மக்கிய தென்னை நார்க்கழிவை மண்ணுடன் சேர்ப்பதால் மண்ணின் காற்றோட்ட வசதி அதிகரிப்பதுடன், ஈரப்பதத்தை தேக்கி வைத்து, பயிருக்கு தேவையான பல்வேறு நுண்ணுயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது என திருச்சி மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் கண்ணன்(பொ) தெரிவித்துள்ளார்.
மட்கிய தேங்காய் நார் கழிவை மண்ணுடன சேர்ப்பதால், மண்ணின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் மற்றும் உழவுக்கு சாதகமான தன்மை ஆகியன மேம்படுகின்றன. இது மணற்பாங்கான மண்ணின் கடினத் தன்மையை அதிகப்படுத்துகிறது. களி மண்ணை காற்றோட்டம் மிகுந்ததாக்குகிறது. மண் துகள்களை ஒன்று சேர்த்து மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது. நீரை தக்க வைத்துக் கொள்ளும் தன்மையை அதிகப்படுத்தி, மண்ணின் ஈரப்பதத்தை அதிகப்படுத்துகிறது. இதனை பயன்படுத்துவதால் மேல் மண் 10-15 செ.மீ என்றளவிலும் அடிமண் 15-30 செ.மீ என்றளவிலும் அடர்த்தி குறைகிறது. இது மட்கிய உரம் என்பதால் நன்மை பயக்கும் மண் வாழ் நுண்ணுயிரிகளை அதிகப்படுத்துகிறது. அம்மோனியமாக்கல், நைட்ரேட் மற்றும் நைட்ரஜன் நிலை நிறுத்தல் ஆகிய வினைகள் இதிலுள்ள நுண்ணுயிரின் செயல்திறனால் அதிகரிக்கிறது.
பயன்பாடுகள் எல்லா வகை பயிர்களுக்கும் எக்டேருக்கு 5டன் என்ற அளவில் மட்கிய தென்னைநார் கழிவு இடலாம். இதனை விதைப்பதற்கு முன் அடி உரமாகவும் பயன்படுத்தலாம். நாற்றங்கால்கள், பாலித்தீன் பைகள் மற்றம் மண் தொட்டிகளில் நிரப்ப வேண்டிய மண் கலவைகளில் 20மூ மட்கிய தேங்காய் நார்கழிவை மணலுடன் கலந்து தயாரிக்கலாம். தென்னை, மா, வாழை மற்றும் பழமரங்கள் போன்ற நன்கு வளர்ந்த மரங்களுக்கு ஆண்டுக்கு குறைந்தது 5 கிலோ மரத்துக்கு போதுமானதாகும் என திருச்சி மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் கண்ணன்(பொ) அவா்கள் தெரிவித்துள்ளார்.