போட்டித் தேர்வுகளும் அரசுப் பணியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
போட்டித் தேர்வுகளும் அரசுப் பணியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து போட்டித் தேர்வுகளும் அரசு பணியும் விழிப்புணர்வு நிகழ்வினை நூலகத்தில் நடத்தியது. நூலகர் புகழேந்தி வரவேற்றார். புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார்.
போட்டித் தேர்வுகளும் அரசு பணியும் குறித்து போட்டி தேர்வு பயிற்சியாளர் ராமமூர்த்தி பேசுகையில்,
வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் டி.என்.பி.எஸ்.சி பற்றியும், டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தேர்வுகள் என்னென்ன? அத்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு எவ்வாறு தயாராக வேண்டும்? அரசுப்பணியை அடைய நாம் என்ன செய்ய வேண்டும்? போன்ற விவரங்களை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பணியானது தமிழ்நாடு அரசுப்பணிகளில் குறிப்பாக மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான பல்வேறு பதவிகளில் தோன்றும் காலிப்பனியிடங்களை நிரப்பும் பொருட்டு பள்ளிப்படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்படிப்பு படித்தவர்களிடம் அவரவர் கல்வித்தகுதிக்கேற்ப போட்டித் தேர்வுகளை நடத்தி அதன்மூலம் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுத்து அரசுக்கு கொடுப்பதே ஆகும்.
பல்வேறு தகுதி அடிப்படையில் தேர்வுகள் டி.என்.பி.எஸ்.சியில் நடத்தப்படுகின்றன. அரசு வேலைக்கான வாய்ப்புகள் நம் கண்முன்னே கொட்டிக்கிடக்கிறது. அரசு வேலைக்குச்செல்ல விரும்பும் உள்ள ஒவ்வொருவரும் உங்களின் தகுதியை வளர்த்துக்கொண்டால் வேலையைத் தேடி நீங்கள் செல்ல வேண்டியதில்லை. மாறாக வேலை உங்களைத்தேடி வரும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்துத் தேர்வுகளுக்கும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள சமச்சீர்க் கல்வி பாடப் புத்தகங்களே ஆதார நூல்களாகும். அதனோடு பொது அறிவு, நாட்டு நடப்பு, அறிவியல், விளையாட்டு, அரசியல், அரசாங்கம், பொருளாதாரம் போன்ற பல்துறை சார்ந்த பொது அறிவினையும் வளர்த்துக் கொள்ளவேண்டும். பொது அறிவை வளர்த்துக்கொள்ள இந்திய அரசின் வெளியீட்டுத்துறை வெளியிட்டுள்ள இந்தியா இயர் புத்தகமும் நடப்புச்செய்திகளை அறிந்து கொள்ள நாள்தோறும் செய்தித்தாளை வாசித்து குறிப்புகள் எடுத்துக் கொள்வதும் மிகவும் உதவியாக அமையும் என்றார்.