நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்ற பங்கு சார்ந்த ஃபண்டுகள்
மியூச்சுவல் ஃபண்டில் கடன் ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது ஈக்விட்டி ஃபண்டுகள் மிகவும் ரிஸ்க்கானவை; மூலதனத்துக்கு அதிக இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், இந்த இழப்பு எல்லாம் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு உட்பட்ட முதலீடுகளுக்குத்தான். அதற்கு மேற்பட்டு, 10&15 ஆண்டு வரை நீடிக்கும் ஈக்விட்டி ஃபண்ட் முதலீட்டின்மூலம் சுமார் 12%-&15% வருமானம் பெற வாய்ப்புள்ளது. முதலீட்டுக் காலம் மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட நிலையில்தான் இந்த ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். அதுவும் அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட முதலீட்டாளர்கள்தாம் முதலீடு செய்ய வேண்டும் என்பது பாலபாடம் ஆகும்.
லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் ஃபண்டுகள்…
ஈக்விட்டி ஃபண்டுகளை லார்ஜ்கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டுகள் என மூன்று பெரும் பிரிவாக செபி அமைப்பு பிரித்துள்ளது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பின் அடிப்படையில் 1 முதல் 100 இடங்களில் இருக்கும் நிறுவனங்கள் லார்ஜ் கேப் நிறுவனங்கள் எனவும், 101 முதல் 250 வரையில் இருக்கும் நிறுவனங்கள் மிட்கேப் நிறுவனங்கள் எனவும், 251-வது நிறுவனத்துக்கு மேல் உள்ள அனைத்து நிறுவனங்களும் ஸ்மால்கேப் நிறுவனங்கள் ஆகும்.
இந்த லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் நிறுவனங் களின் பட்டியலை இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்ஃபி ஆறு மாதத்துக்கு ஒரு முறை (ஜூன் மற்றும் டிசம்பர்) அதன் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. இதைப் பின்பற்றி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அவற்றின் ஃபண்டுகளில் உள்ள பங்குகளை ஒரு மாத காலத்துக்குள் (தேவை இருக்கும்பட்சத்தில்) மாற்றி அமைக்க வேண்டும் என்பது விதிமுறை ஆகும்.
ரிஸ்க்குக்கு ஏற்ற ஃபண்டுகள்…
ஈக்விட்டி ஃபண்டைப் பொறுத்தவரை, அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள் லார்ஜ்கேப், ஃபிளெக்ஸிகேப், மல்ட்டிகேப் ஃபண்டுகளிலும், நடுத்தர அளவு ரிஸ்க் எடுப் பவர்கள் லார்ஜ்கேப் ஃபண்ட் & மிட்கேப் ஃபண்டுகளிலும் அதிக ரிஸ்க் எடுப்பவர்கள் மிட்கேப், ஸ்மால்கேப், செக்டோரல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம். முதலீட்டுக் காலம் சுமார் 3 முதல் 5 ஆண்டுகள் என்கிற பட்சத்தில், லார்ஜ்கேப், ஃபிளெக்ஸிகேப், மல்ட்டிகேப் ஃபண்டுகளிலும், சுமார் 5 – 8 ஆண்டுகள் எனில், லார்ஜ் கேப் ஃபண்ட் & மிட்கேப் ஃபண்டுகளிலும் எட்டு ஆண்டு களுக்குமேல் எனில், மிட்கேப், ஸ்மால்கேப், செக்டோரல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம்.