அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு என்பது ஒரு சாமானிய மனிதனின் பட்ஜெட்டைத் தலைகீழாக மாற்றக்கூடியது. அந்த வகையில், ஒவ்வொரு வீட்டின் அடிப்படைத் தேவையான சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலை ஏற்கனவே சவாலாக உள்ள நிலையில், அதன் விநியோகக் கட்டணத்தை (Delivery Charges) உயர்த்துவது குறித்த ஆலோசனைகள் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை, எரிவாயு நிறுவனங்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தை விட ‘மலைப்பகுதி விநியோகக் கட்டணம்’ என்ற பெயரில் ஏற்கனவே 15 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது எரிவாயு விநியோகிப்பாளர்கள் இக்கட்டணத்தை 60 ரூபாய் வரை உயர்த்தி தரும்படி மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர் இந்த நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையில் கடந்த 23/2/2026அன்று கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது.
மற்றொரு ஆலோசனை கூட்டம் 27/02/2026 நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நுகர்வோர் சங்கங்கள் பங்கேற்பதில்லை எனவும் அறிவித்துள்ளது. இதில் கலந்துகொண்ட குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் இந்த கட்டண உயர்வு, ஏழை எளிய மலைவாழ் மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பதால் தவிர்க்க வேண்டும் என்று கூறி எதிர்ப்பை பதிவு செய்தனர்.
நீலகிரி மலை மாவட்டத்தில் சிறு குறு விவசாயிகள், தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள், மலைவாழ் மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பான்மையாக உள்ள மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள். அனைத்து பொருள்களும் சமவெளி பகுதியில் இருந்து வருவதால் பொருளின் விலை உயர்ந்தே இருக்கும். மலைப்பகுதியில் இயங்கும் பேருந்துகளில் பயணகட்டணம் 20விழுக்காடு அதிகம்.
நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஆவின் பால் விலை அதிகம். பொருளாதரத்தில் பின்தங்கிய மாவட்டத்தின் மக்கள் மீது இப்படி பல சுமைகள் உள்ள நிலையில் மக்களின் அன்றாட சமையலுக்கு தேவையான மிகவும் அத்தியாவசியமான சமையல் எரிவாயுவுக்கும் கூடுதல் கட்டணம் விதிக்க முயல்வது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்றதாகும்.
எனவே எரிவாயு விநியோக கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தும் படி நீலகிரி மாவட்ட மக்கள் சார்பாக கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம் என குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் தலைவர் மனோகரன் மாவட்ட நிர்வாகத்திற்கும் முதலமைச்சருக்கும் மனு அளித்துள்ளார்.



