இந்தியாவில் களமிறங்கும் ஆப்பிள்..!
அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு செயல்படும் உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், தனது தயாரிப்பு களைச் சீனாவில் தான் செய்து வருகிறது. தற்போது ஆப்பிள் நிறுவனம் 5இல் ஒரு பங்கு உற்பத்தியைச் சீனாவில் குறைத்துவிட்டு இந்தியாவில் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் புதிய உற்பத்தி தளத்தை எங்கு அமைப்பது. இதை எப்படிச் சாத்தியம் ஆக்குவது என்பது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், இந்திய அரசு அதிகாரிகளைச் சந்தித்து பேசி வருகின்றனர்.
அடுத்த 5 வருடத்தில் இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்குச் சுமார் 40 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆப்பிள் கருவிகள் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்தியாவில் உருவாகப்படும் அனைத்து ஆப்பிள் கருவிகளும், விஸ்ட்ரான் மற்றும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் மூலம் தான் தயாரிக்கிறது. ஆப்பிளின் திட்டம் நிறைவேறினால் சுமார் 40 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆப்பிள் கருவிகள் உள்நாட்டு மக்களால் உருவாக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
சீனாவில் ஒரு வருடத்திற்கு ஆப்பிள் சுமார் 220 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களைத் தயாரிக்கும் நிலையில், 185 பில்லியன் டாலர் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தினால் மட்டும் சீனாவில் சுமார் 48 லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கிறது. தற்போது இந்தியாவிற்கு ஆப்பிள் தனது உற்பத்தி தளத்தை மாற்றுவதன் மூலம் இந்தியாவில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனத் தெரிகிறது.