ஆன்லைன் பேமென்ட் : ஏமாறும் வியாபாரிகள்… அறிய வேண்டிய விஷயம்
ஏமாற்றுவது ஒவ்வொரு காலகட்டத்திலும் அன்றைய வாழ்க்கை முறைக்கு உட்பட்ட வாழ்வியல் கூறுகளைப் பயன்படுத்தி நடைபெறும் மோசமான நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது. மோசடியில் ஈடுபடுவது எந்த அளவுக்கு குற்றமோ அதே போல் தான் மோசடியில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதும் முக்கியம்.
இன்றைய இணையமயமான நவீன உலகத்தில் ஏராளமான எண்ணிலடங்கா பித்தலாட்டங்கள் அரங்கேறி வருகின்றன. நவீன முறையில் ஒரு வித்தியாசமான பித்தலாட்டம் தற்போது அரங்கேறி வருகிறது. அதைப் பற்றி பெரும்பான்மையான வியாபாரிகள் அறிந்து கொள்வது கிடையாது. பொரு ளற்ற வணிகம் என்ற இணைய வர்த்தகம் தற்போது மிகப் பெரிய பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறது.
ஐந்து ரூபாய்க்கு பொருட்களை வாங்கினாலும் சரி, 5 லட்சத்திற்கு வாங்கினாலும் சரி ஆன்லைன் பேமென்ட் முறையில் தான் இன்று பணம் கைமாறுகிறது. இதற்கு ஜி பே, கூகுள் பே, அமேசன் பே, போன் பே என்ற பல்வேறு வகையான நிறுவனங்களின் அப்ளிகேஷன் மூலமாக இணைய வழியாக பணம் செலுத்தும் முறை அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த வகை முறை தற்போது பாரபட்சமின்றி அனைத்து நிலை கடைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய கடை முதல் பெரிய பெரிய கடைகள் வரை அனைத்து வகையான கடைகளிலும் மக்கள் கண்ணில் படும்படி க்யூஆர் கோட் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் மக்களும் க்யூஆர் கோடு எங்கு இருக்கிறது என்று கேட்டு பணம் செலுத்த தொடங்கி இருக்கின்றனர். க்யூஆர் கோடை பயன்படுத்தி பொருட்களை வாங்கியவர் ஸ்கேன் செய்து பொருட்களுக்கான விலையை கொடுத்து வருகிறார். இந்த நிலையில் அதிலும் முறைகேடு செய்வதற்கான எளிய வழி கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது.
கூகுள் ப்ளே ஸ்டோரில் பிராங்க் பேமெண்ட் அப்ளிகேஷன் என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்யும் நபர்கள் கடையில் பொருட்களை வாங்கி. அதற்கு பணத்தை ஆன்லைன் பேமென்ட் வழியாக செலுத்துவதாக கூறி, அந்த போலியான அப்ளிகேஷனுக்கு சென்று செலுத்த வேண்டிய தொகையும், கடையின் பெயரையும், பணம் செலுத்தியவர்களின் தொலைபேசி எண்ணையும் டைப் செய்து கொண்டு பிறகு பணம் செலுத்தியது போல் கிரீன் டிக்கை அந்த அப்ளிகேஷன் மூலமாக போலியாக உருவாக்கி ஏமாற்றுகின்றனர்.
கிரீன் டீக் வந்தவுடன் பணம் தங்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விட்டது என்று கடையின் உரிமையாளர்கள் நினைத்துக் கொண்டு அவர்களை அனுப்பி விடுகின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் வங்கி கணக்கில் பணம் போகவில்லை. போலியான அப்ளிகேஷன் மூலமாக பணத்தை செலுத்தியது போல் தோற்றத்தை உருவாக்கி பணத்தை முறைகேடு செய்திருக்கிறார். இதை சிறிய வர்த்தகர்கள் யாரும் தெரிந்து கொள்வது கிடையாது.
இது குறித்து வங்கியாளர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், “ஒவ்வொரு வங்கியும் அதற்கென தனியான அப்ளிகேஷன்களை (APP) வைத்துள்ளது. வாடிக்கையாளர்கள் அவர்களின் கணக்கு உள்ள வங்கியின் ஆப் மூலம் மட்டுமே பணம் பரிமாற்றம் செய்தால் இது போன்ற ஏமாற்றங்களை தவிர்க்கலாம். அதையும் மீறி தொழில்நுட்ப கோளாறுகளால் ஏதேனும் தவறு நடந்தால் அவற்றை களைய வங்கியாளர்கள் நம் அருகாமையில் தான் இருக்கிறார்கள்.
ஜி பே, கூகுள் பே, அமேசன் பே, போன் பே மூலம் நாம் பணத்தை தொலைத்தால் யாரிடம் விசாரிப்பது என்று தெரியாமலேயே பணத்தை இழக்கும் சூழல் நேர்கிறது. இணைய வழியாக பணம் செலுத்துவதற்காக க்யூஆர் கோடு வைக்கப்பட்டு இருக்கக்கூடிய ஒவ்வொரு கடைகளிலும் இனி பணம் நமது வங்கிக் கணக்கில் வந்து விட்டதை உறுதி செய்வதற்கான ஒலிபெருக்கி வைத்துக் கொண்டால் சிறப்பே.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஜி பே, கூகுள் பே, அமேசன் பே, போன் பே போன்ற வாய்ப்புகளை உருவாக்கித் தரும் அதே வேளையில் அதில் ஏற்படும் அசௌகரியங்கள், ஏமாற்றங்களையும் கண்காணித்து செயலாற்ற வேண்டியது வியாபாரிகளின் கடமை. வணிகர்கள் உஷாராக இல்லாவிட்டால் உழைப்பு மட்டுமல்லாது பொருளாதாரமும் பறிபோகிவிடும். எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மோசடிகள் நடைபெறலாம் என்ற நிலையில்
விஞ்ஞான வளர்ச்சியுடன் எச்சரிக்கையாகவும் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.