பெண்களுக்கான முதலீடு தங்கம் அல்லது ரியல் எஸ்டேட் எது பெஸ்ட்?
பெண்கள் தங்கத்தை வாங்குவதிலும், ஆண்கள் நிலத்தை வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவது வழக்கம். ஆனால் சமீப காலங்களாக பெண்கள் தங்கத்தை விட ரியல் எஸ்டேட்டில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். பொதுவாக பெண்கள் தங்கத்தில் முதலீடு செய்வதிலும், ஆண்கள் வீடு, நிலம் வாங்குவது போன்ற ரியல் எஸ்டேட்டுகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.
இருப்பினும் இந்த சூழல் மாறி தற்போது பெண்களும் படிப்படியாக ரியல் எஸ்டேட்டில் அதாவது நிலம், வீடு வாங்குவதில் தங்களின் ஆர்வத்தை அதிகப்படுத்துகின்றனர்.
பெண்கள் என்றாலே தங்கத்தின் மீதான மோகம் இருக்கும் போது, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய ஆர்வம் காட்ட என்ன காரணம்? என நாமும் தெரிந்துக்கொள்வோம்.
இன்றைக்கு உள்ள பொருளாதார சூழலில் தங்கம் ஒரு நல்ல முதலீட்டுத் தேர்வாகவும், உடனடி நிதி இலக்குகளை அடைய உதவும் ஒரு குறுகிய கால முதலீடாகக் கருதப்படுகிறது. ஆனால் ரியல் எஸ்டேட் என்பது நிலையான முதலீடாகும். மேலும் தற்போது இத்துறை வளர்ந்து வருவதால் பங்குச் சந்தையை விட ரியல் எஸ்டேட் சிறந்த வருமானத்தை வழங்குகிறது. எனவே எந்தவொரு சூழ்நிலையிலும் தங்கத்தை விட ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வது எப்போதும் சிறந்த வழியாக இருக்கும். நிலம், வீடு, காடு போன்ற ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் போது வரிச் சலுகைகள் நமக்கு கிடைக்கிறது.
ரியல் எஸ்டேட் துறையில் பெண் முதலீட்டா ளர்களை ஊக்குவிக்கும் வகையில் வங்கிகள் பல முயற்சிகளையும், சலுகைகளையும் நமக்கு வழங்குகிறது. குறிப்பாக பல பொதுத்துறை வங்கிகள் ஆண்களை விட பெண்களுக்கு வீட்டுக்கடன்களுக்குக் குறைந்த வட்டி விகிதங்களில் கடன்களை வழங்குகிறது. மேலும் பெண்கள் பெயரில் எந்த வகையான சொத்துக்களுக்கும் முத்திரை வரி விலக்கு அளித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும்: பணமதிப்பு மற்றும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கம் போன்றவை இந்தியப் பொருளாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதே சமயம் வீடு, நிலம் வாங்குவது போன்ற ரியல் எஸ்டேட்டில் மேற்கொள்ளப்படும் முதலீடு பொருளாதாரத்தின் வளர்ச்சியை எளிதாக்க உதவுவதாக உள்ளது.
மேலும் தங்கம் பெரும்பாலும் மூலதனப் பொருட்கள் மற்றும் எரிபொருள் போன்ற பொருட்களின் விலைகளை உயர்த்துவதற்கு வழிவகுக்கிறது.
இதுபோன்ற பல்வேறு நன்மைகள் இருப்பதால் ஆண்களுக்கு இணையாக பெண்களும் வீடு,நிலம், வீட்டுமனை, தோட்டம் போன்றவற்றை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.
அதே சமயம் தங்களிடம் உள்ள பணத்தை வைத்து நகைச்சீட்டுகள் போட்டு தங்கத்தை சிறுக சிறுக சேமித்து வருகின்றனர் பெண்கள். என்ன தான் கணவர்கள் அல்லது பெற்றோர்கள் கடைசி வரை உடன் இருந்தாலும் தங்களுக்கென்று ஒரு முதலீடு தேவை என்பதில் பெண்கள் முனைப்புடன் உள்ளனர்.