உள்ளூர் மக்களே மறந்த விமானநிலையம் தமிழகத்தின் ஜிஎஸ்டி வரி கர்நாடகாவுக்கு…
மத்திய அரசின் பயணிகள் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் “உள்ளூர் இணைப்புத் திட்டம்“ (RCS – Regional Connectivity Scheme) அடிப்படையில், கடந்த 25/03/2018 அன்று “ட்ரூ ஜெட்” என்ற விமான நிறுவனமானது சென்னை மற்றும் சேலத்திற்கு இடையில் தினசரி சேவையைத் தொடங்கியது. இந்த வழித்தடத்தில் “ட்ரூ ஜெட்” விமானம் 72 இருக்கைகள் கொண்ட ATR 72 வகை விமானத்தை இயக்கியது.
உள்ளூர் இணைப்புத் திட்டத்தின் கீழ் மாநில அரசானது அங்கீகரிக்கப்பட்ட விமான வழித்தடத்தில் சில குறிப்பிட்ட மானியங்களையும் சலுகைகளையும் விமான நிறுவனத்திற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இருக்கும். அதற்குப் பின்னரும் மாநில அரசு விரும்பினால் ஒப்பந்தத்தை நீட்டித்துக் கொள்ளலாம். இதன் அடிப்படையில் மாநில அரசானது கடந்த 24.03.2020 வரை சலுகைகளை விமான நிறுவனத்திற்கு வழங்கியது. அதன் பின்னர் சலுகைகள் வழங்கப்படாததாலும், இடையில் கொரோனா பாதிப்பின் காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைந்ததாலும் படிப்படியாக “சென்னை – சேலம்“ வழித்தடத்தில் “ட்ரூ ஜெட்” விமான நிறுவனமானது சேவைகளைக் குறைத்து தற்போது முற்றிலும் நிறுத்திவிட்டது.
விமான நிறுவனம் சேவை வழங்கிய காலகட்டத்தில், “சென்னை-சேலம்-சென்னை” வழித்தடத்தில் பயணித்த பயணிகள் எண்ணிக்கையானது 2018&-19 நிதியாண்டு 40,804, 2019&-20 நிதியாண்டு 38,194 என்ற அளவில் இருந்தது.
இருக்கைகளின் ஆக்கிரம்பு சதவீதத்தின் அடிப்படையில், 2018&-19 நிதியாண்டு 78% 2019-&20 நிதியாண்டு 73% என்ற அளவில் இருந்தது. மேலும் இந்த ஒற்றை விமான சேவையானது சேலத்தின் விமானப் பயணிகளின் எண்ணிக் கையை கணிப்பதற்கான அளவுகோல் அல்ல.
ஏனெனில் இந்த “ட்ரூ ஜெட்” விமான நிறுவனம் இந்தியாவின், ஏர்இந்தியா, இண்டிகோ, விஸ்த்தரா, கோ ஏர், ஸ்பைஸ் ஜெட், ஏர் ஏசியா இந்தியா போன்ற விமான நிறுவனங்களை ஒப்பிடுகையில் மிகச் சிறிய விமான நிறுவனமாகும். இதன் பெரும்பாலான சேவைகள் தென்னிந்தியாவில், உள்ளூர் இணைப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகளே ஆகும். மேலும் இந்த “ட்ரூ ஜெட்” விமான நிறுவனத்திற்கு பம்பாய், டெல்லி, கல்கத்தா போன்ற பெரிய விமான நிலையங்களுக்கு சேவை இல்லை. மேலும் சேலத்தில் இருந்து செல்லும் விமான பயணிகளுக்கு ஒரே பயணச்சீட்டில் (Through Check-in) பம்பாய், டெல்லி, கல்கத்தா, ஹைதராபாத் போன்ற பெரிய விமான நிலையங்களுக்கு பயணிக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது.
இதனால் “சேலம் மற்றும் சென்னை” விமான சேவையானது “புறப்படுமிடம் மற்றும் சேருமிடம்“ (O-D – Origin & Destination) சார்ந்த பயணிகளை மட்டுமே சார்ந்திருந்தது. இதுவே 78% வரை இருக்கைகள் ஆக்கிரமிப்பு சதவீதம் இருந்தது. இந்த சேவையின் வெற்றியையே காட்டுகிறது. உண்மையிலேயே சேலத்தின் விமானப்பயணிகள் எண்ணிக்கை இதைக் காட்டிலும் மிக அதிகம்.
கர்நாடகா செல்லும் தமிழக வருமானம்
எப்படி எனில், சேலம் மற்றும் சுற்றுப் புறங்களில் உள்ள மக்கள், சேலத்தில் இருந்து விமானசேவைகள் இல்லாததால், வழக்கமாக பெங்களூர் சென்றே பழகிவிட்டார்கள். அதுவும் பெங்களூரு சென்று விட்டால் கிட்டத்தட்ட இந்தியா முழுமைக்கும் நேரடி விமானசேவைகள் உள்ளதால் பொதுமக்களுக்கும் அப்படியே பழகிவிட்டார்கள். அதனால் உள்ளூரில் ஒரு விமானநிலையம் இருப்பதையே மக்கள் மறந்து விட்டனர். ஏனெனில் அவர்களின் விமானப் பயணம் தொடர்பான தேவைகள் நிறைவேறிவிடுகிறது. ஆனால், சேலம் விமானநிலையம் முழுமையான பயன்பாட்டிற்கு வராததால், சேலம், அதன் சுற்றுப்புறத்திற்கும் ஏன் தமிழ்நாடு அரசிற்குமே மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. எவ்வாறெனில், தோராயமாக மிகக்குறைந்த அளவில், குறைந்தது நாளொன்றிற்கு 500 பயணிகள் சேலம் விமானநிலையம் வழியாக இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கும், அதேபோல் குறைந்தது நாளொன்றிற்கு 500 பயணிகள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சேலத்திற்கும் பயணிக்க வேண்டிய பயணிகள் பெங்களூரு விமானநிலையத்தை பயன்படுத்துகின்றனர். அதாவது நாளொன்றிற்கு குறைந்தது 1,000 பயணிகள் சேலம் விமானநிலையத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக பெங்களூரு விமானநிலையத்தை பயன்படுத்துகின்றனர். இந்த பயணிகளின் பயணக்கட்டணம் சராசரியாக 5,000 எனில், நாளொன்றிற்கு குறைந்தபட்சம் 50,00,000.
சேலத்தில் புழங்க வேண்டிய பொருளாதார மானது, சேலம் விமானநிலையம் பயன்பாட்டில் இல்லாததால், பெங்களூருவுக்கு சென்று விடுகிறது. இதில் ஒரு பாதியான 25,00,000 (மற்றொரு பாதி பிற விமானநிலையங்களில் பயன்படுத்தப்படும்) நமது சேலத்தின், தமிழ்நாட்டின் பொருளாதார வளம் கர்நாடகாவால் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்த பயணக்கட்டணம் தொடர்பான நிஷிஜி ஆனது 18% அளவில் நாளொன்றிற்கு 9லட்சம். இதில் பாதி நமது சேலத்திலும் மீதி பிற விமானநிலையங்கள் உள்ள மாநிலத்திற்கானது.
“சென்னை&சேலம்“ வழித்தடம் என்றால் முழுவதும் தமிழ்நாட்டிற்கு வரவேண்டியது. இப்படி நமது தமிழ்நாட்டின் GST, தமிழ் மக்களின் விமானப்பயணத்தால் பெறப்படும் GST, கர்நாடகா மாநிலத்திற்கு சென்று விடுகிறது. தமிழ்நாட்டின் பொருளாதார இழப்பு, கர்நாடகாவின் பொருளாதார வளமாகிறது. இந்தக் கணக்குகள் குறைந்தபட்ச மதிப்பீடுகளே ஆகும். உண்மையான பொருளாதார இழப்பானது இதைவிட அதிகமாகவே இருக்கும்.
சேலம் விமானநிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர எளிய வழி :
தமிழ்நாடு அரசானது, உள்ளூர் இணைப்பு திட்டத்தை (RCS) செயல்படுத்தி சிறிய விமான நிறுவனங்களை வைத்து சேலம் விமானநிலையத்தை செயலாக்கத்திற்கு கொண்டு வருவதால் எந்த பயனும் இல்லை. இதைவிடுத்து, தற்போது இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான “இண்டிகோ” விமான நிறுவனத்திடம் பேசி, சேலத்திற்கான தேவை, வளம், எதிர்கால வளர்ச்சி போன்றவற்றை விளக்கிச் சொன்னால் அவர்களே விமான சேவையை சேலத்தில் தொடங்கி விடுவார்கள்.
இண்டிகோவிடம் சேலத்தில் இறக்கி ஏற்றக்கூடிய ATR வகை விமானங்கள் நிறைய உள்ளது. இவற்றின் மூலம், சென்னை, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு சேவை தொடங்கினால், அங்கிருந்து இணைப்பு விமானங்கள் மூலம் இந்தியா முழுமைக்கும் பயணிக்கலாம். சேலத்தை சார்ந்த பயணிகள் தங்கள் விமானப்பயண தேவைக்கு பெங்களூரு செல்ல வேண்டிய அவசியமில்லை. இதனால் விமானப்பயணம் சார்ந்த பொருளாதார வளம் பெங்களூருக்கு செல்லாமல் தமிழ்நாட்டிலேயே பயன்படுத்தப்படும். GST வரி வருவாயும் நமக்கு கூடுதலாக கிடைக்கும். தமிழ்நாடு அரசு இதற்கு முயற்சிக்கவேண்டும்.
சேலம் விமானநிலையத்தை மேம்படுத்த என்ன வழி?
ஏற்கனவே மத்திய அரசின் பயணிகள் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகமானது விமானநிலைய விரிவாக்கத்திற்காக 570 ஏக்கர் நிலம் கேட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டின் அனைத்து விமானநிலையங்களும் சென்னை, திருச்சி உட்பட அடுத்தகட்ட வளர்ச்சியை அடையாமல் தடைபடுவதற்கு அதிமுக்கிய காரணம் விமான ஓடுதள விரிவாக்கம் தாமதமே. இதற்குக் காரணம் அனைத்து விமானநிலையங்களிலும் ஓடுதள விரிவாக்கத்திற்கு தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்தலில் உள்ள தாமதமே.
சேலத்தைப் பொறுத்து இந்த விமானநிலைய ஓடுதளத்தின் நீளமானது 5,965 அடி மட்டுமே. இதில் ATR வகை விமானத்தை மட்டுமே இறக்கி ஏற்ற முடியும். தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்தி ஓடுதளத்தை விரிவாக்கும் பட்சத்தில் சேலம் விமானநிலையம் அடுத்தகட்ட வளர்ச்சியைப் பெறும் என்பதில் ஐயப்பாடு இல்லை. மேலும் தமிழ்நாடு அரசானது தற்போது சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, தூத்துக்குடி ஆகிய விமானநிலையங்களில், ஓடுதள விரிவாக்கம் மற்றும் விமானநிலைய விரிவாக்கம் தொடர்பான நிலம் கையகப்படுத்தல் விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இந்த வரிசையில் சேலம் விமானநிலைய விரிவாக்கம் தொடர்பாகவும் கூடுதல் கவனம் செலுத்தினால் சேலம் விமானநிலையமும் இந்திய அளவில் ஒரு முக்கிய இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.
சேலம் விமானநிலையம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் GST உள்ளிட்ட வரி வருவாய், பொருளாதாரப் பலன்கள் மட்டுமன்றி, சரக்கு ஏற்றுமதியும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது உலகப்புகழ் பெற்ற சேலம் மல்கோவா மாம்பழங்கள், பழங்கள் காய்கறிகள் போன்றவையும் பெங்களூர் வழியாகவே ஏற்றுமதியாகிறது. ஏற்றுமதி தொடர்பான, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் அன்னியச்செலாவணியும் கர்நாடக ஏற்றுமதியாளர்களால் கர்நாடகாவிற்கே செல் கிறது. சேலம் விமானநிலையம் பயன்பாட்டிற்கு வருமானால் இவை அனைத்தும் சேலத்திற்கே, தமிழ்நாட்டிற்கே கிடைக்கும். நமது மாநில ஏற்றுமதியாளர்கள், விவசாயிகள் பலனடைவர்.
தமிழ்நாட்டில், தலைநகரமான சென்னை தவிர்த்து, ஒரு மில்லியனுக்கு மேல் மக்கள் தொகையுள்ள திருச்சி, கோயம்புத்தூர், மதுரை போன்ற ஊர்களில் உள்ள விமான நிலையங்கள் மாதத்திற்கு ஒரு லட்சத்திற்கு மேல் விமானப்பயணிகளை கையாண்டு வரும்பட்சத்தில், இந்த நகரங்கள் அளவிற்கு மக்கள்தொகை, தொழில்வளம், பொருளாதார வளம் உடைய சேலத்தின் விமானநிலையமானது பயன்பாட்டில் இல்லாதது மிகப்பெரிய ஆச்சர்ய மாகும்.
சேலம் விமானநிலையம் மீண்டும் பயன்பாட்டிற்கு வருவதற்கு சேலத்தின், வியாபாரிகள் சங்கம், சேம்பர் ஆப் காமர்ஸ், கன்பெடரேசன் ஆப் இன்டியன் இண்டஸ்ட்ரீஸ், பிஸினஸ் நெட்வொர்க் இண்டர்நேசனல் போன்ற அமைப்புகள், வியாபாரிகள் கடுமையாக உழைக்க வேண்டும். தேவைப்படும் ஆலோசனைகளை நாம் வழங்கத் தயாராகவே உள்ளோம். தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, சேலம் விமானநிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு வர முயற்சிப்பார் என நம்புகிறோம்.
– உபயதுல்லா