ரூ.1 லட்சம் மற்றும் 50% மானியத்துடன் ஆழ்துளைக் கிணறு அமைக்க வங்கிக்கடன்
திருச்சி மாவட்டத்தில் 2021&-2022ம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொரு ளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்த புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை வங்கிக்கடன் மற்றும் அதற்கு இணையான 50 சதவீதம் அரசு மான்யம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை பின் நிகழ்வு மானியமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் சாதிச் சான்று, இருப்பிடச் சான்று இணைக்க வேண்டும். விண்ணப்பதாரர் சிறு குறு விவசாயி என்பதற்கான சான்றினை தாசில்தாரிடம் பெறவேண்டும்.
நிலஉடமைக்கு ஆதாரமாக கணினி வழிப் பட்டா மற்றும் அடங்கல் நகல் இணைக்க வேண்டும். தகுதியுடைய விவசாயிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம் என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தெரிவித்துள்ளார்.