அழகுக்கலைக்கு தேவையான அடிப்படை அறிவியல்..!
அழகுக்கலை என்பதை ஓர் அறிவியல் எனலாம். முறையாக அழகுக்கலையைக் கற்பதற்கு இயற்பியல், வேதியியல், உயிரியியல் இவற்றின் பாடங்கள் குறித்த அடிப்படை அறிவு தேவை. இந்த அழகுக்கலையைக் கற்பதற்கு இவையெல்லாம் தேவையா? என சிலர் வினா எழுப்புகின்றனர். இதற்கான விளக்கம் கொடுப்பது அவசியம் ஆகிறது.
பெண்களுக்கு வரும் முகப்பருவை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அது ஏன் வருகிறது என்பது பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால், காற்றில் இருக்கும் பாக்டீரியா அவற்றின் இனப்பெருக்கம் பற்றிப் படிக்க நேர்கிறது. இது உயிரியல். சூரிய ஒளியைப் பற்றிப் படிக்கும் போது அது இயற்பியல். ஓசோன் மற்றும் அரோமா எண்ணெய்களைப் பற்றி படிக்கும் போது அது வேதியியல்.
இந்த அடிப்படை விஷயங்களை 10ம் வகுப்பு வரை படித்தவர்கள் அறிந்திருப்பார்கள். எனவே தான் பல பயிற்சி நிறுவனங்கள் அழகுக்கலை பயில்வதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சியை அடிப்படை கல்வித் தகுதியாக நிர்ணயித்திருக்கின்றன. மேலும் 10ம் வகுப்பு பெற்றிருந்தால் தான், அழகுக்கலை பயிற்சிக்கான சான்றிதழ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் தொழிற் பயிற்சி நிறுவனமான மக்கள் கல்வி நிறுவனத்தில் அழகுக் கலைப் பயிற்சி பெறுபவர்களுக்கு 8ம் வகுப்பு படித்திருந்தாலே மத்திய அரசின் சான்றிதழ் கிடைக்கிறது.
ஆர்வமும் ஈடுபாடும் பயிற்சிக்கான முதல் அடிப்படை தேவையாகும். இக்கலையில் பயிற்சி பெற வயது வரம்பு தேவையில்லை. ஆனால் அரசு சான்றிதழ் பெற 8 அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சான்றிதழ் பெறுவதற்கான வயது வரம்பு 18 முதல் 45 வயது வரையாகும்.
பயிற்சிகளில் பல வகைகள், பல நிலைகள் உள்ளன். குறுகிய காலப்பயிற்சி, இருவார பயிற்சி, 6 வார பயிற்சி, 3 மாத பயிற்சி, 1 மாத பயிற்சி என பல உள்ளன. இவற்றில் பேசிக், அட்வான்ஸ்ட், ஹைடெக் என்று பல நிலைகள் உள்ளன். பெண்கள் தமது விருப்பத்திற்கேற்ப குறிப்பிட்ட நிலையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
பயிற்சி வகைகள் : ஒப்பனை, மெஹந்தி டிசைனிங், நகப்பூச்சு, கூந்தல் அலங்காரம், ஃபேசியல், பிளீச்சிங், பெடிக்கியூர், மேனிக்கியூர், ஆயில் மசாஜ், ஹென்னா கண்டிஸ்னர், டையிங், வாக்ஷிங், திரெட்டிங், மணப்பெண் அலங்காரம் என ஏராளமான அழகு பராமரிப்பு நிலைகள் உள்ளன. ஒவ்வொன்றையும் முறையாக கற்றுக் கொள்ள வேண்டும். இவை அடிப்படை, அட்வான்ஸ்ட், ஹைடெக் என்று போகும் போது சிறிது செலவு கூடும். அதற்கேற்ப வருமானமும் கூடும்.