கோவை – சீரடி இடையே இயக்கப்படும் முதல் தனியார் ரயில்!
ரயில்வே வாரியம் பாரத் கவுரவ் திட்டத்தில் சுற்றுலா ரயில்களை தனியார்கள் இயக்க நடப்பு நிதியாண்டு முதல் அனுமதித்தது. இதையடுத்து தெற்கு ரயில்வே கோவை – சீரடி இடையே ரயில் இயக்க தனியார்களிடம் விண்ணப்பம் கோரியது. ஏழு நிருவனங்களிடையே கடும் போட்டி நிலவியது. கோவையை சேர்ந்த எம் அண்ட் சி நிருவனத்திற்கு அனுமதி கிடைத்தது. இதையடுத்து அந்நிருவனம் சாய் சதான் விரைவு ரயில் என்ற பெயரில் இன்று முதல் இயக்குகிறது. இந்தியாவில் இயக்கப்படும் முதல் தனியார் ரயில் இது.
இந்நிருவனம் இந்த ரயிலுக்கான பெட்டிகளை ரயில்வேயிடம் வாடகைக்கு எடுத்து அழகுபடுத்தி இருக்கிறது. பக்தர்கள் சீரடி சாய்பாபவை வியாழக் கிழமைகளில் தரிசிப்பது விஷேசம் என கருதுவார்கள் என்பதால், அதற்கு ஏற்ப பயண நேரம் மற்றும் கிழமைகளை அமைத்து உள்ளது. செவ்வாய்கிழமை கோவையில் இருந்து புறப்பட்டு புதன் இரவு சீரடி சென்று, வியாழக்கிழமை தரிசனம் முடித்து அன்று இரவே அங்கிருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு கோவை திரும்புகிறது இந்த ரயில்.
தென்னிந்திய, வட இந்திய, ஜைன வகை சைவ உணவுகளை ரயிலில் வழங்க ஏற்பாடு செய்து இருக்கிறது. இதற்காக உணவு தயாரிக்கும் பெட்டியை இந்த ரயிலில் இணைத்து இருக்கிறது. தேவைப்பட்ட உணவு, போர்வை, தலையனை கட்டணம் செலுத்தி பயணிகள் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்துள்ளது. மேலும் தங்கும் விடுதிகளுக்கும் ஏற்பாடு செய்து தருகிறது. அதற்கு தனி கட்டணம். பேக்கேஜாகவும் பெற்றுக் கொள்ளலாம். இதுதவிர சீரடி ரயில் நிலையத்தில் இருந்து தங்கும் விடுதி மற்றும் மந்திராலயம் சென்றுவர, சொகுசு பஸ் ஏற்பாடு செய்து தருகிறது.
இந்த ரயில் வழியில் திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூர் போன்ற இடங்களில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்லுகிறது. இந்த ரயிலுக்கான அறிமுக விழா கடந்த மே மாதம் கோவையில் நடத்தது. பிரபல திரைப்பட நடிகை ஜனனி ஐயர் கலந்து கொண்டார். அவரை பிராண்ட் அம்பாசிட்டராக நியமித்து இருக்கிறது. இந்நிருவனத்தின் சீ.இ.ஓ வாக திரு உமேஷ் என்பவர் செயல்படுகிறார். அந்த விழாவில் அவர் காசி, கயா போன்ற இடங்களுக்கும் மதுரை, திருச்சி, சென்னை வழியாக விரைவில் தனியார் ரயில்கள் இயக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார்.
முதல் தனியார் ரயில் சேவை தமிழகத்தில் இருந்து துவங்குவதால் இந்த ரயிலுக்கு ஆதாரவும் எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது.
சீரடி பாபா பக்தர் ஒருவர் மந்திராலம் செல்ல வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சென்னையில் இருந்து ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு விற்பனை துவங்கிய சில நிமிடங்களிலே டிக்கெட் தீர்ந்து விடும். அந்த ரயிலும் வியாழக்கிழமை தரிசனத்திற்கு ஏற்றதல்ல என்றார்.
தனியார்கள் கட்டண நிர்ணய உரிமை பெற்றுள்ளதால் அவர்கள் நிர்ணயிப்பதே கட்டணம். பயணச்சீட்டுகளை அவர்களே வழங்குகிறார்கள். ரயில்வே டிக்கெட் பரிசோதகர் எல்லாம் கிடையாது. கவர்ச்சியான பணிப்பெண்கள் மட்டுமே. ரயில்வேக்கு இழுவை கட்டணம் செலுத்துவார்கள். என்ஜின் டிரைவர்கள் மட்டுமே ரயில்வே ஊழியர்கள். உள்கட்டமைப்பு ரயில்வேயோடது. ரயில் பெட்டிகள் ரயில்வேயேயிடம் வாடகைக்கு பெறப்படுவது. அப்படியிருக்க ரயில்வே அந்த ரயிலை இயக்காமல் தனியார்களை ரயில் இயக்க அனுமதித்து தனியார் வருமானம் ஈட்ட வழிவகுத்து இருப்பது ரயில்வேயின் நெருடலான செயல்.
– மன்னை மனோகரன்