தபால் ஆபிஸ் தொடங்க விருப்பமா..!
தபால் நிலையங்கள் இல்லாத இடங்களில் தபால் நிலையங்கள் தொடங்க பிரான்சைஸ் திட்டம் ஒன்றை மத்திய தபால் துறை அறிமுகம் செய்துள்ளது. தபால் நிலைய பிரான்சைஸ், தபால் நிலைய முகவர்கள் பிரான்சைஸ் என இரண்டு விதமான பிரான்சைஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் தபால் நிலைய அலுவலகம் தொடங்குவது தபால் நிலைய பிரான்சைஸ். வீடு வீடாக சென்று போஸ்டல் ஸ்டாம்புகள் மற்றும் எழுதுப்பொருட்களை வழங்கும் நபர் போஸ்டல் ஏஜெண்ட்டுகள் அல்லது தபால் முகவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
தபால் நிலைய பிரான்சைஸ் தொடங்க நீங்கள் இந்திய குடிமகனாக, 18 வயது பூர்த்தியான நபராக இருக்க வேண்டும். அத்துடன் குறைந்தது 8ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை தபால் நிலையத்திலிருந்து நேரடியாக பெறலாம் அல்லது இந்திய அரசின் தபால் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் பிரான்சைஸ் அவுட்லெட்டில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை விவரிக்கும் வணிகத் திட்டத்துடன் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்த 14 நாட்களுக்குள் தபால் கோட்ட தலைவர் உங்கள் விண்ணப்பத்தை ஆய்வு செய்து பிரான்சைஸை உறுதி செய்வார். தபால் நிலையம் தொடங்க இந்தியா போஸ்ட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட வேண்டும். தபால் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினர் இதில் சேர தகுதி இல்லை. இதில் கிடைக்கும் வருவாய் விபரங்கள் பார்ப்போம்.
ரெஜிஸ்டர் போஸ்ட்டுக்கு ரூ.3ம் ஸ்பீட் போஸ்ட்டுக்கு ரூ.5ம் கமிஷனமாக வழங்கப்படும். ரூ.100 முதல் ரூ.200 வரையில் மணி ஆர்டருக்கு ரூ.3.50ம் ரூ. 200க்கு மேற்பட்ட மணி ஆர்டருக்கு ரூ.5ம், 1000க்கும் மேற்பட்ட புக்கிங்கள் மற்றும் ஸ்பீட் போஸ்டுகளுக்கு மாதம் 20% கூடுதல் கமிஷன் வழங்கப்படுகிறது. தபால் தலை, அஞ்சல் எழுதுபொருட்கள், பணம் ஆர்டர் படிவம் ஆகியவற்றின் விற்பனைத் தொகையில் 5% தொகை கமிஷன் ஆகும்.
வருவாய் முத்திரைகள், மத்திய ஆட்சேர்ப்புக் கட்டண முத்திரைகள் போன்றவற்றின் விற்பனை உள்ளிட்ட சில்லறைச் சேவைகளில் அஞ்சல் துறையின் வருமானத்தில் 40% தொகை கமிஷனாக கிடைக்கும்.