லாபம் கடைக்கு, நஷ்டம் மக்களுக்கு.. நகரில் நகைக்கடைகள்
பெருகுவது ஏன்?
எந்த டிவியை ஆன் செய்தாலும், நம்ம முன்னாடி அதிகமாக வந்து செல்லும் விளம்பரம் சேதாரம் இல்லை, செய்கூலி இல்லை, தரமான நகை, பாரம்பரிய கடை என்று பல்வேறு கவர்ச்சி வார்த்தைகளால் நம் மூளையை சலவை செய்வது நகைக்கடை விளம்பரம் தான்.
நாமும் அந்த கடையில விலை கம்பி, இந்த கடையில விலை கம்பி என்று கூறி கொண்டே தங்கநகை கடை ஏறி ரொக்கப்பணத்தை கொடுத்து தங்க நகைகள் வாங்குவோம். ஒரு சவரன் நகை ரூ.35,000 என வைத்துக் கொள்வோம். அந்த நகைக்கு சேதாரம் என்ற கணக்கில் 20 சதவீதம் பணத்தை நம்மிடம் இருந்து வசூல் செய்வார்கள். அதாவது, ரூ.7 ஆயிரத்தை நம் பாக்கெட்டில் இருந்து எடுத்து விடுவார்கள்.
ஆக மொத்தம் நாம் வாங்கும் போது ஒரு சவரன் நகை ரூ.42 ஆயிரத்தை எட்டி விடும். இதே நகையை நம் அவசரத்திற்காக, நாம் வாங்கிய அதே கடையில் மீண்டும் விற்க செல்கிறோம். அப்போது ஒரு சவரன் நகையை ரூ.33 ஆயிரத்து 950க்குத்தான் வாங்கி கொள்ள முன் வருகிறார்கள்.
என்னங்க… நகையை சவரன் ரூ.42 ஆயிரத்துக்கு வாங்கி 4 நாள் தான் ஆகிறது. அதற்குள் ரூ.8 ஆயிரத்து 50 நஷ்டத்திற்கு கேட்பது நியாயமா என்று கேட்டால் அதற்கு அவர்கள் சொல்லும் பதில் நாங்க தங்க நகை விற்கும் போது சவரனுக்கு 20 சதவீதம் சேதாரம் கழிக்கிறோம்.
அதை தாங்கள் தான் தர வேண்டும். அதேபோல உங்களிடம் இருந்து நகை வாங்கும் போது, உங்களிடம் இருந்து 3 சதவீதம் அதாவது சவரனுக்கு ரூ.1050 சேதாரம் பெறுகிறோம். இதுதானே… நகை கடைகளின் நடைமுறை என்கிறார்கள். அதன்படி பார்த்தால், கடைகளின் நகை வாங்கினாலும் கடைக்குத்தான் லாபம். விற்றாலும் கடைக்குத்தான் லாபம்.