Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

“மலிவு விலை உணவகம்” நம்ம மலைக்கோட்டை அருகில்(வீடியோ)

“மலிவு விலை உணவகம்” நம்ம மலைக்கோட்டை அருகில்

திருச்சி, மலைக்கோட்டை, வடக்கு ஆண்டார் வீதியில் உள்ள ஸ்ரீ தில்லை காளியம்மன் மெஸ்ஸில் இட்லி, தோசை, புரோட்டா, சிக்கன் ரைஸ், சிக்கன் நூடுல்ஸ், டிக்கா, ஆம்லெட், கலக்கி, ஊத்தாப்பம், ஆனியன் ஊத்தாப்பம் என்ற சத்தம் ஜோரா கேட்க வாகனத்தை நிறுத்தியவாறு, சத்தம் கேட்ட ஹோட்டலை கவனிக்கத் தொடங்கினோம். இங்கு இட்லி, புரோட்டா, பூரி, சப்பாத்தி என எல்லாம் 5 ரூபாய் தான். தோசை 10 ரூபாய். பொடி தோசை, ஆனியன் தோசை 20 ரூபாய் என்ற விளம்பர பதாகை நம்மையும் உள்ளே அழைத்துச் சென்றது.

கஸ்டமர்கள் ஆர்டர் சொல்ல, அதை சப்ளையர்கள் ராகத்தோடு மாஸ்டரிடம் தெரிவிக்க, மிக லாவகமாக சமைக்கப்படும் சிக்கன் ரைஸ், சிக்கன் நூடுல்ஸ் என வெரைட்டிகள் நம் மூக்கை துளைக்க நம்மையும் இலை போடச் சொல்லி அமர வைத்துவிட்டது.

இலை முன் அமர்ந்தவுடன், என்ன ஆர்டர் செய்யலாம் வெஜ்ஜா, நான்வெஜ்ஜா என்ற மனதில் எழுந்த கேள்வியுடன் அங்கிருந்த உணவுப் பட்டியல் பார்த்த நம்மை திக்குமுக்காடச் செய்கிறது. ஆமாம் சுவர் முழுக்க இருக்கக் கூடிய வெரைட்டிகளைப் பார்த்து எதை ஆர்டர் செய்யப் போகிறோம் என்பதில் பெரும் சிக்கல் எழுந்தது. எக்கச்சக்க வெரைட்டிகள். தயிர் சாதம், லெமன் சாதம் என்று தொடங்கி சிக்கன், மட்டன் குடல், வறுவல், பொரியல் என் பலப்பல ஐட்டங்கள். இவை அனைத்தும் குறைந்த விலையில் என்பது தான் கடையின் சிறப்பு.

சாப்பிட்ட வாடிக்கையாளர் ஒருவர் நம்மிடம் கூறிகையில், “தோசை சாப்பிட்டேன். வெறும் 10 ரூபா தான். டேஸ்ட் நல்லா இருந்துச்சு, தரத்திலும் குறைவில்லை. குழம்பு சட்னி எல்லாம் கேட்க கேட்க வைச்சாங்க” என்றார்.

மற்றொரு வாடிக்கையாளர், “இந்த கடைக்கு இப்போ தான் முதன்முறையா வர்றேன். வெளியே இருக்கிற விலைப்பட்டியலை பார்த்தவுடன் தான் உள்ளே நுழைந்தேன். சிக்கன் ரைஸ் சாப்பிட்டேன். ருசியாகவும், தரமாகவும் இருந்தது. இனி அடிக்கடி இந்த ஓட்டலுக்கு சாப்பிட வருவேன். காரணம் விலையும் குறைவு, ருசியும் அதிகம்…” என்கிறார்.

“ஹாஸ்டலில் தங்கிப் படிப்பவர்கள், சிறு கடை வியாபாரிகள், தொழிலாளர்கள் என ஏராளமானோர் புழங்கும் இடமாக இந்த இடம் உள்ளது. அவர்களுக்கு ஏற்றாற் போல் விலை குறைவாக உணவு வழங்க முடிவு செய்தே இந்த டிபன் கடையை தொடங்கினோம்” என்று கூறிய கடை உரிமையாளர் பார்த்திபன் நம்மிடம் மேலும் கூறுகையில்,

“காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் எங்கள் டிபன் கடை செயல்படுகிறது. காலையில் இட்லி, தோசை, பொங்கல் போன்ற டிபன் வகைகளும், மதியம் சிக்கன், மட்டன், மீன் என அசைவ சாப்பாடும், இரவில் செட்டிநாடு வகைகள், சைனீஷ் உணவுகள் உட்பட அனைத்து நான்வெஜ் வகைகளும் செய்து தருகிறோம். ஹோட்டலை சுற்றி கல்லூரி ஹாஸ்டல் இருப்பதால் இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் வந்து உணவை விரும்பி கேட்டு வாங்கிச் செல்கின்றனர்.

விலை குறைவு என்பதற்காக தரத்தை குறைப்ப தில்லை. தரம், ருசி இவை இரண்டும் எங்கள் டிபன் கடையை வாடிக்கையாளர்களை விரும்பச் செய்கிறது. மேலும் விலை குறைவு என்பதும் ஒரு முக்கிய காரணம். குறைந்த லாபம் கிடைத்தாலும் மன நிறைவு அடைகிறோம்”. என்றார் பெருமிதத்துடன். நீங்களும் வாங்களேன் காளியம்மன் மெஸ்ஸில் ஒரு பிடி பிடிப்போம்!

– இப்ராகிம்

Leave A Reply

Your email address will not be published.