ரூ.399-ல் ரூ.10 லட்சத்திற்கான விபத்து காப்பீடு தபால் துறை புது அறிமுகம்
தபால் துறையின் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியானது டாடா ஏஐஜி, ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ரூ.399-ல் பத்து லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஏழை மக்களுக்கும் காப்பீட்டுத் திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில் நாடு முழுவதும் உள்ள தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலம் மிகக் குறைந்த பிரீமியம் தொகையுடன் கூடிய டாடா ஏஐஜி ‘குழு விபத்து காப்பீடு’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் 18 முதல் 65 வயதுள்ளவர்கள் சேரலாம்.
தங்கள் பகுதியில் உள்ள தபால்காரர் மூலம் விரல் ரேகையைப் பதிவு செய்து ரூ.399 செலுத்தி 5 நிமிடங்களில் காப்பீட்டு திட்டத்தில் இணையலாம்.
விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், பகுதி ஊனம், பக்கவாதம் ஏற்பட்டால் ரூ.10 லட்சம், விபத்தினால் ஏற்படும் மருத்துவச் செலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.60 ஆயிரம், புறநோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரம்), விபத்தினால் மரணம், பக்கவாதம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்விச் செலவுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.
விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு தினப்படி தொகையாக ரூ.1000 (9 நாட்களுக்கு), விபத்தில் பாதிக்கப்பட்டவரைப் பார்க்கச் செல்லும் குடும்பத்தினரின் பயணச் செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.25 ஆயிரம், விபத்தில் ஒருவர் உயிரிழக்க நேரிட்டால் ஈமக்கிரியை செய்ய ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படும்.
தபால் துறை அதிகாரிகள் கூறுகையில்,‘‘விபத்து காப்பீடு திட்டத்தில் இணைவதன் மூலம் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உடல் நலம், நிதி நெருக்கடிகளையும், உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்யலாம்’’ என்றனர்.