நவீன யுக வளர்ச்சியால் நாம் பலவற்றை இழந்திருந்தாலும், இன்னமும் பழைமை மாறாமல் சில நம்முடே பயணித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
உணவு பொருட்களும் சிற்றுண்டிகளைப் போலவே பானங்களும் கால மற்றும் இட மாற்றத் துக்குட்பட்டே பரிணாமம் பெற்று வருகின்றன.தமிழகத்தில் முக்கியாக கோலிசோடா இன்னமும் கிடைப்பது அதில் ஒன்று.
கோலி சோடாக்களுக்கான பாட்டிகள் வழக்கொழிந்து வந்து கொண்டிருப்பதால், தமிழகத்தில் அந்த பாட்டிகளை தாயாரிக்க யாரும் முன் வராததாலும் ஆந்திராவில் சில குறு நிறுவனங்கள் இந்த பாட்டிகள் தயாரிப்பு பணி செய்து கொண்டிருப்பதால் இன்றும் வழக்கில் உள்ளது இந்த கோலி சோடா.
இந்த வார திருச்சி ஸ்பெஷலில் கோலி சோடாவை பார்ப்போம். புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜலட்சுமி, பல இன்னல்களுக்கிடையே ஒசூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்து இந்த கோலி சோடா தயாரிக்கும் தொழிலைக் கற்றுக் கொண்டு அதனை தானே விற்பனை செய்யும் தொழிலையும் செய்து தன் குடுபத்துக்கு அச்சாணியாக மாறியுள்ளார். தன் கணவர் இல்லா நிலையிலும் இந்த தொழிலில் ஈடுபட்டு தனது தம்பியை துணைக்கு வைத்துக் கொண்டு தனது குழந்தைகள் ஞானசேகரன், சாந்தி ஆகியோரை வளர்த்து ஆளாக்கியுள்ளார்.
இதுகுறித்து அவரிடம் பேசும்போது,
“புதுக்கோட்டை தான் எனக்கு சொந்த ஊரு. கையில் இரண்டு வயது மகன் ஞானசேகர். வயிற்றில் 8 மாசம் என் பொண்ணு சாந்தி இருக் கப்போ என் வீட்டுகாரரு விட்டுபோயிட்டாரு. ஓசுர்ல ஒரு கோலி சோடா கம்பெனிக்கு வேலைக்கு போய்த்தான் இந்த தொழிலை கத்துக்கிட்டேன். என் கூட துணையா இருந்த தம்பியும் இறந்து போனதால, புதுக்கோட்டையிலேயே கோலிசோடா விற்பனையை ஆரம்பிச்சேன்.
ஆனா நினைத்த அளவிற்கு வருமானம் கிடைக்காததால திருச்சியில் தொழிலை ஆரம்பிச்சோம். இப்போது என் மகன் ஞானசேகர் எனக்கு உதவியாக இருக்கார்.
கோலிசோடாவுக்கான பாட்டில் எல்லாமே பிரிட்டிஷ் காலத்தில் தயாரிச்சது, அப்போ உள்ள பாட்டில்களை தான் நாங்க இப்போ வரை பயன்படுத்திட்டு இருக்கோம். ஆந்திராவில இருந்து கொஞ்சம் வருசங்களுக்கு முன்னாடி வாங்கின 800 பாட்டில்களை வச்சு தான் இப்போ வரை வியாபாரம் செஞ்சிட்டு இருக்கோம்.
பாட்டில்களை கழுவி, பன்னீர், உப்பு சோடா தயாரிக்கிறது, கார்பன் டை ஆக்ஸைடை நிரப்புறதுன்னு ஒரு நாள் இழுக்கிற வேலையை நான் என் மகன் ஞானசேகர், வேலையாள் அன்சாரின்னு மூனுபேரும்தான் பாக்குறோம். இது பழைய முறையில் செயல்படும் மிஷின்கிறதால கையாலேதான் சுத்தனும் ஒரு சுத்துக்கு மூணு பாட்டில்தான் சுத்தமுடியும்.
ஒரு நாளைக்கு 700 கோலிசோடாதான் விற்பனை செய்யமுடியும். சாதாரணமான பாட்டில்கள் வெறும் 100 கிராம் தான் எடை இருக்கும். ஆனா கோலிசோடா பாட்டில்கள் 400 கிராம் எடை உள்ளது. ஒரு பாட்டில்லோட இன்னைய விலை மட்டும் ரூ.100. அது மட்டுமில்லாமா நாங்க தயாரிச்ச உடனே அதை விற்பனை செஞ்சிடுவோம். குறைஞ்சபட்சம் 6 மாசம் வைக்கலாம் ஆனா நாங்க ஸ்டாக் வைச்சு விற்பனை செய்றதில்லை.
உணவு பாதுகாப்பு துறை கொடுத்த கலவையில் தான் நாங்க சோடா தயாரிக்கிறோம். இதனால உடம்புக்கு எந்தவித கேடும் கிடையாது. சுவையும் தரமும் மாறாத இடம்கிறதாலதான் தினமும் தேடி வந்து கோலிசோடா சாப்பிடுறாங்க. என்னோட பையன் ஞானசேகர் தான் எனக்கு பெரிய சப்போர்ட்டா என்னோட சேர்ந்து அவனும் இந்த தொழிலை செய்றான். நான் இல்லன்னாலும் அவனே முழுசா எல்லா வேலையும் பாத்துடுவான். மழை வெயில்லுன்னு எல்லா காலத்திலயுமே கோலி சோடாவுக்கு தனி மவுசு. தன்னம்பிக்கையோட காலத்தை ஓட்டிட்டு இருக்கோம், ஆண்டவன் எப்போதும் கூடவே இருக்கான் என்கிறார் புன்னகை மலர்.