அதில் பீகார்.. இதில் கேரளா.. நம்பர் ஒன்..! தமிழ்நாடு..?
இந்திய அரசின், ‘திங்க் டேங்க்’ அமைப்பான நித்தி அயோக் அமைப்பு வறுமை கோட்டில் உள்ள இந்தியர்கள் குறித்து ஆய்வை ஒன்றை மேற்கொண்டது. ஆய்வின் முடிவை தற்போது அறிவித்துள்ளது.
அதில் வறுமைக் கோட்டில் அதிகம் உள்ளோர் கொண்ட மாநிலமாக பீகார் உள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 51.9 சதவீத மக்கள் ஏழ்மையில் உள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தின் 42.16 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 37.79 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 36.35 சதவீதமும், மேகாலயா மற்றும் அசாம் மாநிலத்தில் தலா 32.67 சதவீத மக்களும் ஏழ்மையில் உள்ளதாகத் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாகப் பீகார் மாநிலத்தில் 50 சதவீத மக்கள் Multidimensionally Poor பிரிவில் உள்ளதாக நித்தி அயோக்கின் வறுமைக் குறியீடு தெரிவித்துள்ளது.
ஏழை மக்கள் குறைவாக உள்ள மாநிலம் என்ற பட்டியலில் ஐந்து மாநிலம் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அதில் கேரளா, கோவா, சிக்கிம், தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் ஆகியவை டாப் 5 இடத்தைப் பிடித்துள்ளது. கேரளாவின் மொத்த மக்கள் தொகையில் 0.71 சதவீதமும், கோவாவில் 3.76 சதவீதமும், சிக்கிம்மி-ல் 3.82 சதவீதமும், தமிழ்நாட்டில் 4.89 சதவீதமும், பஞ்சாப்பில் 5.59 சதவீத மக்கள் மட்டுமே ஏழ்மையில் உள்ளதாக அறிவித்துள்ளது. இதேபோல் யூனியன் பிரதேசம் பிரிவில் புதுச்சேரியில் 1.72 சதவீத மக்கள் தொகையும், லட்சத்தீவில் 1.82 சதவீத மக்கள் தொகையும், அந்தமான் நிக்கோபார் தீவில் 4.30 சதவீத மக்கள் தொகையும், டெல்லியில் 4.79 சதவீத மக்கள் தொகையும், சண்டிகரில் 5.97 சதவீத மக்கள் தொகை ஏழ்மையில் உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின், ‘பல பரிமாண வறுமைக் குறியீடு’ (MULTI DIMENSIONAL POVERTY INDEX- MPI) அளவீட்டைச் சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் என 3 பிரிவுகளாகச் சமபங்கு உடன் பிரிக்கப்பட்டு உள்ளது.
இதை ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் இளம்பருவ இறப்பு, பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு, பள்ளிப்படிப்பு, பள்ளி வருகை, சமையல் எரிபொருள், சுகாதாரம், குடிநீர், மின்சாரம், வீடு, சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் என 12 துணை பிரிவுகளின் கீழ் பிரிக்கப்படுகிறது. இந்த விறிமி தரவுகளின் அடிப்படையில் நாட்டின் ஏழ்மையைச் சிறப்பான முறையில் கையாள முடியும் என நித்தி அயோக் அமைப்பு அறிவித்துள்ளது.