அரசியல் சாயத்தில் தப்பித்த நிதிநிறுவனங்கள் மாட்டிக்கொண்டு விழித்த முகவர்கள், முதலீட்டாளர்கள்
PACL வீழ்ந்த வரலாறு... தொடர் 4
அரசியல் சாயத்தில் தப்பித்த நிதிநிறுவனங்கள் மாட்டிக்கொண்டு விழித்த முகவர்கள், முதலீட்டாளர்கள்
இந்தியா முழுக்க பிஏசிஎல் நிறுவனத்திற்கு எதிரான மனநிலை பரவத் தொடங்கியது. உழைத்து சம்பாதித்த பணம் நமக்கு இனி வராதா.? என்ற கவலை முதலீட்டாளர்களை தாக்கியது. அதன் விளைவாக ஏற்பட்ட கோபம் எல்லோரையும் முகவர்களின் வீட்டுவாசலை நோக்கி திரட்டியது. முகவர்களுக்கு இணக்கமான முதலீட்டாளர்கள் என்றால் சுமூகமாக பேசி அனுப்பிவிடுவர். அப்படியில்லாத பட்சத்தில் பெரும்பாலான முகவர்களின் தங்கள் சொந்த பணத்தையோ நகைகளை அடகு வைத்தோ விற்றோ முதலீட்டாளர்களுக்குரிய பணத்தை வட்டியின்றி முதலீடு செய்த பணத்தை மட்டும் கொடுத்து சமாதானப்படுத்தினார்கள்.
பணத்தை திருப்பித் தரும் வசதியற்ற முகவர்கள் முதலீட்டாளர்களின் கோபத்திலிருந்து தப்பிக்க தலைமறைவாகினர். முதலீட்டாளர்களின் கோபம் முகவர்களை தாக்கியது என்றால் முகவர்களின் கோபம் நிறுவனத்தின் கிளை அதிகாரிகளை தாக்கியது.
தமிழகமெங்கும் முகவர்களை அழைத்து நம்பிக்கை கூட்டம் நடைபெற்றது. “பத்திரிக் கைகளில் வரும் செய்திகளை நம்பாதீர்கள். சில முதலீட்டாளர்களுக்கு கொடுக்கப்பட்ட காசோலை திரும்பியதற்கு காரணம் நிர்வாக சிக்கல்கள் தானே தவிர பணம் இன்றி திரும்பவில்லை. மேலும் முகவர்கள் முன்பு போல் சரியாக வேலை செய்வதில்லை. நிறுவனத்திற்கு நிதி வருவதற்கு ஏதுவாக உழைப்பதில்லை. அதனால் தான் நிறுவனத்திற்கு பண நெருக்கடி ஏற்பட்டது. நம் முதலாளியிடம் எண்பதாயிரம் கோடிக்கு மேல் பணம் இருக்கிறது. எனவே பணம் திரும்பக் கிடைக்காது என்ற அச்சம் வேண்டாம். முதலீட்டா ளர்கள் அனைவருக்கும் பணம் கிடைக்கும்.
ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நம் நிறுவனத்துக்கு ஆட்சியாளர்கள் கொடுக்கும் நெருக்கடி தான் நம் இந்த நிலைக்கான காரணம். ”காங்கிரஸ் அரசாங்கத்துக்கு நமது நிறுவனம் தேர்தல் செலவுக்கு பணம் தரவில்லை. அதனால் தான் நம் அலுவலகத்திற்கு சிபிஐ ரெய்டு நடத்தப்படுகிறது. அடுத்து பிஜேபி அரசாங்கம் வந்துவிட்டால் நமக்கு எந்த சிக்கலும் இருக்காது” என்றெல்லாம் நிறுவனத்திற்கு ஆதரவாக பேசி முகவர்களை சமாதானப்படுத்தினர்.
‘நம்மை நம்பி வந்த முதலீட்டாளர்களின் பணத்தை நிறுவனத்திடம் இருந்து முதலீட்டாளர் களுக்கு திரும்ப பெற்றுத் தரும் வரை நிறுவனம் சொல்வதை கேட்டுக் கொண்டிருப்பதை தவிர வேறு வழி இல்லை என்ற நிலைக்கு முகவர்கள் தள்ளப்பட்டனர். இதையடுத்து நாடு முழுவதும் உள்ள பிஏசிஎல் கிளைகளை அந்நிறுவனம் மூடியது.. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிலம் மற்றும் சொத்துகளை விற்று 6 மாதங்களுக்குள் முதலீட்டாளர்களுக்கு பணத்தை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், நீதிபதி ஆர்.எம். லோதா (ஓய்வு) தலைமையில் கமிட்டி ஒன்று அமைத்து இப்பணிகளை செய்யப் பணித்தது. அதன்படி, ஒரு கமிட்டியை செபி (இந்திய பங்கு, பரிவர்த்தனை வாரியம்) அமைத்தது.
இதற்கிடையே பிஏசிஎல் நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் குறைகளைக் கேட்டதோடு பிஏசிஎல் நிறுவனத்தின் சொத்துகளை மதிப்பீடு செய்து அதை விற்பனை செய்யும் பணியிலும் செபி ஈடுபடத் தொடங்கியது.
அடுத்த கட்டமாக முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பித் தர செபி நடவடிக்கை மேற்கொண்டது. பாதிக்கப்பட்டவர்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் எனவும் அறிவிப்பு வெளியிட்டது. இவையெல்லாம் 2016ல் தொடங்கி நடந்து வந்தது. என்றாலும் 3 ஆண்டுகளை கடந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், பிஏசிஎல் நிறுவன முதலீட்டாளர் களுக்கு நிபந்தனையின்றி முதிர்வுத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தி பிஏசிஎல் முதலீட்டா ளர்கள், பிஏசிஎல் களப்பணியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பிஏசிஎல் போராட்டக் குழுவினர் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த 2019ம் ஆண்டு சென்னை, அண்ணா சாலையில் உள்ள செபி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அலுவலகத்தின் உள்ளே காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் செபி அலுவலகத்துக்குள் திரண்டு போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு உடனடியாக பணத்தை வழங்க வேண்டும்“ என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷ மிட்டனர்.