வணிகம் பழகு… தொழில்முனைவோருக்கான புதியதொடர் – 7
வெற்றிக்கு காரணமான புறக்கணிப்பு..! வணிகம் பழகு… தொழில்முனைவோருக்கான புதியதொடர் – 7
தொழிலில் ஜெயிப்பதற்கு ஒவ்வொருவரும் ஒரு பார்முலா வைத்திருப்பார்கள். அடுத்தவர்களை வெற்றி பெற வைப்பதன் மூலம் தான் நாம் ஜெயிக்க முடியும் என்று வித்தியாசமாக சொல்கிறார் DERBY JEANS COMMUNITY ன் சேர்மன் விஜய்கபூர்.
ஒரு தொழில் தொடங்குவதற்கான ஐடியா, அதன் தேவையை நாம் உணரும் பொருட்டு அமையும் போது அதில் வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகிறது. 1992ல் சாதாரண சேல்ஸ்மேனாக வாழ்க்கையை தொடங்கிய நாளை நினைவு கூர்கிறார் விஜய்கபூர்.
Direct Marketingக்காக ஒரு அப்பார்ட்மெண்ட்டுக்கு சென்ற போது மிக சாதாரணமான உடையில் சென்றவரை அங்கிருந்த வாட்ச்மேன் தடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த போர்டை காட்ட, அதைப் பார்த்து அதிர்ந்து போனார். அங்கு இப்படி எழுதியிருந்தது “ DOGS & SALESMEN NOT ALLOWED”.
தனது உடையை ஒருமுறை பார்த்துக் கொண்டார். அடுத்த நாள் தனது கையிலிருந்த பணத்தில் முடிந்தவரை நல்ல உடையணிந்து அதே அப்பார்ட்மெண்ட்டுக்கு சென்றார். என்ன ஆச்சரியம், வாட்ச் மேனுக்கு இவரை அடையாளம் தெரியவில்லை, சல்யூட் அடித்து கேட்டை திறந்துவிட்டான். உடையை பற்றிய கவனம் அப்போது அவருக்கு உண்டானது. சீராக உடையணிந்து அதனால் ஏற்பட்ட தன்னம்பிக்கையில் வாடிக்கையாளர்களிடம் திறமையாக பேசி மிகச் சிறந்த சேல்ஸ்மேனாக உருவெடுத்தார்.
இவர் திறமையை கண்ட வாடிக்கையாளர் ஒருவருடன் பார்ட்னராக பஞ்சாபி தாபா ரெஸ்ட்டாரண்ட் ஒன்றை தொடங்கினார். அந்த முதல் ப்ராஜெக்ட் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பார்ட்னர் விலக, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். 200 சதுர அடி கடை, கையில் பத்தாயிரம் ரூபாய் பணம்… என்ன செய்வது?
கையிலிருக்கும் பணத்தில் இரண்டு பழைய தையல் மெஷின்களை வாங்கி ஆண்களுக்கான உடைகளை ஒரு மாஸ்டரை வைத்து தைக்கத் தொடங்கினார்.
அப்போதே கடைக்கு DERBY GENTLEMEN OUTFITTER என்று பெயர் வைத்தார். வியாபாரத்தை பெருக்க புதுமையான வழிகளை கையாண்டார். அதில் ஒன்று கஸ்டமர் போன் செய்தால் அவர்கள் வீட்டிற்கே சென்று அளவெடுத்து, தைத்து, வீட்டிற்கே சென்று டெலிவரி கொடுப்பது.
அளவெடுக்கச் செல்லும் போது கையில் சர்ட், பேண்ட் பிட்டுகளை எக்ஸ்டிராவாக எடுத்துச் சென்று கஸ்டமருக்கு விற்பது போன்ற செயல்களில் வாடிக்கையாளர்களை ஈர்த்தார். இவரது தனித்துவமான பிட்டிங் தரத்தில் வாடிக்கையாளர்கள் குவியத் துவங்கினர். ஒரு கட்டத்தில் கஸ்டமர்களுக்கு நேரத்திற்கு டெலிவரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. வாடிக்கையாளர்களே கொடுத்த ஐடியா தான் ரெடிமேட் கான்செப்ட்.
சரியான அளவுகளில் புதுப்புது டிசைன்களில் ரெடிமேட் டிரஸ்களை விற்க ஆரம்பித்தார். கஸ்டமரிடம் வரவேற்பு அதிகமிருந்தாலும், தனித்துவமாக ஏதாவது செய்ய மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. புதுமையான வகைகளில் ஜீன்ஸ் தயாரித்து “DERBY JEANS COMMUNITY” விற்க துவங்கினார். ஏகப்பட்ட வரவேற்பு. வாடிக்கையாளர்கள் என்றில்லாமல் டீலர்ஷிப் கேட்டும் நிறைய விசாரணைகள். Franchisee முறையில் நாடெங்கும் ஷோரூம் தொடங்கினார்.
தொழில் நன்றாக போய்க் கொண்டிருக்கும் போது திடீரென்று விற்பனை இறங்குமுகமானது. கிட்டத்தட்ட அனைத்து Franchisee உரிமையாளர்களும் நஷ்டமடைந்தனர். விஜய்கபூர் தவறு எங்கு என்று யோசித்தார். பிரச்சினையிலிருந்து வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகளை திட்டமிட்டார். தனது Franchisee Partners அனைவரையும் அழைத்து, தனது தவறுகளை எடுத்துக்கூறி, அதிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகளையும் சொல்லி அவர்களுக்கு அவர்களது நஷ்டத்தை விரைவில் சரிசெய்து கொடுப்பதாக உறுதி கொடுத்தார்.
தமது முதலீடுகள் அவ்வளவு தான் என்று சோர்ந்து போயிருந்த முதலீட்டாளர்கள் புது உற்சாகம் கொண்டார்கள். விஜய்கபூரின் வாக்கு நிறுவனத்தின் மேல் நம்பிக்கையை கூட்டியது. நிறுவனத்தை பாராட்டினார்கள். விஜய்கபூரும் தனது சொத்துக்களை விற்று நிதி நிலையை சரி செய்தார்.
புத்தம்புது பொலிவோடு மீண்டும் மார்கெட்டில் டெர்பி இறங்கியது. நிறுவனத்தின் நம்பகத்தன்மையால் மீண்டும் டீலர்கள் கரம் கொடுத்தனர். பிரத்தியேக ஆண்களுக்கான நவநாகரீக உடையாக, தென்னிந்தியாவின் முன்னனி நிறுவனமாக டெர்பி வளர்ந்தது. இன்று இந்தியாவில் 70க்கும் மேற்பட்ட ஷோரூம்களுடன் உலக மார்க்கெட்டில் அடியெடுத்து வைக்கிறது.
1992ல் மிகச்சாதாரண சேல்ஸ்மேனாக இருந்தவர் இன்று இவ்வளவு உயர காரணமாக அவர் கூறுவது.
- ஆரம்பத்தில் தொழிலில் ஏற்பட்ட ஏமாற்றத்தை கடின மனதோடு ஏற்றுக்கொண்டு அடுத்த வாய்ப்புகளை ஆராய்ந்தது.
- தொலைநோக்கு பார்வையுடன் ஒரு தொழிலை அணுகியது.
- தனது தொழில், சமூகத்திற்கு எவ்வளவு நன்மையளிக்கிறது என்று உணர்ந்து செய்தது.
- தொழிலில் நஷ்டமடைந்தாலும், அதை நேர்மையாக கையாண்ட விதம்.
- தொழிலில் அடுத்தடுத்து வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை நம்பிக்கையுடன் செய்தது.
உதாரணத்திற்கு இன்று கொரோனா சூழலில் அனைவரும் வியாபார வாய்ப்புகளை தவறவிடும் நேரத்தில் CORANA BLOCK எனும் புதுவித டிரஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இவை 99.99% கொரோனா பாதிப்புகளை தடுக்கும் என்று அரசு உத்திரவாத சான்றிதழுடன் கூறுகிறார். பிரச்சினைகளை கண்டு அஞ்சாமல், அதற்கு தீர்வு கொடுக்க முயலும் போது, அடுத்தடுத்த வியாபார வாய்ப்புகள் நமது கதவை தட்டும் என்று கூறுவதுடன் எனது டீலர்களை வளர்ப்பதன் மூலம் தானாகவே நானும் வளர்கிறேன் என்று நம்பிக்கை சுடர்விட கூறுகிறார்.
2025க்குள் 1000 இளைஞர்களை வெற்றிகரமான தொழில்முனைவோர்களாக ஆக்குவதே எனது லட்சியம் என்று பெருமையுடன் கூறுகிறார் நமது ஹீரோ விஜய்கபூர்.
அடுத்த இதழில் புன்னகையை மட்டுமே வைத்துக் கொண்டு வெறும் கையில் முழம் போட்டு ஜெயித்த புன்னகை மன்னரை சந்திப்போம்.
……..பழகலாம் தொடர்ந்து!
கட்டுரை குறித்த உங்கள் கருத்துக்களை
imagefelixrtn@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு வரவேற்கிறோம்.