பத்தொன்பது வயது பெண் வைத்திருந்த ஒரு பிஸினஸ் ஐடியா – நூறு நிறுவனங்கள் நிராகரித்தனர்… ஆனால் இன்று !
பத்தொன்பது வயது மெலனி பெர்கின்ஸ் வைத்திருந்தது ஒரு பிஸினஸ் ஐடியா மட்டும் தான். கல்லூரிப் பட்டம் கூடக் கிடையாது. கிட்டத்தட்ட நூறு நிறுவனங்கள் அந்த யோசனையை நிராகரித்தனர். நம்மில் பலர் உபயோகிக்கும் கேன்வா தளம் தான் அந்த யோசனை. கேன்வாவின் இன்றைய மதிப்பு, தோராயமாக இரண்டு லட்சம் கோடிக்கும் மேலே.
ஆஸ்திரேலியாவில் பிறந்தவர் மெலனி. காலை 4.30 மணிக்கே எழுந்து கொள்ளும் வழக்கம் உடையவர். பதினான்கு வயதிலேயே கழுத்தில் அணியும் (scarves) மேலாடைகளை விற்பனை செய்த அனுபவம் உண்டு. கல்லூரியில் சைக்காலஜி, வணிகவியல் படிப்பில் சேர்ந்தார்.
கிராபிக் டிசைன் சொல்லித் தரும் வேலையும் பார்த்துக் கொண்டிருந்தார். மாதக் கணக்கில் செலவிட்டும் போட்டோஷாப் டூல்களைப் புரிந்து கொள்ளத் திணறும் மாணவர்களைப் பார்த்த போது மெலனிக்கு அதை எளிமையாக உருவாக்கும் யோசனை தோன்றியது.
அவருடைய காதலர் கிளிஃப் ஆப்ரெச் உடன் இணைந்து இதற்கென ஒரு தளத்தை உருவாக்க முயன்றார். அவரும் கல்லூரி மாணவர்தான் என்பதால் அவருடைய தொழில்நுட்ப அறிவு சுமாராகத்தான் இருந்தது. எனவே குறிப்பிட்ட கேட்டகரியைத் தேர்ந்தெடுத்து கல்லூரி மாணவர்களுக்கான இயர் புக் செய்யும் தளமாக பியூஷன் புக் என்று பெயரிட்டுத் தொடங்கினார்கள். அந்த அனுபவம் நம்பிக்கை அளித்தது.
மெலனி பத்தொன்பது வயதில் கல்லூரிப் படிப்பைக் கைவிட்டார்.
அம்மாவின் வீட்டின் ஒரு பகுதியை அலுவலகமாக்கினார். வருங்காலக் கணவரை தொழிலில் பங்காளியாக்கினார். எத்தனை பேர் நிராகரித்தாலும் வெற்றி பெறக்கூடிய எளிமையான யோசனை கேன்வா. தொடர் முயற்சிகளால் வென்சர் கேபிடலிஸ்ட் முதலீடுகள் கிடைத்தன. அவருடைய 26 வயதில் கேன்வா, யூனிகார்ன் ஸ்டார்ட் அப் அந்தஸ்தைப் பெற்றுவிட்டது.
இன்று 190 நாடுகளில் 17 கோடிக்கும் அதிகமானோர் கேன்வா பயன்படுத்துகின்றனர். 85 சதவிகிதம் Fortune 500 நிறுவனங்கள் கேன்வாவைப் பயன்படுத்துகின்றன. 36 வயதில் டெக் பில்லியனர் ஆனது மட்டுமின்றி மெலனியும் அவர் கணவரும் தங்கள் லாபத்தை வறுமை ஒழிப்பு செயல்பாடுகளுக்குக் கொடுத்து உதவுகின்றனர்.