ஷேர் மார்க்கெட்டில் போட்டு டபுளாக்கி தாரேன் … பலரிடம் கைவரிசை காட்டிவிட்டு தலைமறைவான ஏட்டைய்யா !
ஷேர் மார்க்கெட்டில் போட்டு டபுளாக்கி தாரேன் … பலரிடம் கைவரிசை காட்டிவிட்டு தலைமறைவான ஏட்டைய்யா ! – ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கித் தருகிறேன் என்று ஆசை காட்டி பணம் பறித்துக் கொண்டு ஏமாற்றிவிட்டார் என்ற புகாரில் போலீசார் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் பெ.வெங்கடேசன் (காவலர் எண்:360 Batch -2003). கடந்த 2024 ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து பணிக்குத் திரும்பாமல் தலைமறைவாக இருக்கிறார்.
இவரும் இவரது மனைவி சுபாவும் திருச்சி – பாப்பாக்குறிச்சி காட்டூர், பாலாஜிநகரில் வசித்து வந்தனர். அப்போது, தாங்கள், மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற (SEBI) கட்டுப்பாட்டில் உள்ள ZERODHA – Bangalore ஷேர்மார்க்கெட் மூலமாக டிரேடிங் செய்து வருவதாகவும், தன் மீது நம்பிக்கை வைத்து பணம் முதலீடு செய்தால் கொடுத்த பணத்திற்கு லாப பங்காக 1 மாத காலத்திற்குள் திருப்பி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, திருச்சி கீழ அம்பிகாபுரத்தைச் சேர்ந்த சு.செந்தில்குமார் என்பவரிடமிருந்து தனது பல்வேறு வங்கி கணக்குகளுக்கு, பல்வேறு தேதிகளில் என மொத்தம் ரூ.85 லட்சம் தொகை வாங்கியிருக்கிறார்.
இதன்பின், டிவிடண்ட் தொகை எனக்கூறி, மொத்தம் ரூ.26,82,000/- மட்டும் கொடுத்துவிட்டு, அவர்கள் கூறியது போல் எதுவும் லாபத்தொகை மற்றும் மீத தொகை எதுவும் தராமல் ஏமாற்றியிருக்கிறார். இந்த மோசடி தொடர்பாக, செந்தில் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரும் இதே பாணியில் வெங்கடேசன் மற்றும் சுபா தம்பதியினர் தன்னிடமும் கைவரிசையை காட்டியதாக புகார் அளித்து பரபரப்பை கூட்டியிருக்கிறார்.
பிரபாகரனிடமிருந்து ரூ.35,50,000/- த்தை கறந்திருக்கிறார், காவலர் வெங்கடேசன். அதில் ரூ.19,50,500/- மட்டுமே டிவிடன்ட் என்பதாக திருப்பிக் கொடுத்த நிலையில், மீதப் பணத்தை கொடுக்காமல் டிமிக்கி கொடுத்துவிட்டு தலைமறைவாகியிருக்கிறார்.
இதனையடுத்து, திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் திருவெறும்பூர் பகுதியில் பல்வேறு நபர்களிடமும் இதே போல கைவரிசையைக் காட்டியிருப்பதாவும் தெரிய வந்திருக்கிறது.
போலீசாக பணியில் இருந்துகொண்டே, இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட வெங்கடேசன் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கும் நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக பணிக்குத் திரும்பாமல் தலைமறைவாக இருந்துவரும் வெங்கடேசனையும் அவரது மனைவி சுபாவையும் பிடிக்க தனிப்படையை அமைத்திருக்கிறார் திருச்சி மாவட்ட எஸ்.பி.வருண்குமார்.
தனிப்படையின் கையில் சிக்கிய பிறகே, யார் யாரிடம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறார். இந்த மோசடியில் யாரெல்லால் கூட்டு என்ற விவரம் தெரியவரும் என்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.
– ஆதிரன்.