நேரமே இல்லை என அலட்டிக் கொள்பவர்களா நீங்கள்…
வேலைகள் குவிந்து கிடக்க நேரமே இல்லை என்று அங்கலாய்ப்புடன் வெற்றி பெற்றவர்களை பார்த்து ஏக்க பெருமூச்சு விடுகிறார்கள். அவர்களுக்கான ஒரு துருக்கி கதை இங்கே
துருக்கி நாட்டு மன்னன் வேட்டைக்கு சென்றான். இரவு வெகு நேரம் ஆகிவிட்டது.. அவனால் தனது அரண்மனைக்கு திரும்ப முடியவில்லை. அப்போது காட்டில் இருந்த ஒரு நெசவாளி வீட்டில் தங்கினான். நெசவாளிக்கு வந்திருப்பது மன்னன் என்று தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் என எண்ணி இருந்தான்.
காலையில் எழுந்த போது, நெசவாளி நூல் நூற்றுக் கொண்டிருந்தான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அந்த கயிறு எதற்கு? என்று அரசன் கேட்டதற்கு,
”தொட்டியில் தூங்குற என் குழந்தை அழுதுச்சுன்னாஞ் நெய்துக்கிட்டே குழந்தையை ஆட்டிவிடுவேன்.” என்று சொன்னான். நெசவாளனுக்கு அருகில் நீண்ட குச்சி ஒன்று இருந்தது. இது எதற்கு என்று அரசன் கேட்க, “வெளியில் என் மனைவி தானியங்களை காயப் போட்டிருக்கா. இதன் மறுமுனையில் கறுப்பு துணி கட்டியிருக்கு. அதை அசைச்சா காகம் பக்கத்தில வராது” என்றான்.
நெசவாளன் இடுப்பில் மணி கட்டி இருந்தான். “இது எதற்கு..?” என மன்னன் கேட்க, “வீட்ல எலி இருக்கு.. அப்பப்ப மணிகளை ஆட்டினா அது ஓடிவிடும்” என்றான்.
ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறுவர்கள் முகம் தெரிந்தது.
“இவர்கள் யார்..?” என்றான் மன்னன். “நெசவு செய்யிறப்ப வாய் சும்மா தான இருக்கு. அதனால எனக்கு தெரிஞ்ச பாடங்களை அந்த சிறுவர்களுக்கு நடத்துவேன்” என்றான். “ஏன் அவர்கள் வெளியில் நிக்கறாங்க”..? என ராஜா கேட்க, “வீட்டுக்கு வெளியே இருக்குற மண்ணை காலால் மிதிச்சிக்கிட்டு, என் பாடத்தை கேட்டுக்குவாங்க” என்றான்.
ஒரு மனிதன் விரும்பினால் ஒரே நேரத்தில் கற்றுத் தரவும், கற்றுக் கொள்ளவும், வேலை செய்யவும் முடியும். கவனமான கடின உழைப்பு இருந்தால் மட்டும் போதும். அது எப்போதும் பலன் தரும்.
நேரமே இல்லை என்று வேலைகளை ஒத்திப் போடுதல் ஒரு மாயை. செய்வதற்கு வேலைகள் இருந்தால் மனம் எப்போதும் சுறுசுறுப்போடும் உற்சாகத்தோடும் இருக்கும். உண்மையான பரவசம் அது தானே. இது தான் படைப்பாளி, ஆராய்ச்சியாளர், தொழில்முனைவோருக்கான மந்திர மூலிகை.!