விற்பனையில் சாதனை படைத்த மாருதியின் பலினோ..!
மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்புகளில் பலினோ காரும் ஒன்று. இந்த காரை 2015ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல் முறையாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் பிரீமியம் தர ஹேட்ச்பேக் ரக காராகும். இது டீசல் மற்றும் பெட்ரோல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது.
தற்போது பலினோ கார் விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கார் விற்பனைக்கு அறிமுகமான முதல் நாள் தொடங்கி தற்போது வரை சுமார் 9 லட்சம் யூனிட் வரை விற்பனையாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் 2015 தொடங்கி இதுவரை 8,08,303 யூனிட் பெட்ரோல் எஞ்ஜின் கார்களும், 103,866 யூனிட் டீசல் எஞ்ஜின் கார்களும் விற்பனையாகியிருக்கின்றன. மாருதி நிறுவனம் பலினோ காரை நெக்ஸா டீலர் ஷிப்புகள் வாயிலாகவே இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது.
பலினோ காரின் அதிகபட்ச மைலேஜ் திறன் 23.87 கி.மீ. இருக்கின்றது. அதேசமயம், இதன் குறைந்தபட்ச மைலேஜ் திறன் 19.56 கி.மீ. ஆக உள்ளது. ரூ.5.90 லட்சம் தொடங்கி ரூ.9.10 லட்சம் வரையிலான விலையில் இக்கார் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இத்தகைய குறைந்த விலையிலேயே அதிக பிரீமியம் வசதிகளை பலினோ வழங்குவதே இதன் விற்பனை வளர்ச்சிக்கு காரணமாக கருதப்படுகிறது.