Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

குரோஷே கனவுகளும் – அனுபவங்களும் ! நீங்களும் டிரை பண்ணி பாருங்க ! ..

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

ஒரு பெண் என்றாலே கணவன் குழந்தைகளை பார்ப்பது வீட்டு வேலைகள் செய்வது என்று இல்லாமல், ஒவ்வொரு பெண்களுக்குள்ளும் ஓர் திறமை இருக்கு. அதை உணர்ந்து வெளி படுத்தல் வேண்டும். வெறும் படிப்பு மட்டும் இல்லாமல், தையல், பெயிண்டிங், ஆர்ட், ஆரி ஒர்க், குரோஷே போன்ற கைவினை திறமைகளும் ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கைத் திறனாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் என் ஆசை. இளமையில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இல்லாமல், எல்லாம் இல்லத்தரசிகளுக்கும் இது மிகவும் முக்கியமானது. நம் அன்றாட வீட்டு வேலைகளை முடித்த பிறகு கிடைக்கும் சிறிய நேரத்தை பயனுள்ளதாக பயன்படுத்தி, நமக்கு முடிந்தவரை ஏதாவது ஒரு கைவினை செய்து பார்ப்பது ஒரு பெரிய பலனை தரும். அந்தப் பணியிலிருந்து நாம் சம்பாதிக்கும் சிறிய வருமானம் நம்ம கைக்கு வந்தால், அது தரும் மகிழ்ச்சி சொல்லி முடிக்க முடியாதது.

அந்த அனுபவம் நம்மை இன்னும் உற்சாகப்படுத்தும். நமக்கும், நம் பிள்ளைகளுக்கு தேவையானதை நாம் சம்பாதித்த பணத்தில் வாங்க முடிகிறது என்ற நம்பிக்கை வந்தால், உலகமே நம்ம வசம் இருக்கிறது என்ற உணர்வு வரும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார் சேலத்தை சேர்ந்த குரோஷே கைவினை கலைஞர் மதுமிதா. ஒரு காலை பொழுதில் அவருடைய வீட்டிற்கு சென்றோம். தனது குரோஷே பணியில் இருந்த மதுமிதா நம்மை பார்த்தவுடன் ஒரு புன்னகை முகத்துடன் நம்மை வரவேற்று குடிக்க ஒரு கோப்பை தேனீர் கொடுத்து, பின்னர் தன் குரோஷே கலைகளின் அனுபவங்களை உற்சாகத்துடன் பகிர்ந்தார்.

குரோஷே கனவுகள்,
குரோஷே கனவுகள்,

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சேலம் தான் கல்யாணம் ஆகி போனது ஜலகண்டாபுரம். இருப்பினும் தற்போது சேலத்துல தான் வசிக்கிறேன். நான் எனது கல்லூரி படிப்பை தாண்டி தனியாக மாண்டிசோரி கோர்ஸ் ஒன்று பயின்றேன். பின் இப்போது 2 வருசமா மழலை செல்வங்களுக்கு டீச்சராக பிராக்டிகல் லைஃப் ஸ்கில்ஸ், புலன் சார்ந்த செயல்பாடுகள், மொழி, கணிதம், கலாச்சாரம் போன்றவற்றை இயற்கையாக கற்றுக்கொடுக்கிறேன். காலையில் டீச்சராகவும் , ஈவினிங் மற்றும் லீவ் நாட்களில் குரோஷே கிளாஸ் மற்றும் ஆர்டர்ஸ்காக வேலை செய்வதும் என்று என் நேரம் கடக்கிறது. இதனால் நான் முழுமை அடைந்த ஒரு பலன். நாம் அறிந்ததை மற்றவர்களுக்கு கற்பிப்பதில் எனக்கு பேரானந்தம் கிடைக்கிறது. இதனால் யாராவது நன்மை அடைவது எனக்கு பெருமையாக இருக்கிறது. குரோஷே செய்வதால் பொறுமை, கவனம், படைப்பாற்றல் ஆகியவை வளர்கின்றன, அதேசமயம் மனஅழுத்தத்தையும் குறைக்கிறது.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

இந்த குரோஷே கலை என்பது நூல் மற்றும் ஊசியை பயன்படுத்தி செய்யப்படும் கைவினை கலை. இது ஒரு பழமையான கைவினை, இன்று உலகளவில் creative art & therapy ஆகக் கருதப்படுகிறது. நான் என்னுடைய இளம் வயதில் பள்ளியில் கற்றேன், ஆனால் அது பள்ளி வாழ்க்கையுடன் மட்டுமே முடிந்தது. அதன்பின் திருமணமாகி அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். ஆனால் கொரோனா காலம் முடிவுக்கு வரும் போது என் வீட்ல சில பிரச்சினைகள் ஏற்பட்டன. அதனால எனக்கு ஸ்டிரஸ் டிப்ரஷன் தொடங்கியது.

அதை பெருசா கேர் பண்ணாம விட்டதால், ஒற்றைத் தலைவலி வந்தது. ஒற்றைத் தலைவலி தொடங்கிய அப்புறம் தான் அதன் தீவிரம் தெளிவாக தெரிந்தது, நம் உடலும் மனதும் முக்கியம் என்று உணர்ந்து, ஹாஸ்பிடலுக்கு-க்கு சென்று ப்ராப்பர் ட்ரீட்மென்ட் எடுத்தேன். உடலும் மனசும் நன்கு இருந்தால் தான் எந்த வேலையும் செய்ய முடியும்னு தோணுச்சு, எங்க ஊர்ல இருக்குற ஹோமியோ டாக்டர் செல்வராஜூ கிட்ட சிகிச்சைக்கு சென்று, எனக்கு வந்த ஒற்றைத் தலைவலியை சரி செய்தேன்.

குரோஷே கனவுகள்,அப்போதுதான் ஒரு கட்டத்தில் என் அன்றாட வாழ்க்கை, குழந்தை, கணவர், மாமியார், வீட்டுப்பணி சீராக நடந்து கொண்டிருந்தாலும் என் தனித்தன்மை மற்றும் எனக்கு அங்கீகாரம் தேவைப்படுவதாக உணர்ந்தேன். “மதுமிதா” என்ற என் பெயரில் என் தனித்துவம் வெளிப்படும் என்ற ஆசையை உணர்ந்தேன். இதன் பிறகு நான் கைவினை கலை, குறிப்பாக நான் என் சிறு வயதிலா கத்துக்கிட்ட குரோஷேவில் ஆர்வம் காட்டி, என் திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்தேன். முதல்ல நான் சில நூல் கண்டுகள் வாங்கி குரோஷே செய்ய முயற்சி செய்தேன். அப்புறம் ப்ராக்டீஸ் செய்து கொஞ்ச கொஞ்சமாக என் கைவினை திறனை டெவலப் செய்தேன். அப்போது பிறந்த குழந்தைக்கான சிறிய ஸ்வெட்டரை செய்யத் தொடங்கினேன்.

அதற்குப் பிறகு, குழந்தைக்கான சூ,  காலணிகளை செஞ்சேன். இதெல்லாம் பார்த்த என் கணவர் “ நீ சும்மா பணத்தையும் நேரத்தையும், விரயம் பண்ணாம வீட்டு வேலைய பாரு” என்று சொன்னார்…எனக்கு கொஞ்சம் வருத்தம் ஆச்சு, என் கணவர் திட்டியதை பற்றி என் தங்கச்சியிடம் புலம்பினேன். அவள் சொன்னாள்: “சும்மா அதை வீட்டுலச் செஞ்சி வைக்காதே , உன் திறமையை டெவலப் பண்ணி நீ செய்ற பொருளை எல்லாம் விற்பனை பண்ணு என்று அறிவுறுத்தினாள். அப்போது யோசித்தேன் விற்பனை பண்ணனும் என்றால் சிறந்த முறையில் பொருளை உருவாக்கவது முக்கியம்.

அதுக்கப்புறம் தான் என் குரோஷே திறமையை இன்னும் மேம்படுத்தி ஒரு ஃபேன்சி ஹேட் அதாவது தொப்பி செய்து வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தேன். அதை பார்த்த ஒரு நண்பர் அது மாதிரி எனக்கு வேண்டும்னு ஆர்டர் கொடுத்தார். அதுவே என் முதல் சேல்ஸ். பிறகு, என் தங்கை ஒரு குரோஷே டாப் செய்து தர சொன்னாள். அதையும் செஞ்சி குடுத்தேன். ஒருமுறை  அவளுடைய சம்மர் வெகேஷனுக்கு அதை அணிந்து போட்டோ எடுத்து எனக்கு ஷேர் செய்தாள். அது சூப்பராக இருந்தது, அதை பார்த்து எனக்குள்ள ஒரு நம்பிக்கை வந்தது கூடவே ஒரு போன்சோ ஆர்டரும் வந்தது. அதையும் வெற்றிகரமாக செய்து முடித்தேன். இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல, என் தங்கை வற்புறுத்தினாள். இருந்தாலும் ஒரு பக்கம் என் கணவரை நினைத்து பயமாகதான் இருந்தது.

குரோஷே கனவுகள்,ஆனாலும் என் தங்கச்சி என் கணவரை கன்வின்ஸ் செய்து சம்மதிக்கச் வைத்தாள். ஆரம்பத்தில் இதை பார்த்து தயங்கிய என் கணவர் என் திறமைகண்டு எனக்கு உதவி செய்யவும் ஆரம்பித்தார். சேலம் சென்று பஜார்ல இருந்து எனக்கு தேவையானதை ஒவ்வொன்றா வாங்கி குடுத்தார். பின்னர் கலர் காம்பினேஷன் செலக்ட் செய்ய உதவி செய்தார். என்னோட இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் wonder_wools லோகோ ரெடி பண்ணி கொடுத்து என் தலை மேல் கை வைத்து “உன் விருப்பம் போல் எல்லாமே நடக்கும் என்று என்னை ஆசீர்வதித்த நாள் இன்னும் என் மனக்கண்ணில் இருக்கு” எப்படி இருந்த மனுஷன் இப்படி மாறியது எனக்கு சந்தோஷம் குடுத்தது. அப்போது ஒன்று நல்லா புரிந்தது, நமக்கு ஒன்று வேண்டும் என்றால், அது நியாயமானதாக இருந்தால், நம்மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் நம்மையும் நம்  தேவை, ஆசைகளையும் புரிந்து கொண்டு வழி செய்து கொடுப்பார்கள் என்று. இதைப்போல் என் தந்தையும் எனக்கு வுளேன் (woolen) வேணும் என்று சொன்னால், எனக்காக பெங்களூர் போய் மூட்டை மூட்டையாக வாங்கி வந்து கொடுப்பார்.

இப்போ என்னுடைய 5 வருச குரோஷே எக்ஸ்பீரியன்ஸ்ல நிறைய ஆர்டர் வருது. மேலும் நான் மொன்டிசொரி ட்ரைனிங் படித்த கல்வி நிறுவனத்தை நடத்தும் ரூபா என்ற மேம் நான் செய்யும் குரோஷே பொருட்களை பார்த்து மிகவும் விரும்பி, என்னை ஊக்கப்படுத்தினார்கள். மொன்டிசொரி ட்ரைனிங் படிக்கும் மாணவர்களுக்கு ஆர்ட் & கிராப்ட் பயிற்சி வகுப்புகள் இருக்கும்; அதில் குரோஷே பயிற்சியை ஒன்றாக சேர்க்கலாம் என்று கூறி, ஒரு நாள் அங்கே படிக்கும் 40க்கும் அதிகமான மாணவர்களுக்கு டெமோ வகுப்புகள் எடுக்க வாய்ப்பு கொடுத்தார்கள். அன்று நான் குரோஷே டெமோ வகுப்பு எடுத்தேன், நல்ல ஆதரவு கிடைத்தது.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

நான் உணர்ந்தது என்னவென்றால் படிப்பு மட்டும் இல்லாமல்,தையல், பெயிண்டிங், ஆர்ட், ஆரி ஒர்க், குரோஷே போன்ற கைவினை திறமைகளும் ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கைத் திறனாக கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக என்னிடம் குரோஷே கற்றுக்கொண்டு அவங்க செஞ்சி அனுப்பிய போட்டோஸ் பார்க்கும் போது எனக்கு மன நிறைவா இருக்கும். நான் ஆசைப்பட்டது போல் நடந்தது.. என்னோட ஐடென்டிபிகேஷன்…. இண்டிவிடுவாலிட்டி (identification… Individuality).

குரோஷே கனவுகள்எனது பேர் பின்னால் மதுமிதா – குரோஷே ஆர்டிஸ்ட் !!!

குரோஷே செய்யும் போது வரும் தடைகள் இடையூறுகள் ஆரம்பத்தில் பல பேருக்கு இதை கற்றுக்கொள்ளும் போது நிதானம் இல்லாம ஸ்டிச்சஸ் (stitches) சரியாக வராது அதனால குரோஷே கத்துக்க மனசே வராம பாதியிலேயே விட்டுருவாங்க. இதுல குறிப்பா சின்ன சின்ன தப்புனால ஒரு ஸ்டிச் தவறிட்டா மீண்டும் களைந்து முதல்ல இருந்து செய்ய வேண்டி வரும். இதை தொடர்ந்து அதிக நேரம் பண்ணினால்தான் கண் வலி, கை வலி வரும். ஆனா இந்த கஷ்டங்கள் எல்லாம் தாண்டி நீங்க கத்துக்கிட்டீங்கன்னா குரோஷே நமக்கு தரும் ஒரு அற்புதமான நன்மை உண்டு. நாம ஓவர் திங்கிங்ல ஸ்டிரஸ் அவுட் ஆக இருக்கும் போது, குரோஷேவில் ஈடுபடும் நேரம் நாம கவனம் முழுக்க இதுல வந்து  நம்மளோட எல்லா பிரச்சனைகளும் மறக்கும் அளவிற்கு மூழ்கிவிடும். அதனால் தான் குரோஷே என்பது ஒரு மெடிடேஷன் மாதிரி. அது மனசை அமைதியாக்கும், நம்மை அமைதிப்படுத்தும், மறுபடியும் மனசை புத்துணர்ச்சியாக்கும். நம்மேல் நமக்கு ஒரு நம்பிக்கை வரும்.

குரோஷே கனவுகள்,குரோஷே பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கும் வழிமுறைகளில் நாம் முதலில் செய்ய வேண்டியது பொருட் செலவு (Material Cost) நீங்கள் பயன்படுத்தும் நூல், ஹூக், பட்டன், சிப்பர், பீட்ஸ் போன்றவற்றின் விலை உதாரணத்துக்கு நூல் ₹150 + பட்டன் ₹20 = ₹170 கணக்கிட வேண்டும். இரண்டாவது வேலை நேர செலவு (Labour / Time Cost) ஒரு மணி நேரத்திற்கு உங்களுக்கே ஒரு “சம்பளம்” fix செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ₹100 என்று வைத்துக்கொண்டால், 5 மணி நேரம் எடுத்தால் ₹500 வரும். அடுத்து மூன்றாவதாக மேலாண்மை செலவு (Overhead Cost) கருவிகள், மின்சாரம், மார்க்கெட்டிங், பாக்கிங் போன்ற செலவுகள் அடங்கும் சாதாரணமாக பொருட் செலவின் 10% – 20% வரை அதாவது ₹170 (பொருட் செலவு) → 20% = ₹34, நான்காவதாக மொத்த அடிப்படை விலை (Base Price) பொருட் செலவு + நேரச் செலவு + மேலாண்மை செலவு உதாரணத்துக்கு ₹170 + ₹500 + ₹34 = ₹704. இறுதியாக லாபம் (Profit Margin) குறைந்தது 20% – 30% ₹704 + 20% (₹140) = ₹844  இதை ரவுண்டாக ₹850 என்று விலை நிர்ணயம் செய்துவிடலாம்.

இதில் குறிப்பாக நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நாம் செய்யும் இந்த கைவினைப் பொருட்கள் அனைத்தும் தனித்துவமானவை எனவே சீப் விலையில் விடக்கூடாது. கைவினைப் பொருட்கள் சம்பந்தமாக நன்றாக ஆராய்ந்து (Insta, Etsy, Local shops) பார்த்து, அங்குள்ள விலையை விட கொஞ்சம் நியாயமான விலை வைக்கவும். மேலும் இந்த குரோஷே பொருட்களுக்கு இன்ஸ்டாகிராமில ஆர்டர் வரும்போது ரொம்ப எக்சைட்மென்ட்டா  இருக்கும். ஆனால் அதில் நிறைய ஸ்பேம் இருக்கும். சிலர் பேமென்ட் செய்யாமல், ஆர்டர் டெலிவரி கொடுங்க கேஷ் ஆன் டெலிவரி வாங்கிக்கிறோம் என்று சொல்வார்கள். அப்போ எனக்கு டவுட் வரும்.

குரோஷே கனவுகள்,குரோஷே கம்யூனிட்டில 1000-க்கும் மேற்பட்ட குரோஷர்கள் இருக்காங்க. அவர்களும் பல தடவைகள் எப்படி எல்லாம் ஸ்பேம்ல சிக்கி நஷ்டம் ஆகியிருக்குனு சொல்லியிருக்காங்க. அதனால தான் நான் கொஞ்சம் அலார்டா இருப்பேன். எப்போதும் ஃபுல் பேமென்ட் வந்த பிறகே ஆடர்ஸ் அக்செப்ட் பண்ணுவேன். நம்ம பிசினஸ்க்கு நம்ம கேர்ஃபுல்லான ஆப்ஷன தேர்வு பண்ணா தானே  நம்ம பாதுகாப்பாக இருக்க முடியும். இருப்பினும் இந்த கலை ஒருசில பேரால் அண்டர்ரேட் செய்யப்படுகிறது. இதுல வெறும் ஒரு குஷிப்பின் செட் செய்ய ஒரு மணி நேரம் ஆகும், ஒரு டிரஸ், ஸ்வெட்டர், செய்ய 1 வாரம் ஆகும். நேரிய பேர் பேரம் பேசாம வாங்கிகொள்கிறார்கள். ஒரு சில பேர் பேரம் பேசி விலையை ரொம்ப அடித்து பேசி கேட்கிறார்கள்..அதை தவிர்த்தால் நன்றாக இருக்கும்.

குரோஷே என்பது எல்லாம் இல்லத்தரசிகளுக்கும் மிகவும் முக்கியமானது. நாம அன்றாட வீட்டு வேலைகளை முடித்த பிறகு கிடைக்கும் சிறிய நேரத்தை பயனுள்ளதாக பயன்படுத்தி, நமக்கு முடிந்தவரை ஏதாவது ஒரு கைவினை செய்து பார்ப்பது ஒரு பெரிய பலனை தரும். அந்தப் பணியிலிருந்து நாம் சம்பாதிக்கும் சிறிய வருமானம் நம்ம கைக்கு வந்தால், அது தரும் மகிழ்ச்சி சொல்லி முடிக்க முடியாதது. அந்த அனுபவம் நம்மை இன்னும் உற்சாகப்படுத்தும். நமக்கு, நம்ம பிள்ளைகளுக்கு தேவையானதை நாம சம்பாதித்த பணத்தில் வாங்க முடிகிறது என்ற நம்பிக்கை வந்தால், உலகமே நம்ம வசம் இருக்கிறது என்ற உணர்வு வரும். நான் இதை அனுபவித்து உணர்ந்தவள். இதைப் படிக்கும் எல்லா இல்லத்தரசிகளுக்கும் சிறிதளவாவது ஊக்கமாக இருந்தால் அதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

குரோஷே கனவுகள்,மேலும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்த எனது தங்கை, எனது கணவர் இதற்கெல்லாம் ஆதரவாக இருந்த என் பெற்றோருக்கு நான் என்றும் கடமை பட்டிருக்கிறேன். நம் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாக இருந்தால் தான் நம்மால் எதுவும் செய்ய முடியும். என்னை பழையபடி மீட்டு என் லச்சியங்களை அடைய  உதவிய எனது டாக்டர்க்கும் நான் என்றும் மனமார்ந்த நன்றி கூறுகிறேன் என்று உற்சாகத்துடன் பேசி முடித்தார்.

தொடர்புக்கு – குரோஷே கைவினை கலைஞர்

மதுமிதா – +91 80565 41421

கட்டுரை – மு. குபேரன்

படங்கள் – பா. பத்மாவதி

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.