமிப்பு அதிகரித்து உங்கள் வாழ்க்கை முறையே மாறிவிடும்.
8. டெபிட் கார்டு மட்டும் பயன்படுத்தணும்…
கிரெடிட் கார்டுக்குப் பதிலாகப் டெபிட் கார்டை மட்டுமே பயன்படுத்தப் பழகிக்கொள்ளுங்கள். இது உங்கள் செலவழிக்கும் ரிஸ்க்கைக் குறைக்கும். உங்களால் பணம் செலுத்தக்கூடிய பொருட்களை மட்டுமே வாங்குங்கள். உங்கள் செலவுகள் அனைத்தையும் தெளிவாக எழுதி வையுங்கள். நீங்கள் திட்டமிட்டபடி செலவு செய்ய இது மிகவும் உதவியாக இருக்கும்.