”தொடர்பு” என்ற கலை மூலம் கிடைக்கும் வணிக வாய்ப்புகள்
ஒருவர் தனக்கு இருக்கும் ‘தொடர்புகளை’ சரியாகப் பயன்படுத்திக் கொள்வது என்பது ஒரு கலை. சிலர் தனக்கு இருக்கும் நட்பு வட்டத்தைத் தாண்டி அதற்காகவே மெனக்கெட்டு ‘தொடர்புகளை’ ஆராய்ந்து தேடி ஏற்படுத்திக் கொள்வார்கள்.
எனக்குத் தெரிந்த நண்பர், ரோட்டரி கிளப்பில் சேருமளவிற்கெல்லாம் செல்வந்தவர் அல்ல. என்றாலும் அந்த வட்டத்திற்குள் நுழைய வேண்டும் என்பதற்காகவே இணைந்து, அதன் மூலம் வணிக வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொள்கிறார்.
இதெல்லாம் தவறே இல்லை. ஓர் அணுகுமுறை. ஆனால் தொடர்புகளை வைத்துக் கொண்டு ஏமாற்றுதல், துரோகம், மோசடி போன்றவற்றைச் செய்வதுதான் தவறு.
எனக்கெல்லாம் சுட்டுப் போட்டாலும் ‘தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும்’ கலை வராது. இருப்பதை பயன்படுத்திக் கொள்ளவும் தெரவுசு கிடையாது. என் இன்ட்ரோவொ்ட் குணாதிசயம் அதற்கு முக்கிய காரணம்.
எனக்கு ஒரு தனிப்பட்ட மருத்துவப் பிரச்சினை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதே துறையில் உள்ளவர் ஃபேஸ்புக்கில் நண்பராக இருப்பார். ஆனால் அவரைத் தொடர்பு கொள்ளலாம் என்று எனக்குத் தோன்றாது. மாறாக ‘ஏதும் தவறாக நினைத்துக் கொள்வார்களோ’ என்று நானே தயங்கி நின்று விடுவேன்.
இணையத்தைப் பொறுத்தவரை எனக்கு தானாக கிடைத்த உதவிகள்தான் இதுவரை அதிகம். புத்தகம் வாங்குவது முதற்கொண்டு அவசியமான சில பொருட்கள் வரை நண்பர்கள் தானாக முன்வந்து உதவி செய்ததுதான் அதிகம். அவர்கள் ஒவ்வொருவரையும் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.
மாறாக, தயக்கத்தை பின்னால் தள்ளி நானாக உதவி கேட்டது, இதுவரை இரண்டு அல்லது மூன்று பேர்களாக மட்டுமே இருக்கும். ‘இவர்கள் நிச்சயம் உதவுவார்கள், மறுக்க மாட்டார்கள், குறிப்பாக தவறாக நினைக்க மாட்டார்கள்’ என்று உள்ளுக்குள் ஒரு பலமான குரல் கேட்கும். எனவே தயக்கம் பெரிதும் விலகாமல் அவர்களிடம் கேட்டிருக்கிறேன். உடனேயே கிடைத்திருக்கிறது.
மற்றபடி தொடர்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் கலை எனக்கு வராத விஷயம். சமயங்களில் அது குறித்து எனக்கே எரிச்சலாகவும் இருக்கும். பல சமயங்களில் கர்வமாகவும் இருக்கும்.
என்னைப் போன்றே பல கோயிஞ்சாமிகளும் இருப்பார்கள் என்பதும் தெரியும்.
— சுரேஷ் கண்ணன்.