கர்நாடகா மாநிலத்திலிருந்து பெங்களூர், கோலார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரட் விற்பனைக்காக வருவதால் ஊட்டி கேரட் சரிவை சந்தித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் மலை பயிர்களாக பல்வேறு காய்கறி வகைகள் பயிரிடப்படுகிறது. கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீலகிரியின் தங்கம் என போற்றப்படும் ஊட்டி மலை கேரட் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
பல்வேறு பகுதிகளில் கேரட் விளைச்சல் நடைபெற்றாலும் நீலகிரியில் விளையக்கூடிய கேரட் நிறம், சுவை, தரம் ஆகியவை அனைத்தும் தனித்துவமானதாக கருதப்படுகிறது. இதனால் பல்வேறு வெளிச் சந்தைகளில் இதன் மதிப்பும் பல மடங்காக உயர்ந்து நிற்கிறது.


