பெங்களூரு தொழிலதிபரை மிரட்டி ரூ.1.5 கோடி பறிப்பு
பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் அலுவலகத்தில் சோதனை நடத்தப் போவதாக மிரட்டி, அவரிடம் ரூ.1.5 கோடி பறித்த ஜிஎஸ்டி அதிகாரிகள் 4 பேரை கர்நாடக மத்திய குற்றப்பிரிவு போஸீஸார் நேற்று கைது செய்தனர்.
பெங்களூருவில் உள்ள ஜீவன்பீமா நகரை சேர்ந்தவர் கேஷவ் தக் (48), அவர் மெக்ஸோ சொல்யூஷன்ஸ் என்ற தனியார் நிறுவனத்தை கடந்த 6 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்நிலையில், கர்நாடக மத்திய குற்றப்பிரிவு போஸீஸில் கடந்த 8-ம் தேதி அவர் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், ”பெங்களூரு மத்திய மண்டல ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவின் ஆணையர் அபிஷேக், மூத்த புலனாய்வு அதிகாரிகள் மனோஜ் சைனி, நாகேஷ் பாபு மற்றும் சோனாலி சஹே ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி எனது அலுவலகத்துக்கு வந்தனர். எனது நிறுவனம் வரி செலுத்தியதில் ரூ.45 கோடி மோசடி செய்ததாக கூறினர்.
இதனால் நான் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்த அதிகாரிகள், அதிலிருந்து தப்பிக்க ரூ.3 கோடி தர வேண்டும். இல்லாவிட்டால் உங்களது அலுவலகத்தில் சோதனை நடத்தி, அனைவரையும் கைது செய்துவிடுவதாக மிரட்டினர். இதையடுத்து நான், அடுத்த 2 தினங்களில் என்னை சந்தித்த அதிகாரிகள், உண்மையாகவே ஜிஎஸ்டி துறையை சேரிந்தவர்களா என விசாரித்தேன்.
விடுதியில் அடைத்து வைத்து…
அதில் உண்மை என தெரியவந்தால், செப்டம்பர் 1-ம் தேதி அந்த அதிகாரிகளை சந்தித்தேன். என்னை காரில் அமர வைத்து பேசிய அபிஷேக் உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக ரூ.3 கோடியை கொடுக்குமாறு கட்டாயப்படுத்தினர். இதையடுத்து, எனது தொழில் கூட்டாளிகள் முகேஷ் ஜெயின், ராகேஷ் சந்தன் ஆகியோரிடம் ரூ.1.5 கோடி வாங்கி அவர்களுக்கு கொடுத்தேன். மேலும் எங்கள் மூவரையும் தனியார் விடுதிக்கு அழைத்து சென்று தனித்தனிஅறையில் அடைத்து வைத்து ரூ.2 கோடி கேட்டு மிரட்டினர்.
ஆனால் அந்த பணத்தை எங்களால் ஏற்பாடு செய்ய முடியாததால் செப்டம்பர் 3-ம் தேதி எங்களை விடுவித்தனர். 3 நாட்களுக்குள் மீதமுள்ள பணத்தை தராவிட்டால் 3 பேரையும் கைது செய்துவிடுவதாக மிரட்டினர்” என கேஷவ் தக் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போஸீஸார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தனித்தனியாக விசாரித்தனர். அதில் அவர்கள் கேஷவ் தக்கை மிரட்டி ரூ.1.5 கோடி பணம் பறித்தது தெரிவந்தது.
இதையடுத்து, ஜிஎஸ்டி அதிகாரிகள் அபிஷேக், மனோஜ் சைனி, நாகேஷ் பாபு மற்றும் சோனாலி சஹே ஆகிய நால்வரையும் போஸீஸார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 32 செல் போன்கள், 2 மடிக் கணினிகள், 50 காசோலை புத்தகங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நால்வரையும் ஆஜர்ப்படுத்திய போஸீஸார், 10 நாட்கள் காவலில் எடுத்து, தனித்தனியாக விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போஸீஸாரிடம் விசாரித்தபோது, ”நால்வரிடம் இருந்து இதுவரை எந்தப் பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை. ஆனால் அவர்களின் வங்கிக் கணக்கை ஆராய்ந்ததில் மோசடி நடந்தது தொடர்பான பரிவர்த்தனைகள் பதிவாகி இருப்பதை உறுதி செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.