‘பவர்’ மூலம் சொத்து வாங்குகிறீர்களா.. இதை படியுங்கள்..!
ஒருவர் தனது சொத்தை விற்பனை செய்வதற்கு தனது சார்பில் ஒருவரை நியமித்து அவருக்கு அதிகாரம் வழங்குவது தான் ‘பவர் ஆப் அட்டர்னி’. சொத்தை வாங்குவதற்கும், சொத்தை நிர்வகிப்பதற்கும் ‘பவர்’ அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கலாம்.
முக்கியமாக சொத்தை விற்பதற்கு முந்தைய பரிவர்த்தனை நிலையான விற்பனை ஒப்பந்தம் போடுவதற்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டிருக்கலாம். அப்படி இருந்தால் அவரிடம் இருந்து சொத்தை வாங்குவதற்கு முன்பு உஷாராக இருக்க வேண்டும். ஏனெனில் விற்பனை ஒப்பந்தம் போடுவதற்கு மட்டுமே அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பவருக்கு நேரடியாக சொத்தை விற்பனை செய்ய உரிமை கிடையாது.
அவரால் சொத்தை விற்பனை செய்வது குறித்து ஒப்பந்தம் மட்டுமே போட்டுக் கொடுக்க முடியும். சொத்தை பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக விற்பனை ஆவணம் எழுதித் தர முடியாது. அதை மீறி அவர் உண்மைகளை மறைத்து விற்பனை ஆவணம் எழுதித் தந்தாலும் அது செல்லாது. ஆகையால் சொத்தை விற்பனை செய்பவர் ‘பவர்’ வைத்திருந்தால் அந்த சொத்தை வாங்குவதற்கு அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது.
ஒருவர் வைத்திருக்கும் ‘பவர்’ எந்த வகையை சார்ந்தது? முக்கியமாக சொத்தை விற்பனை செய்வதற்கான தகுதி படைத்ததா? என்பதை உறுதிபடுத்திக் கொள்வது முக்கியம். அதைவிட முக்கியமான விஷயம், அந்த பவர் செல்லத்தக்கதாக இருக்கிறதா? என்பதை சரி பார்க்க வேண்டும். ஏனென்றால் ‘பவர்’ எழுதிக் கொடுத்த சொத்தின் உரிமையாளருக்கும், அவருக்கும் இடையே ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டு இருக்கலாம். அதன் காரணமாக சொத்தின் உரிமையாளர் ‘பவரை’ ரத்து செய்து இருக்கலாம். அப்படிப்பட்ட நிலையில் இருந்தால் ‘பவர்’ வைத்திருப்பவரால் எதுவும் செய்ய முடியாது. அவர் தன்னிடம் இருக்கும் ‘பவர்’ அதிகாரம் ரத்து செய்யப்பட்ட விஷயத்தை மறைத்து சொத்தை விற்பனை செய்ய முயற்சிக்கலாம். எனவே உஷாராக இருக்க வேண்டும்.
பவர் எழுதிக் கொடுத்த சொத்தின் உரிமையாளரை நேரடியாக சந்தித்து ‘பவர்’ அதிகாரத்தை உறுதி செய்து கொள்வது நல்லது. பவர் அதிகாரம் ரத்து செய்யப்படாமல் நடைமுறையில் இருக்கிறதா? என்பதையும் சரி பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக ‘பவர்’ எழுதிக் கொடுத்த சொத்தின் உரிமையாளர் உயிரோடு இருந்தால் தான் பவர் அதிகாரம் செல்லும். இறந்துவிட்டால் அந்த பவர் அதிகாரம் செல்லுபடியாகாது. எனவே பவர் மூலம் சொத்து வாங்கும் போது, சொத்தின் உரிமையாளர் உயிரோடு இருக்கிறாரா.. இருந்தால் அவர் கொடுத்த பவரின் அதிகாரம் ரத்து செய்யப்படாமல் இருக்கிறதா, இல்லையா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.