பத்திரப்பதிவு சந்தை விலையைவிட அரசு வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருந்தால், சந்தை மதிப்பில் சொத்தைப் பதிவு செய்ய முடியுமா என்பது குறித்து அறிவோம்.
நீங்கள் வாங்குவது உண்மையான சந்தை மதிப்பாக இருந்து, அந்த மதிப்புக்குத்தான் வாங்குகிறீர்கள் என்றால், நீங்கள் சார்பதிவாளரிடம் சொல்லி, நீங்கள் வாங்கும் மதிப்பை ஆவணத்தில் குறிப்பிட்டு, அந்தத் தொகைக்குப் பதிவு செய்ய முடியும். இதற்கு முத்திரைச் சட்டத்தில் 47A1 நடவடிக்கை என்று சொல்வார்கள். அப்போது சார்பதிவாளர் உங்கள் சொத்தைப் பதிவு செய்து மாவட்ட துணை வருவாய் ஆட்சியருக்கு (டி.ஆர்.ஓ) அனுப்பி ஒப்புதல் பெறுவார்கள்.
‘இந்தச் சொத்துக்கு சரியான மதிப்பைக் குறித்துக் கொடுங்கள்’ என்று அவருக்கு இந்த ஆவணங்களை அனுப்பி வைப்பார்கள். அவர் ‘இந்த சொத்துக்கு சரியான சந்தை மதிப்பு இதுதான்’ என்று சார்பதிவாளருக்குத் தெரிவிப்பார். அது நீங்கள் போட்ட மதிப்பைவிட அதிகமாக இருந்தால், அதற்கு உண்டான குறை மதிப்பு முத்திரைத் தீர்வு மற்றும் பதிவுக் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்தி ஆவணத்தில் அத்தாட்சி செய்து,நீங்கள் ஆவணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதிலும் உங்களுக்கு உடன்பாடு இல்லை; நீங்கள் போட்டிருப்பதுதான் உண்மையான சந்தை மதிப்பு என நினைத்தீர்கள் எனில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அந்தச் சந்தை மதிப்பை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், அரசு வழிகாட்டி மதிப்பைவிடக் குறைவாக சந்தை மதிப்புப் போட்டிருந்தாலும் அந்த ஆவணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.’’