Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

2000 ரூபாய் நோட்டு இல்லா தீபாவளி..?

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

2000 ரூபாய் நோட்டு இல்லா தீபாவளி..?

தீபாவளி தள்ளுபடி விற்பனை, பட்டாசு, மத்தாப்பு இவையிரண்டும் அனைத்து மதத்தினரையும் தீபாவளியை நோக்கி ஈர்க்கவே செய்கிறது. அனைத்து மதத்தினரும் ஒன்றென கலந்து கொண்டாடும் பண்டிகையாகவே தீபாவளி மாறிவிட்டது.

புத்தாடையும், இனிப்பும், பட்டாசும் ஒரு சாராரை மகிழ்விக்கின்றது என்றால் அதையொட்டி நடைபெறும் வர்த்தகம் சிறப்பானால் அதை சார்ந்த வியாபாரிகள் பெருமளவு மகிழும் நாளாக தீபாவளி மாறிவிடுகிறது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 70% மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர் என்று அந்த மாதத்தில் நடைபெறும் பொருளாதார பரிவர்த்தனையை கொண்டு கணிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை, தமிழ்நாட்டில் பல லட்சம் கோடி ரூபாய் வணிகத்திற்கு வழிவகுக்கிறது.

தீபாவளிக்கான புத்தாடைகள் ஆறு மாதத்திற்கு முன்பே திருப்பூர், ஈரோடு, கரூர், மதுரை, காஞ்சிபுரம், கல்கத்தா, பெங்களூர், சூரத் போன்ற நகரங்களில் தயார் செய்யப்படுகிறது. மேலும் சிவகாசியில் பட்டாசுகள் ஒரு வருட காலமாக உற்பத்தி செய்யப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கும் ஒன்றாக தீபாவளி பண்டிகை இருக்கிறது.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

கடந்த 2020 தீபாவளி 2021ல் பலவிதமான அச்சுறுத்தல்களுடனேயே எதிர்கொள்ள வைத்தது. காரணம் கொரோனா..! கொரோனா மூன்றாவது அலை செப்டம்பரில் பெரும் பாதிப்பை உண்டாக்கும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வந்தது.  தீபாவளியை ஒட்டிய வர்த்தகர்கள் மட்டுமின்றி பலரும் இந்த கொரோனா மூன்றாவது அலை குறித்த அச்சத்தை மனதில் கொண்டனர். என்றாலும் தமிழக அரசு அறிவித்த தொடர் தளர்வுகள் கொரோனா குறித்த அச்சத்தை பெருமளவு மறக்கச் செய்தது.

தீபாவளி பண்டிகை, மாத தொடக்கத்தில் (நவம்பர் 4ம் தேதி) அமைந்ததால் மக்களிடம் போனஸீடன் சம்பளமும் கைவரக் கொண்டதால் முந்தைய மாத கடைசியிலிருந்து அலைஅலையென மக்கள் தீபாவளிக்கான பொருட்கள் வாங்கிட கவனம் செலுத்தினர். “கொரோனா அச்சத்தை தீபாவளிக் கூட்டம் நசுக்கிக் கொன்றது” என சொல்லும் அளவிற்கு கொரோனா குறித்த சிந்தனையின்றி சந்தோஷமாகவே பொதுமக்கள் சந்தையில் வலம் வந்தனர்.

திருச்சியில் என்.எஸ்.பி. சாலை, சிங்காரத்தோப்பு, தேரடி பஜார், நந்தி கோயில் தெரு, சூப்பர் பஜார், பெரியகடைவீதி, சின்னக்கடை வீதி, கம்மாளத் தெரு,  காந்தி மார்க்கெட், தில்லைநகர், கரூர் பைபாஸ் ரோடு போன்ற கடைகள் நிறைந்த பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதனால் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு வியாபாரம் அனைத்து வகையான கடைகளுக்கும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது என்று வணிகர்களும், வியாபாரிகளும் கூறுகின்றனர்.

இது குறித்து வியாபாரி ஒருவர் நம்மிடம் கூறுகையில்,

“கடந்த ஆண்டை பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்த ஆண்டு எங்கள் எதிர்பார்ப்பு பெருமளவில் பூர்த்தியாகி இருக்கிறது. கடனுக்கு கொள்முதல் செய்து தீபாவளியை எதிர்நோக்கி காத்திருந்தோம். தொடர்மழை எங்களுக்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் வியாபாரத்தில் எந்த குறைவும் இல்லாத அளவிற்கு வியாபாரம் நல்ல படியாக அமைந்து இருந்தது.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பெரிய கடைகள் முதல் சிறிய கடைகள் வரை ஏராளமான கடைகள் இருக்கிறது. அந்த பகுதி முழுக்கவே துணிக்கடைகள் அமைந்த பகுதியாக காணப்படுகிறது.

திருச்சி என்.எஸ்.பி சாலையில் உள்ள பெரிய கடைகள், சிறு வணிகர்கள், தரைக்கடை, சிறுகடைகள், வியாபாரிகள் என 300க்கும் மேற்பட்டோர் கடைகளை அமைத்து வணிகத்தில் ஈடுபடுகின்றனர். தேரடி பஜாரில் நூற்றுக்கணக்கான கடைகள், சூப்பர் பஜார் பகுதியில் நூற்றுக்கணக்கான கடைகள், சிங்காரத்தோப்பு பகுதியில் ஆயிரக்கணக்கான கடைகள் என திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் முதல் காந்தி மார்க்கெட் வரை உள்ள சுற்றுவட்டாரப்பகுதிகளில் சீசன் கடை வியாபாரிகள் உட்பட சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் தீபாவளி வணிகம் மேற்கொண்டனர். இவர்கள் அனைவருக்குமே இந்த ஆண்டைப் பொறுத்தவரை நல்ல வியாபாரம் தான். அனைவரும் போட்ட முதலுக்கு ஏற்றவாறு லாபமும் பார்த்தனர்.

அதேசமயம் மூன்று, நான்கு நாட்களுக்கு கடைகள் போடும் சீசன் வியாபாரிகள் இந்த மழையினால் பாதிக்கப்பட்டனர். பொதுவாக திருச்சி கோட்டை காவல் நிலைய பகுதிகளில் தான் தற்காலிக கடைகள் அதிகமாக அமைக்கப்படும். அந்தப் பகுதிகளில் மழையின் காரணமாக பெருமளவில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. அதனால் பொதுமக்கள் அந்தப் பகுதியை பயன்படுத்துவது சற்று குறைந்து காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் கடை அமைத்த வியாபாரிகள் விற்பனையில் சரிவை சந்தித்தனர். மற்றபடி அனைத்து வியாபாரிகளுக்கும் சொல்லத்தக்க அளவில் வியாபாரம் நடந்து இருக்கிறது.

சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு தீபாவளிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டன. இந்த ஆண்டு பல லட்சம் கோடி அளவில் வணிகம் நடைபெற்று இருக்கிறது.

தற்போது கரூர் பைபாஸ் ரோடு மிகப்பெரிய வணிக சாலையாக மாறியிருக்கிறது. தீபாவளிக்கு முந்தைய நாள் கரூர் பைபாஸ் ரோட்டின் இருபுறங்களிலும் மக்கள் கூட்டம் பெருமளவில் காணப்பட்டன. தில்லைநகரிலும் தீபாவளி வியாபாரம் படுஜோர் தான். இப்படி திருச்சி மாநகர் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு கடைகளிலும் இந்த ஆண்டு தீபாவளி வியாபாரம் சொல்லத்தக்க அளவிற்கு நடைபெற்றிருக்கிறது.

இந்த ஆண்டு தீபாவளி வியாபாரத்தில் கண்ட சுவாரசியம் என்னவென்றால் 2000 ரூபாய் நோட்டை பெரும்பான்மையான வியாபாரிகள் கண்ணால் கூட பார்க்கவில்லை, முழுக்க முழுக்க 500, 100, 50 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் காணப்பட்டன.

ஜவுளி மற்றும் பிற பொருட்கள் விற்பனை நல்லபடியாக நடந்தது என்றாலும் பட்டாசு வியாபாரம் திருச்சியில் குறைந்த போனது. கடைகள் குறைவாக அனுமதிக்கப்பட்டதால் ஒவ்வொரு கடைகளுக்கும் வியாபாரம் என்பது நன்றாகவே இருந்தது. அரசு அனைத்து கடைகளுக்கும் அனுமதி வழங்கி இருக்கும் பட்சத்தில் பட்டாசு தொழிலில் முதலீடு செய்தவர்கள் மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்து இருப்பார்கள்.

இந்த ஆண்டு பட்டாசு வியாபாரத்திற்கு குறைந்த கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. கடைகளுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையும் குறைவு தான். பட்டாசு விலையிலும் இந்த ஆண்டு பெருமளவில் மாற்றம் இல்லாமல் காணப்பட்டது என்றாலும் விற்பனை சுமாராகத் தான் இருந்தது. குறைவான கடைகள் அமைந்ததும் விற்பனையில் பெரிதளவில் நஷ்டம் காணப்படவில்லை.  சென்றாண்டை ஒப்பிடும் போது பட்டாசு பயன்பாடு என்பது இந்த ஆண்டு மிகக் குறைவு, அதற்கு மழையும் ஒரு முக்கிய காரணம். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்தில் ஏதாவது ஒரு இடத்தில் வெடியால் தீவிபத்து ஏற்பட்டிருக்கும். ஆனால் இந்த ஆண்டு வெடிவிபத்து ஏதும் நிகழாமல் போனதால் தீயணைப்பு துறையினருக்கு வேலை இல்லாமல் போனது.

இந்த தீபாவளி வர்த்தகம் குறித்து நகைமுரணான தகவலையும் சொல்லியாக வேண்டும். கொரோனா ஊரடங்கால் பொருளாதார மந்த நிலை நிலவியதாக கூறப்பட்ட சென்ற 2020ம் ஆண்டு தீபாவளி டாஸ்மாக் மதுபான விற்பனை திருச்சி மண்டலத்தில் 95 கோடியே 47 லட்சம் ரூபாயாக இருந்தது. ஆனால் டாஸ்மாக் பார் திறப்பதற்கான அனுமதி அளித்த பின்னரும் கூட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்ட மதுபான விற்பனை திருச்சி மண்டலத்தில் ரூ.94.86 கோடியாக மட்டுமே இருந்துள்ளது.

-இப்ராகிம்

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.