வீடு வாங்க போறீங்களா? அவசியம் கவனிக்க வேண்டியவை!
சொந்த வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய 8 முக்கியமான விஷயங்களை தவறாமல் கவனித்தால், நீங்கள் வாங்கும் வீடு உங்கள் எதிர்காலத்தை மிகச் சிறப்பானதாக ஆக்கும். அந்த 8 விஷயங்கள் என்னென்ன?
வரலாறு முக்கியம்
முதலில், சரியான பில்டரைத் தேர்வு செய்வது மிக முக்கியம். பில்டர் இதற்குமுன் கட்டிக் கொடுத்த வீடுகளின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்பதை நேரில் சென்று பார்க்க வேண்டும்.மேலும், அந்த வீடுகளில் வசிப்பவர்களிடம் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது.
வீட்டில் வசிக்கப் போகிறீர்களா..?
நாம் வாங்கும் வீட்டில் சந்தோஷமாக வசிக்கப் போகிறோமா எனப் பலரும் நினைப்பதில்லை. நகரிலிருந்து 40 கி.மீ தொலைவில்தான் நம் பட்ஜெட்டுக்கு ஏற்ற வீடு கிடைக்கிறது என வாங்கிவிடுகிறார்கள். ஆனால், அந்த வீடு அவர்கள் குடும்பத்துக்கு எந்த நன்மையும் தருவதில்லை.. வாடகை வருமானமும் பெரிதாக இருக்காது.
அடிப்படை வசதிகள் அவசியம்..!
வேறு சிலர் புறநகரில் சென்று வசிக்கும் எண்ணத்துடன் வீட்டை வாங்குகிறார்கள். ஆனால், பிள்ளைகள் படிக்க நல்ல பள்ளிக்கூடம், போக்குவரத்து, மருத்துவமனை ஆகிய வசதிகள் இருக்கிறதா எனப் பார்ப்பதில்லை. எனவே, வீடு என்பது வசிக்க அத்தியாவசிய வசதிகளுடன் இருப்பது மிக அவசியமாகும்.
விலையை கவனிப்பது மிக முக்கியம்
சந்தை விலையைவிட மிகவும் குறைவான விலைக்கு ஒரு பில்டர் வீட்டை விற்கிறார் எனில், கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு பார்க்க வேண்டும். வீட்டின் கட்டுமானத் தரம் எப்படி இருக்கிறது என்பதை நல்ல பொறியாளரை வைத்துப் பரிசோதியுங்கள். விலை அதிகம் என்றாலும் நகர்ப் புறத்தில் வாங்குவது நல்லது.
அப்ரூவல் வாங்கியுள்ளதா பார்க்கவும்
நீங்கள் வாங்கப்போகும் வீட்டின் புராஜெக்டை ‘ரெரா’விடம் பதிவு செய்திருக்கிறார்களா, அதன் பதிவு எண் என்ன என்பதை அறிந்து, அதை ‘ரெரா’ வெப்சைட்டில் சரிபார்ப்பது அவசியம். நீங்கள் 10வது மாடியில் வீடு வாங்குகிறீர்கள் எனில், எத்தனை மாடி வரைக்கும் அப்ரூவல் வாங்கி இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துங்கள்.
கார்பெட் ஏரியா
‘ரெரா’ அமைப்பு வீட்டை கார்பெட் ஏரியா அளவின் அடிப்படையில்தான் விற்பனை செய்ய வேண்டும் என விதிமுறை கொண்டு வந்திருக்கிறது. அந்த வீட்டுக்கான கார்பெட் ஏரியா எவ்வளவு என்பது ‘ரெரா’ அமைப்பின் இணையதளத்தில் (https://www.rera.tn.gov.in/) இருக்கும்.
காமன் ஏரியாவையும் கவனியுங்கள்
காமன் ஏரியாவில் எதுவெல்லாம் அடக்கம் என வீடு வாங்கப் போகிறவர் அந்த பில்டரிடம் கேட்க வேண்டும். படிக்கட்டு, லிஃப்ட் ஆகியவற்றை சில பில்டர்கள் காமன் ஏரியாவில் சேர்த்திருப்பார்கள். சில பில்டர்கள் சுற்றுச்சுவர், கிளப் ஹவுஸ், கார் பார்கிங் ஆகியவையும் காமன் ஏரியாவில் வருகிறது.
ஆவணங்கள்தான் ஆணிவேர்
ஆவணங்களின் உண்மைத் தன்மை மிக முக்கியம். வீடு கட்டுமானம், டிசைன், லொகேஷன் எல்லாம் அருமையாக இருந்து, ஆவணங்களில் ஏதாவது பிரச்னை எனில், ஒட்டு மொத்தமாகப் பணமும் நிம்மதியும் போய்விடும்.ரெரா’ அமைப்பு வீடு வாங்குபவர்களின் பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விரைந்து தீர்த்து வைக்கிறது.
இனியாவது மேலே உள்ள விஷயங்களை கவனித்து வீடு வாங்கி, நிம்மதியாக இருங்கள்