தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு. அயர்லாந்து நாட்டில் தன் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், இன்றைய இளைய தலைமுறையினரிடையே, தமிழ் மொழியை, உணர்வை கொண்டு சேர்க்கும் களப்பணியாற்றி வரும் கணினி வல்லுநர். அயர்லாந்தின் தமிழ்க் கவி என்றும், நற்றமிழ்ச் செம்மல் என்றும் பாராட்டப்படும் இவர் திருச்சியின் மண்ணிலிருந்து முளைத்து வளர்ந்து நிற்கும் மரம். பிசினஸ் திருச்சி இதழுக்கு நேரம் தந்தவர் இதயம் விரித்து பேசுகிறார்.
திருச்சிதான் தங்கள் சொந்த ஊரா?
இல்லை. காரைக்குடிக்கு அருகிலுள்ள கூத்தலூர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். இந்தியாவிற்கு தலைநகரம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எனக்குத் தலைநகரம் எனது கிராமம் என்கிற உறுதியோடு இயங்குபவன். செயின்ட் ஜோசப் கல்லூரியில் கணிப்பொறி அறிவியலில் முதுகலைப் பட்டமும், கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டில் முதுகலைப் பட்டமும் பெற்றேன். திருச்சி தமிழ்நாட்டுக்கு இரண்டாவது தலைநகரமாக வேண்டும் என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை எனக்கு எப்போதும் திருச்சி இரண்டாவது தலைநகரம் தான்.
தமிழ்மைந்தன் என்கிற பெயரைப் பற்றி..
அது பெயர் அல்ல. அதுதான் என் அடையாளம் என்றே கருதுகிறேன். வெவ்வேறு மாநிலங்களில், வெவ்வேறு தேசங்களில் பணிநிமித்தமாக சுற்றி சுற்றி திரிந்தாலும் ஒரு கவிஞனாக இளைப்பாறுதலில் பெருமை கொள்கிறேன். கணினி மென்பொருள் பொறியாளராக 20 ஆண்டுக்கும் மேற்பட்ட அனுபவத்தில் கணினித் தொழில்நுட்பம் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை பன்னாட்டு அளவில் வழங்கி இருக்கிறேன். உள்ளதை உணர்ந்தவாறு சொல்லும் இரண்டு வரி கவிதை தரும் ஆற்றல் அவற்றையெல்லாம் விடப் பெரியது.
சிறுவயது முதலே கவிஞராவது என்பது தான் இலக்கா?
பெற்றோரின் உற்சாகம் – ஊக்குவிப்பு காரணமாக சிறு வயது முதலே தமிழ் மொழி மீதும் தமிழ் இலக்கியங்கள், கலாச்சாரம், பண்பாடு மற்றும் சுற்றுச்சூழலியல் மீதும் பற்றுடன் வளர்ந்தேன். பள்ளிக் காலத்திலே பல்வேறு போட்டிகளில் பங்கேற்றேன் கையெழுத்துப் பத்திரிகைகளை நடத்தினேன். கல்லூரிப் பருவத்தில் தமிழ்மைந்தன் எனும் புனைப்பெயரில் எழுதத் தொடங்கினேன். அதுவே நிலைத்துவிட்டது.
கவிதை மட்டும் தானா?
தமிழ்நாட்டுப்புறக் கலைகளான பறையாட்டம், கும்மியாட்டம் மற்றும் வீதி நாடகத்தில் பயிற்சிப் பெற்றுள்ளேன். மேடை நாடகங்களை இயக்கி நடித்திருக்கிறேன். குறும்படங்களுக்கான கதைக்கரு உருவாக்கம் கதை வசனங்கள் எழுதியுள்ளேன். சமூக ஊடகங்களில் கவிதை, கட்டுரை, கதைகள் என தொடர்ந்து எழுதிவருகிறேன். பல்வேறு நாடுகளில் கவியரங்கங்கள், பேச்சு மன்றங்களிலும் பங்கேற்று வருவதுடன் தனிப்பட்ட முறையிலும், குழுக்களோடு இணைந்தும் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறேன்.
இந்தப் பயணத்தில் திருச்சி உங்களுக்குத் துணையாக நின்றிருக்கிறதா?
தமிழ் இலக்கியம், சமூகப்பணி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, கிராமப்புற மாணவர்கள் முன்னேற்றத்திற்கான ஊக்குவிப்பு என பலதளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் எனக்கு அடித்தளமாக அமைந்தது திருச்சியே என்பதைத் தீர்க்கமாக நம்புகிறேன்.
எனது இளமைக் காலத்தில் 18 வயது முதல் 25 வயது வரை (1994&2001) திருச்சியில் கல்லூரிப் படிப்பையும், சமூகப் பணிக்கான அடித்தளத்தையும் கற்றுக் கொண்டேன்.
திருச்சியைச் சுற்றி இருக்கும் வரலாற்றுத் தொன்மையுள்ள கல்லணை, தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம், மலைக்கோட்டை, காவிரிக்கரை, முக்கொம்பு போன்ற இடங்களும், பச்சைமலை, புளியஞ்சோலை போன்ற இயற்கை எழில் கொஞ்சும் இடங்களும் இவர் தமிழ் எழுத்துகள் உருவாக்கிய இடமாகத் திகழ்ந்தது.
கல்லூரியில் படித்த காலத்தில் திருச்சியைச் சுற்றி இருக்கிற கிராமங்களுக்கு அழைத்துச் செல்லப் பட்டேன். அந்தக் கிராமங்களில் எனக்குக் கிடைத்த அனுபவம் புரிதல் ஆகியவையே இந்தச் சமூகத்தின் மீது ஆழமான பற்றை எனக்குள் கொண்டு வந்தது. இன்னும் சொல்லப்போனால் திருச்சியைச் சுற்றியுள்ள கிராமங்களில் எனக்கு ஏற்பட்ட பிடிப்பு விரிந்து, விரிந்து தமிழ் மண்ணுக்கான பிடிப்பாக மாறியது என்பதே உண்மை
பன்னாட்டு அளவிலான தங்களின் தமிழ்ப்பணி குறித்து..
உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து பல்வேறு கலாச்சாரப் பின்புலங்களை அறிந்து கொண்டிருந்தாலும், தமிழ்க் கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களின் மீது கொண்ட பற்று பெரியது. அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல, என்னால் இயன்ற பணிகளைச் செய்வதோடு விளிம்பு நிலை மாணவருக்கு விழிப்புணர்வு ஊட்டும் பணியையும், கல்விக்கான உதவிகளையும் தொடர்ந்து பங்களித்து வருகிறேன். அயர்லாந்தில் வசித்து வந்தாலும், ஐரோப்பாவின் பல நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழ் ஆளுமைகளுடன் நட்புறவு பேணி தமிழ்ப்பணி ஆற்றி வருகிறேன்.
இளையோருக்கு தாங்கள் சொல்ல வருவது?
தோல்விகள் ஏற்பட்டால் அதை எண்ணி நொறுங்கி விடாமல், எதிர்த்து மோதி எந்தப் பிழையால் இந்தத் தவறு ஏற்பட்டது என்பதை உணர்ந்து பயணிப்பது தான் வெற்றிக்கு வழி செய்யும். பொறுமையும், நிதானமும் ஆன்மாவின் குணங்கள் என்று சொல்கிறார்கள். அந்த வழியில் சென்று வெற்றி அடைந்தவர்கள் ஆயிரமாயிரம் உள்ளனர். அவர்களை உங்களின் மாதிரிகளாக முன்னிறுத்துங்கள். வெற்றிக்காக காத்திருக்காதீர்கள். வெற்றிக்காக உழையுங்கள். முயற்சிகள் பல செய்து விடாமுயற்சியுடன் உழையுங்கள். போராடும் போது வீண்முயற்சி செய்கிறாய் என்றவர்களே நீங்கள் வென்ற பிறகு விடாமுயற்சியுடன் உழைத்தவர் என்று புகழாரம் சூட்டுவார்கள்.
வெற்றியின் திசை நோக்கி நடக்க ஏதாவது டிப்ஸ்…
வெற்றி என்பதை விட நிறைவு கொள்வதற்கு மனசு பக்குவப்படுதலே பூரணத்துவம். ஆனால் சமகாலப் போராட்டத்தில் நமது பயணம் வெற்றியைக் குவியப்படுத்தியே அமைந்து விடுகிறது. உடைகிற பருவத்தில் உடைய வேண்டும். வளைகிற பருவத்தில் வளைய வேண்டும். அந்த உணர்வோடு சிந்தனை, சொல், செயல் இம்மூன்றையும் ஒரு நேர்க்கோட்டில் நிறுத்திவிட்டால் வெற்றி வந்துவிடும். அதை நோக்கிய பயணத்தில் எதிர்படும் தடைகளை உடைத்தலில் கவனம் செலுத்துவதை விட, உழைப்பில் கவனம் செலுத்துவதே போதுமானது. அந்தச் சிந்தனையே நமக்குள் ஒரு புதுப்பிறப்பைத் தரும். அதை நோக்கி இளைஞர்கள் நடைபோட வேண்டும்.
வளைதல் சரி… அது என்ன உடைதல்…
அது எனது சிந்தனை அல்ல… எங்கோ வாசித்ததுதான். முட்டை உடைவதற்கு இரண்டு வழிகள் தான் இருக்கின்றன. ஒன்று வெளியிலிருந்து உடைக்கப்பட வேண்டும் அல்லது உள்ளிருந்து உடைய வேண்டும். வெளியிலிருந்து உடைக்கப்படும்போது, அது உடைப்பவர் விரும்புகிற உணவாக அது மாறும். உள்ளிருந்து உடைகிறபோது ஒரு புது உயிராக வெளிவரும். எனவே உடைய கற்றுக்கொள்ளுதல் மிக அவசியமானது. அது அவசியமானது மட்டுமல்ல… அவசரமானதும் கூட.
சந்திப்பு :- ஜோ.சலோ