திருச்சி தூய வளனார் கல்லூரித் தமிழாய்வுத்துறையினரால் படைப்பாற்றல் பயிலரங்கம்
திருச்சி தூய வளனார் கல்லூரித் தமிழாய்வுத்துறையினரால்
படைப்பாற்றல் பயிலரங்கம்
நாளைய சமூகத்தின் செயலாக்கத்ததை ஊட்டம்பெற வைப்பதற்கான முயற்சியாக இன்றைய இளைஞர்களை எழுத்தாளர்களாக மாறுவதற்கென தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை மற்றும் வேர்களய் அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து நம்ம மாணவர்களுக்கான படைப்பாற்றல் பயிலரங்கை நடத்தியது.
கல்லூரிச் செயலர் அருள்முனைவர் கு.அமல் சே.ச. அவர்களின் தலைமை யில் நடைபெற்ற இவ்விழாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பயிலரங்கில் மாணவர்கள் எழுதிய படைப்புகள் அடங்கிய விதைநெல் 2022தொகுப்பைக் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச. வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.
பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ.ஜோசப்சகாயராஜ் வரவேற்புரையாற்றினார். தமிழாய்வுத் துறைத்தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி அறிமுகவுரையாற்றினார். வேர்கள் அறக்கட்டளை நிறுவுநர் லயன் அடைக்கலராஜா, திருச்சிராப்பள்ளி எழுத்தாளர் திருமதி கேத்தரீன் ஆரோக்கியசாமி தூய வளனார் கல்லூரி பணிமுறை இரண்டின் துணை முதல்வர் திருமதி சி.பாக்கிய செல்வரதி ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.
தமிழ்நாடு அரசின் சமூகநீதிப் பாதுகாப்புக் குழுவின் தலைவரும், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் ஆலோசகருமான பேராசிரியர் சுப.வீரபாண்டியன் இதழியல் துறையில் பல ஆண்டுகளாகச் சிறப்பாகப் பணியாற்றிவரும் திருச்சிராப்பள்ளி எழுத்தாளர்கள் ஸ்ரீரங்கம் கல்கி திருநாவுக்கரசு மற்றும் நந்தவனம் சந்திரசேகரன் ஆகியோரைப் பாராட்டி விருது வழங்கிப் பயிலரங்கைத் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார். தொடக்கவிழா நிறைவில் முனைவர் டே.வில்சன் நன்றியுரையாற்றினார்.
இரண்டாம் நாள் மாலையில் நடைபெற்ற நிறைவு விழாற்குத் தமிழ்த்துறை பணிமுறை இரண்டின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் வரவேற்புரை வழங்கினார். தூய வளனார் கல்லூரி, ஜமால் முகம்மது கல்லூரி, தேசியக் கல்லூரி, உருமு தனலெட்சுமி கல்லூரி, புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி ஆகிய கல்லூரிகளிலிருந்து பயிலரங்கில் பங்கேற்று பயிற்சிபெற்ற மாணவர்களுக்கு கல்லூரி இணை முதல்வர் முனைவர் இராஜேந்திரன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, நிறைவுரையாற்றினார். நிறைவில் இப்பயிலரங்கின் ஒருங் கிணைப்பாளர் முனைவர் ஜா.சலேத் நன்றியுரையாற்றினார்.
அருள்முனைவர் கு.அமல், சே.ச.,கல்லூரிச் செயலர் அவர்கள் பேசுகையில், வாசிக்க வாசிக்க உங்கள் அறிவு கூர்மைப்படும். வினா எழும். அப்படி தொடர்ந்து வாசிக்கிறபோது அது மறுவாசிப்பு செய்து ஏற்கனவே உள்ளதை கட்டடைக்க உங்களைப் பக்குவப்படுத்தும். இப்படி நீங்களும் மறுவாசிப்பு செய்து விமர்சன எண்ணத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதே என் ஆவல். நீங்கள் விரும்புகிற சின்ன சின்ன மாற்றம் தொடங்கி எதிர்நோக்கியுள்ள பெரிய மாற்றம் வரையிலான அனைத்து முயற்சிகளும் உங்களிலிருந்து தொடங்கப்பட வேண்டும்.
மாற்றத்தை நீங்கள் உங்களிலிருந்து தொடங்கினால் அதுவே உங்களை எழுத்தாளராக, பத்திரிகையாளராக மாற்றுவதற்கு உதவியாக அமையும்.
அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச., கல்லூரி முதல்வர் அவர்கள் பேசுகையில், இந்த விழா எனக்கு மூன்று விசயங்களில் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
ஒன்று தமிழாய்வுத்துறை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகப் படைப்பிலக்கியப் பயிலரங்கை நடத்துவது என்பது. அதுவும் ஒரு பரிணாம வளர்ச்சி போல முதலாம் ஆண்டு தமிழ் துறை மாணவர்களுக்கு மட்டும்… கடந்த ஆண்டு கல்லூரியின் பிற துறை மாணவர்களை இணைத்து இந்த ஆண்டு திருச்சியில் இருக்கக்கூடிய மற்ற கல்லூரிகளுக்கு அழைப்பு விடுத்து அவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களையும் இணைத்து எனப் பயிற்சியை உரிய – உயரிய முறையில் நடத்துகிறது.
இரண்டாவது மகிழ்ச்சி நீண்ட காலமாக திருச்சிராப்பள்ளியை மையமிட்டு பத்திரிக்கை உலகில் இயங்கி வருகிற பெருமக்களை அடையாளம் கண்டு, அவர்களை அழைத்து வந்து நமது கல்லூரியின் சார்பாக பாராட்டுவது என்பது உங்களைப் போன்ற மாணவர்களுக்கு நிச்சயம் உற்சாகமாக இருக்கும்.
மூன்றாவது மகிழ்ச்சி மாணவர்கள் எழுதிய படைப்புகளைத் தொகுத்து விதைநெல் இதழை வெளிக் கொணர்வது. “விதை நெல் 2022” இதழை புரட்டிப் பார்க்கிற போது, சில எளிய படைப்புகள் ஆனால் வலிமை கருத்தாக வலு பெறும் திறனுள்ள படைப்புகள் இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது.
முனைவர் பா.இராஜேந்திரன், இணை முதல்வர் அவர்கள் பேசுகையில், இலக்கியமே தமிழ்ச் சமூகத்தின் உயரிய அடையாளம். அதற்கான முயற்சியை மனம் நிறைந்து பாராட்டுகிறேன். தோழமை அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு படைப்பை எழுதி அதற்கு கீழ் உங்களுடைய பெயரை இடுகிறீர்கள் என்று சொன்னால் அதுவே ஒரு பெரிய தன்னம்பிக்கையை உங்களுக்குள் விதைக்கும்.
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் பேசுகையில், மாணவர்களின் படைப்புகள் அடங்கிய இந்தச் சிற்றிதழைப் புரட்டுகிறபோது எதிர்காலத் தலைவர்களாகிய இளைய தலைமுறை மீது நம்பிக்கை பிறக்கிறது. எழுத்து என்பதை ஒழுங்குமுறைச் செயல்பாடாகும். இதை ஆங்கிலத்தில் DISPILANE ACTIVITY என்பார்கள். அந்த ஒழுங்குமுறைச் செயல்பாட்டின் தொடக்கம் வாசிப்பு. நீங்கள் எழுத்தாளர்களாக மாறுவதற்கு முதலில் நீங்கள் வாசிப்பாளராக மாற வேண்டும். வாசித்ததை உள்ளுக்குள்ளே அசை போட வேண்டும். அதன்பிறகு எழுத வேண்டும். அந்தப்படைப்பு சமூகப் பொறுப்போடு இருக்க வேண்டும்.