வங்கிக் கடனில் வீடு வாங்கப் போகிறீர்களா..?
கொரோனா தாக்குதல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தேசிய வங்கியில் முதலீட்டிற்கான வட்டி விகிதத்தை அதிகரித்தும், வீடு கட்டுவதற்கான வட்டி விகிதத்தை குறைத்தும் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே வங்கி கடன் பெற்று வீடு வாங்குபவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. தற்போது வங்கிக் கடனில் வீடு வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை உங்கள் பார்வைக்கு வைக்கின்றோம்.
வீடு கட்டுதல், தனி வீடு மற்றும் அடுக்கு மாடி வீடு வாங்க, வீட்டை விஸ்தரிக்க, புதுப்பிக்க, பழுதுபார்க்க ஆகியவற்றுக்கு வீட்டுக் கடன் பெறலாம். கடன் பெறுபவர்கள், நில உரிமை பத்திரம், பட்டா, சிட்டா, வில்லங்கச் சான்று, இருப்பிடச் சான்று, கடந்த ஆறு மாத வங்கிக் கணக்கு விவரம், சென்ற மூன்று வருடங்களின் வருமான வரிக் கணக்கு தாக்கல் படிவம், படிவம் 16, வீட்டு மதிப்பீட்டு அறிக்கை, லீகல் ஒப்பினியன் ஆகியவற்றை அளிக்கவேண்டும்.
வீட்டுக் கடன் என்பது, கடன் பெறுபவர் திருப்பிச் செலுத்தும் தகுதி அடிப்படையில் தீர்மானிக்கப்படலாம். குடும்ப வருமானம், சொத்து மற்றும் வருமானத்தின் நிரந்தரத்தன்மை ஆகிய நிலைகளிலும் கடன் தொகை தீர்மானிக்கப்படும்.
வங்கிக் கடன் ஜாமீன் என்பது சொத்துப் பத்திரம் என்றாலும் கடன் தொகைக்கு ஈடான ஆயுள் காப்பீடு பாலிசி, ஜாமீன்தாரர், கிஷான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்பு பத்திரம் ஆகியவையும் இணை ஜாமீனாக இருக்கலாம்.
வீட்டுக் கடனுக்கான வட்டி மாற்றத்துக்கு உட்பட்டது என்பதால், வட்டி குறித்து வங்கியிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். பல ஆண்டுகள் வட்டி செலுத்த வேண்டும் என்ற நிலையில் ஒரு சதவிகித வட்டி குறைப்பு கூட லட்சக்கணக்கான ரூபாயை சேமிப்பாக மாற்றக்கூடும்.
சொத்து மதிப்பில் 80 அல்லது 90 சதவீதம் மட்டும் வங்கி கடனாக தரப்படும் என்பதால் மீதித் தொகையை ஏற்பாடு செய்து கொள்வது அவசியம். மேலும், நடைமுறை கட்டணம், நிர்வாகச் செலவு, ஆவணப்படுத்தும் கட்டணம், தாமதக்கட்டணம், கடன் தவணையை மாற்றி அமைக்கும் கட்டணம், புதிய கடன் திட்டத்துக்கு மாறுவதற்கான கட்டணம், சீரமைப்புக் கட்டணம், நிலையான வட்டியிலிருந்து மாறும் வட்டிக்கு மாறுவதற்கான கட்டணம், சட்ட ஆலோசனை கட்டணம், தொழில்நுட்ப ஆய்வுக் கட்டணம், வருடாந்தர சேவைக் கட்டணம் உள்ளிட்டவற்றில் தள்ளுபடி பெற வங்கியை கேட்டுக்கொள்ளலாம்.
கடன் பெறும் வாடிக்கையாளருக்கு, வட்டி விகிதம், கட்டணங்கள், செலவுகள் மற்றும் வட்டியை பாதிக்கும் அம்சங்கள் ஆகியவற்றை கடன் தகவல் படிவத்தில் வங்கி அதன் செலவில் தருவதுடன், கடன் சம்பந்தமான அனைத்து அதிகாரப்பூர்வ ஆவண நகல்கள் அனைத்தையும் வாடிக்கையாளருக்கு தர வேண்டும்.
கடன் பத்திரத்தில் உள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாக படித்து பார்த்து புரிந்து கொண்ட பின்னரே வாடிக்கையாளர் அதில் கையெழுத்து போடுவது நல்லது. கடன் பத்திரத்தில் உள்ள சரத்துக்களில் புரியாத வாசகம் இருந்தால் அதற்கான விளக்கத்தை வங்கியிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.