10 வயதில் தொழில் தொடங்கிய நடிகையின் மகனை பாராட்டிய ரசிகர்கள்
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷில்பா ஷெட்டி. இவர் கடந்த 1996-ம் ஆண்டு ரிலீசான மிஸ்டர் ரோமியோ படம் மூலம் தமிழிலும் ஹீரோயினாக அறிமுகமானார். இதன்பின்னர் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய குஷி படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி அசத்தி இருந்தார் ஷில்பா.
இதன்பின்னர் பாலிவுட் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த இவர், கடந்த 2009-ம் ஆண்டு ராஜ் குந்த்ரா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட ஷில்பா பிசினஸில் கவனம் செலுத்தி வந்தார். இவர் ஐபிஎல்-லில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பங்குதாரராகவும் இருந்து வருகிறார்.
ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்த்ரா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஷில்பா ஷெட்டிக்கு கடந்த 2012-ம் ஆண்டு ஆண்குழந்தை பிறந்தது. இதையடுத்து 8 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு வாடகைத் தாய் மூலம் இரண்டாவதாக பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஷில்பா.
தற்போது 10 வயதாகும் ஷில்பா ஷெட்டியின் மகன் வியான், புதிதாக பிசினஸ் ஒன்றை தொடங்கி உள்ளார். VRKICKS என பெயரிடப்பட்டுள்ள அந்நிறுவனத்தின் மூலம் பிரத்யேகமாக ஷூக்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் வியான். இவ்வளவு சிறிய வயதிலேயே பிசினஸ் தொடங்கிய உள்ள மகனை ஊக்குவிக்கும் விதமாக அந்நிறுவனத்தின் முதல் ஷூவை ஷில்பா ஷெட்டி வாங்கி உள்ளார். இதைப்பார்த்த வியந்துபோன ரசிகர்கள் வியானுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.