Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் நூறாண்டை கடந்த யானை மார்க் கூடைப் பூந்தி

“யானை மார்க்”.. பெயர் வைப்பதில் கூட தெளிவான சிந்தனையுடன் தொடங்கப்பட்டதாலேயே இன்றும் நிலைத்து நீடிக்கிறது.

1

1916 ம் ஆண்டு நடேசன் பிள்ளை என்பவர் திருச்சி, பெரியகடை வீதியில் பலகாரக் கடையை தொடங்குகிறார். தொடங்கும் போது அவருக்கு முன் வந்த நின்ற சிந்தனை “கடைக்கு என்ன பெயர் வைப்பது..?”.

பலகாரம், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். என்றாலும் முதலில் ஈர்க்கப்படுவது சிறியவர்களைத் தான். எனவே அவர்கள் எளிமையாக புரியும், ஈர்க்கும் வண்ணம் ஒரு பெயர் வைக்கத் திட்டமிடுகிறார். அந்த சிந்தனையின் விளைவு, “யானை மார்க் நெய் மிட்டாய் கடை“ என பெயர் வைக்கிறார்.

2

100 ஆண்டுகளை கடந்த வெற்றி நடைபோடும் வியாபாரத்திற்கான முதல் அடி.. யானை..! பெயர் வைப்பதில் கூட தெளிவான சிந்தனையுடன் தொடங்கப்பட்டதாலேயே இன்றும் நிலைத்து நீடிக்கிறது. தொழிலில் எடுத்து வைக்கும் முதல் அடி அதாவது தொடக்கம் சரியாக இருக்க வேண் டும் என்ற தாரக மந்திரத்திற்கு எடுத்துக் காட்டு “யானை” என்ற பெயர்.

வழக்கம் போல் இனிப்பு கார வகைகளுடன் வியாபாரம் நடக்கிறது. என்றாலும் புதிதாக, பலகாரத்தில் ஏதாவது புதுமையை புகுத்தினால் விற்பனை மேலும் சூடுபிடிக்கும் என்ற சிந்தனை நடேசன் பிள்ளையின் மனதில் எழ உதயமானது பெரிய பூந்தி. வழக்கமாக ஸ்வீட் ஸ்டால்களில் விற்கப்படும் பூந்தி சிறியதாக இருக்கும். ஆனால் அதையே பெரிதாக முழுக்க முழுக்க நெய்யினால் செய்யப்பட வேண்டும் என திட்டமிட்டு செயலிலும் இறங்குகிறார்.

3

பெரிய பூந்தியை பார்சல் செய்து தருவதற்கும் ஒரு யுக்தியை கையாள்கிறார். அது.. மூங்கிலால் சிறிய கூடை பின்னி அதில் பூந்தியை வைத்து தருகிறார். நெய் மணக்கும் பூந்தி, அதை மூங்கில் கூடையில் வைத்துத் தருவது என்ற இரண்டு புதிய சிந்தனை செயலாக்கம் பெற, கடையின் விற்பனையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. “தமிழக முதல்வர் மறைந்த காமராஜர் கூடைப் பூந்தியை பலமுறை ருசித்து இருக்கிறார்” என்கிறார் தற்போதைய கடையின் உரிமையாளரான கண்ணன்.

4

1916ஆம் ஆண்டு நடேசன் பிள்ளையால் தொடங்கப்பட்ட யானை மார்க் நெய் மிட்டாய் கடை தொடர்ந்து அவருடைய மகன் பாக்கியராஜ், தற்போது பாக்கியராஜின் மகன்கள் கண்ணன், ரவிச்சந்திரனால் நடத்தப் பட்டு வருகிறது.
“திருச்சி, ஒத்தக்கடையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வருகை புரிந்த மறைந்த முதல்வர் கருணாநிதி, கூடை பூந்தி கேட்டு வாங்கி வரச் செய்து சாப்பிடுவார். வைகோவும் திருச்சி வந்தால் கூடை பூந்தி வாங்கி சாப்பிட மறக்க மாட்டார்.

இன்றளவும், வெளிநாட்டில் வாழும் தங்களது வாரிசுகளுக்கு கொடுக்க, கூடை பூந்தியை வாங்கிச் செல்லும் வயதான வாடிக்கை யாளர்களும் உண்டு. எங்கள் கடையில் பலகாரம் விலை விசாரிக்க வந்தாலும் அவர்களுக்கு கையில் கொஞ்சம் பூந்தியை கொடுத்து சாப்பிடச் செய்வோம். சுவையால் ஈர்க்கப்பட்டு நிச்சயம் அவர்கள் வாங்கிச் செல்வார்கள். இது வியாபார நுணுக்கத்தில் ஒன்றாக கூட கொள்ளலாம்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் கூடை பூந்தியை வாங்க, பெரிய கடைவீதிக்கு இன்றளவும் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பூந்திக்கான கூடையை பின்னித் தருபவர்களும் தலைமுறையாக செய்து வருகின்றனர்” என்கிறார் கண்ணன் பெருமிதத்துடன்.

“சர்க்கரை, கடலைமாவு, அரிசி, நெய் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை ஏறினாலும் எந்த ஒரு நிலையிலும் நாங்கள் தயாரிக்கும் பண்டங்களின் தரத்தில் சமரசம் செய்து கொள்வது கிடையாது. அதுவே எங்களை இன்றளவும் இந்த தொழிலில் நிலைநிறுத்தி தொடரச் செய்கிறது.

தீபாவளி, புத்தாண்டு நேரங்களில் கடைக்கு கட்டுப்படுத்த முடியாத அளவு கூட்டம் வரும். காரணம், அதே தரமும் சுவையும் மாறாது கொண்டு செல்வதே. எங்களிடம் பணியாற்றும் வேலையாட்களும் குடும்பம் குடும்பமாக இங்கு வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

கடையில் அவர்களுக்கான முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டு வருவதே எங்களின் இந்த வளர்ச்சிக்கான காரணம்” என்றார் உரிமையாளர் கண்ணன்.

5

Leave A Reply

Your email address will not be published.