தவறுதலாக வந்த ‘திடீர்’ பணத்தை செலவு செய்யலாமா..?
நம் வங்கிக் கணக்குக்கு வேறு ஒருவர் பணத்தைத் தவறுதலாக டிரான்ஸ்ஃபர் செய்து அது நம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தால், பலரும் அதை எடுத்துச் செலவு செய்துவிட நினைக்கிறார்கள்.
‘இந்தப் பணம் அனாமத்தாக வந்த பணம்தானே… வங்கியில் கண்டுபிடிக்கும் முன், உடனே அந்தப் பணத்தை எடுத்து செலவு செய்துவிடுவோம். பணத்தை அனுப்பியவரோ, வங்கியோ கண்டுபிடித்துக் கேட்டால் பார்த்துக்கொள்ளலாம்’ என்று நினைக் கிறார்கள். இது தவறான எண்ணம். காரணம், யாரோ ஒரு அப்பாவி உங்கள் வங்கிக் கணக்குக்குத் தவறுதலாக அனுப்பி, அதைச் செலவழித்திருந்தாலும், அதைத் திரும்பத் தந்து சரிசெய்துவிடலாம்.
ஆனால், உங்கள் வங்கிக் கணக்குக்கு, சட்டத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கிலிருந்தோ, சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் வருமானம் ஈட்டுகிறவரின் வங்கிக் கணக்கிலிருந்தோ, குற்றவாளிகளின் கணக்கிலிருந்தோகூட பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டிருக்கலாம். அந்தப் பணம் உங்க ளைச் சிக்கலில் மாட்டிவிடுவதற்கான வாய்ப்புகள் உண்டு என்ப தால், சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
ஆகவே, உங்கள் வங்கிக் கணக்குக்குத் தவறுதலாகப் பணம் வந்த விவரத்தை உங்கள் வங்கியில் புகார் தந்து, அதற்கான ஒப்புகைச் சீட்டை அவசியம் பெற்றுக் கொள்ளுங்கள். இது எதிர்காலத்தில் நீங்கள் எந்த விதமான சிக்கலிலும் மாட்டிக்கொள்ளாமல் இருக்க மிகவும் உதவியாக இருக்கும். ஆன்லைன் பணப் பரிமாற்றத்தை மிக மிகக் கவனமாகச் செய்தால், எந்தச் சிக்கலும் வராது என்பது மட்டும் நிச்சயம்!