தஞ்சாவூர், செப்.13 காசோலை விவகாரத்தில் வங்கியின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தஞ்சாவூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் ரெட்டிப்பாளையம் சாலை விக்டோரியா காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (37). மருந்து மொத்த விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வரும் இவர், தளியார் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். தனது நண்பருக்கு ரூ.5 லட்சம் கடனாக கொடுத்தார். இந்த கடனை திரும்ப செலுத்தும் விதமாக, அந்த நண்பர் தான் கணக்கு வைத்துள்ள வங்கி கிளையின் ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கினார்.
காசோலையை பெற்று கொண்ட சுப்பிரமணியன், தனியார் வங்கி கிளையில் வசூலுக்காக கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி ஒப்படைத்தார். இதற்கிடையில் காசோலையை வழங்கிய நண்பர், வங்கியை தொடர்பு கொண்டு அந்த தொகையை வழங்க வேண்டாம் என நிறுத்தி வைத்துள்ளதாக சுப்பிரமணியன் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது.
இது தொடர்பாக, சுப்பிரமணியன் 2023 நவம்பர் 18ம் தேதி தனியார் வங்கி கிளையை அணுகி, ஒப்படைத்த காசோலை திருப்பப்பட்டதற்கான வங்கி குறிப்பாணையை கேட்டார். அப்போது வங்கி ஊழியர், காசோலையை கொடுத்த நபர், வங்கிக்கு வந்து காசோலையை பெற்று கொண்டு சென்று விட்டார்.
2023 நவம்பர் 20ம் தேதி வங்கிக்கு வந்தால் அவரிடம் இருந்து காசோலையை பெற்று தருவதாக சுப்பிரமணியன் வங்கிக்கு சென்று, காசோலை குறித்து கேட்ட போது, காசோலை அசலையும், காசோலை திருப்பப்பட்டதற்கான வங்கி குறிப்பாணையையும் உங்களது நண்பர் வாங்கி கிழித்துவிட்டதாகவும், நகல் தருகிறோம், இல்லாவிட்டால் கோர்ட்டில் வழக்கு போட்டு கொள்ளுங்கள் என வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன், தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த ஆணைய தலைவர் சேகர், உறுப்பினர் வேலுமணி ஆகியோர், தஞ்சாவூர் தனியார் வங்கி மேலாளர் காசோலை மூலம் கிடைக்க வேண்டிய ரூ.5 லட்சமும், தனியார் வங்கி தஞ்சாவூர் மேலாளர் மற்றும் சென்னை அலுவலக மண்டல மேலாளர் ஆகியோர் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ சேவை குறைபாட்டினால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 லட்சமும், வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரமும் என மொத்தம் ரூ.15 லட்சத்து 10 ஆயிரத்தை சுப்பிரமணியனுக்கு 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என தீர்ப்பு அளித்தனர்.